தமிழக சட்டப்பேரவையின் 4ஆம் நாள் கூட்ட நிகழ்வுகள் இன்று (17.10.2025) காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாகத் தமிழகத்தைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் இருமல் மருந்து குடித்து 25 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாகச் சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேரவையில் பதிலளித்துப் பேசினார்.
இதனையடுத்து சட்டமன்ற வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், “இந்த நிறுவனம் ஏற்கனவே பலமுறை தவறு செய்திருக்கிறது. அந்தத் தவற்றைப் பலமுறை அரசு மருத்துவக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை செய்து கண்டுபிடித்து நீதிமன்றத்தின் மூலமாக அபராதம் மற்றும் சிறைத் தண்டனையும் கொடுக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது அரசின் அலட்சியத்தின் காரணமாக 25 பச்சிளம் குழந்தைகள் இறந்திருக்கின்றது. 20 24ஆம் ஆண்டு இந்த இருமல் மருந்து தயாரிக்கின்ற கம்பெனிக்கு எந்த சோதனையும் மேற்கொள்ளவில்லை. 2025ஆம் ஆண்டும் திராவிட முன்னேற்றக் கழக அரசு, சுகாதாரத்துறை இந்த மருந்து தயாரிக்கின்ற கம்பெனியில் எந்தவித சோதனையும் மேற்கொள்ளவில்லை.
அதாவது 2024வது ஆண்டும் சோதனையை மேற்கொள்ளவில்லை. 25ஆம் ஆண்டும் சோதனை மேற்கொள்ளவில்லை. எதற்காகச் சொல்கிறேன் என்று சொன்னால் இந்த நிறுவனம் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டிருக்கின்றது. அதனால் சோதனை செய்கின்ற போதெல்லாம் மருந்து தயாரிப்பிலே குறை கண்டுபிடிக்கப்பட்டு அதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. அப்படி இருக்கின்ற போது இந்த அரசு எச்சரிக்கையோடு இந்த மருந்து தயாரிக்கின்ற கம்பெனியை கண்காணித்திருக்க வேண்டும். ஆனால் சுகாதாரத்துறை அமைச்சர் ஏதோ பேசுகிறார். ஏதோதோ விளக்கத்தைக் கொடுக்கிறார். ஆனால் 2024ஆம் ஆண்டு இருமல் மருந்து தயாரிக்கின்ற கம்பெனியில் ஏன் சோதனை செய்யவில்லை?.
2025ஆம் ஆண்டு இந்த அரசு இருமல் மருந்து தயாரிக்கின்ற கம்பெனியில் ஏன் சோதனை செய்யவில்லை?. இந்த 2 ஆண்டுகள் தொடர்ந்து சோதனை செய்யாத காரணத்தினால் தான் இருமல் மருந்து தயாரிக்கின்ற கம்பெனியில் பல்வேறு வேதியியல் பொருட்கள் கலந்து இந்த மருந்தைத் தயாரித்த காரணத்தினால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கின்றது. ஆகவே இந்த அரசினுடைய அலட்சியத்தின் காரணம் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.