சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட, மாநில நிர்வார்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (02.11.2025) ஆலோசனை நடத்துகிறார். இதைனைத்தொடர்ந்து, அதிமுகவின் பூத் கமிட்டி ஆக்டிவேஷன் பணிகளைத் தொடங்கி வைக்கிறார். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் அரசியல் கட்சிகளின் சார்பில் பூத் கமிட்டிகள் அமைக்கப்படுவது வழக்கம். இதில், வாக்குச்சாவடி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் தேர்தல் சமயத்தில் தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்து விட்டனரா என்பதை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.
வாக்குச்சாவடிகளுக்கு வரும் நபர்கள் குறிப்பிட்ட வாக்குச்சாவடி பகுதிக்கு உட்பட்ட நபர்கள் தானா என்பதை உறுதிப்படுத்தும் பணிகளிலும் ஈடுபடுவர். இந்த நிலையில் அதிமுக சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் கூடுதலாக, ஒரு பூத் கமிட்டிக்கு 9 பேர் இணைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு பாக கிளை உறுப்பினர்கள் என்கிற புதிய அடையாளத்தை அதிமுக கொடுத்திருக்கிறது. இந்த பாக கிளை முகவர்களின் பணி, அதிமுக தலைமையின் தேர்தல் பிரச்சார வியூகங்களை வீடு வீடாக கொண்டு சேர்ப்பது தான். வாக்குச்சாவடிகளுக்காக அதிமுக அமைத்துள்ள பாக கிளை முகவர்கள் 9 பேரில் குறைந்தபட்சம் 3 பெண்கள் இருப்பதை நிர்வாகிகள் உறுதி செய்துள்ளனர்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு வியூகங்களை வகுத்து பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது அதிமுக. சட்டமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் திமுகவுக்கு எதிராக எடுத்த பிரச்சனைகளை மையப்படுத்தி ஏராளமான பிரச்சார முன்னெடுப்புகள் துவங்கப்பட திட்டமிட்டப்பட்டுள்ளன. இந்த கிளை பாக முகவர்களை ஒருங்கிணைக்கும் பணியை அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி மேற்கொள்ள உள்ளது. அதிமுகவின் தேர்தல் பிரச்சார வியூகங்களை எந்த வடிவத்தில் எப்படி வீடு வீடாக கொண்டு சேர்ப்பது என்கிற பயிற்சியை தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்தவர்கள் வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட அந்த 9 பாக கிளை முகவர்களுக்கு வழங்க உள்ளனர்.
பாக முகவர்களை ஒருங்கிணைப்பது எப்படி அவர்களிடம் எடுத்துரைத்து அவர்கள் மூலமாக அதிமுகவின் பிரச்சாரத்தை வீடு வீடாக கொண்டு சேர்ப்பது எப்படி என்று முதலில் தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்தவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியை தான் 'பூத் கமிட்டி ஆக்டிவேஷன்' என்று அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி கூறுகிறது. இந்த ஆக்டிவேஷன் பணிகளை இன்று தொடங்கி வைக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. என் வாக்குச்சாவடி எனும் பயிற்சியை சமீபத்தில் திமுக நிர்வாகிகளுக்கு மாமல்லபுரத்தில் கொடுத்தது திமுக தலைமை. அதனைப் பார்த்து அதிமுகவும் பாக முகவர்களுக்கான பயிற்சியை மேற்கொள்கிறது.
Follow Us