தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூரில் எடப்பாடி பழனிசாமி இன்று (23.08.2025) பரப்புரை மேற்கொண்டார். 

Advertisment

அப்போது அவர் பேசுகையில், “காவல்துறை எங்கே போய் மக்களைப் பாதுகாக்கப் போகிறது. உண்மைதானே?. தமிழ்நாட்டில் கடந்த ஆறு மாதத்தில் ஆறு காவலர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். காவலருக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலை வருவதற்கு காரணம் இந்த அரசாங்கம், செயலற்ற அரசாங்கமாக இருக்கின்ற காரணத்தினால்தான் இந்த நிலைமை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அதோடு இந்தப் பகுதியைச் சேர்ந்த அமைச்சர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர். அதிமுக ஆட்சியில் கல்வி கற்போரின் எண்ணிக்கை உயர்வதற்காக நாங்கள் பாடுபட்டோம். ஆரம்பப் பள்ளிகளை அதிகமாகத் திறந்தோம். அதைத் தரம் அதை தரம் உயர்த்தி நடுநிலைப் பள்ளியாக்கினோம். மேலும் அதனை தரம் உயர்த்தி உயர்நிலைப் பள்ளி ஆக்கினோம்.

இப்படி கிராமத்திலிருந்து நகரம் வரை ஏழை மக்கள் அதிகமாக வசிக்கின்ற பகுதியில் அவர்களுடைய குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்ற அடிப்படையில் பள்ளிகளை எல்லாம் தரம் உயர்த்தினோம். இந்தத் தொகுதியுடைய அமைச்சர் அண்மையில் சட்டமன்றத்தில் பேசுகிறார், ‘அதிமுக ஆட்சியில் எந்த விதியும் பின்பற்றாமல் மேல்நிலைப் பள்ளிகள் அதிகமாகத் திறக்கப்பட்டு விட்டது’ என்று குறிப்பிடுகின்றார். பள்ளிகளை திறப்பது தப்பா?. தப்புங்களா?. மக்களுடைய தேவை, மாணவர்களுடைய தேவை, பெற்றோர்கள் எங்களுடைய குழந்தைகள் அந்தப் பகுதியிலே படிக்க வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். 

அந்த அடிப்படையில் அதிமுக அரசு கல்வி கற்போரின் எண்ணிக்கையை உயர்த்தப்பட வேண்டும். அதைவிட மேல்நிலைப் பள்ளிகள் அதிகரிக்கின்ற போது அங்கே இருக்கின்ற மாணவர்கள் அதிக அளவில் படித்து பட்டப்படிப்புக்குப் போக முடியும். வேலைக்குப் போக முடியும். அப்படி ஏழை மக்கள் நிறைந்த பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அதிமுக ஆட்சியில் மேல்நிலைப் பள்ளிகள் அதிகமாக திறக்கப்பட்டது. ஆனால் இங்கே இருக்கின்ற இந்த தொகுதியுடைய அமைச்சர் இன்றைக்கு எந்தவித விதிகளும் பின்பற்றாமல் அந்த ஆட்சியாளர்கள் இஷ்டத்துக்கு மேல்நிலைப் பள்ளி திறக்கப்பட்டது என்ற ஒரு செய்தியைச் சட்டமன்றத்தில் பதிவு செய்து வைத்துள்ளார்” எனப் பேசினார்.