அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கருத்துக்கு பிறகு அதிமுகவில் புதிய புயல் வீச தொடங்கியுள்ளது. நேற்று எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட டி.டி.வி.தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை சேர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பே இல்லை என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசுகையில், ''எடப்பாடி பழனிசாமி முன்னுக்கு பின் முரணாகப் பேசுவது அவர் தோல்வி பயத்தில் இருப்பதின் வெளிப்பாடாக தெரிகிறது. உறுதியாக இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கப்படுவார். அவருடன் கூட்டணியில் உள்ளவர்கள் தான் யோசிக்க வேண்டும். தமிழ்நாடு மக்கள் உறுதியாக பழனிசாமியை பொதுமக்கள் புறக்கணிப்பார்கள்.
நேற்று பேசும்போது எடப்பாடி பழனிசாமி சொல்கிறார் 'நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் தன்மானம் தான் முக்கியம்' என பேசுகிறார். பின் எதற்கு டெல்லியில் போய் ஆதரவு கேட்டார். அதற்காக அவசியம் என்ன? மார்ச் மாதம் டெல்லிக்கு போனாரு டெல்லியில் உள்ள தலைமைக் கழக கட்டிடத்தை பார்ப்பதற்காக செல்கிறேன் என்று சொல்லிவிட்டு ஆறு கார்கள் மாறி போய் அமித்ஷாவை பார்த்துவிட்டு வந்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கிய காலத்தில் திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. அப்பொழுது எடப்பாடி பழனிசாமியை காப்பாற்றியது பாஜக அல்ல சட்டமன்ற உறுப்பினர்கள் 122 பேர். அவர்களில் 18 பேர் பழனிசாமியின் செயல்பாடு சரி இல்லை என்று அன்று முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டி ஆளுநரிடம் மனு கொடுத்தார்கள். அவர்கள் கவிழ்க்க வேண்டும் எனச் செல்லவில்லை. பொய் மூட்டை பழனிசாமி ஜெயலலிதாவின் ஆட்சி முறையில் இருந்து விலகிச் செல்வதால் தான் அந்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரிடம் மனு கொடுத்தார்கள்.
எங்களுடைய சித்தி பெங்களூரு சிறைக்கு போவதற்கு முன்னாடி கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவு செய்த பிறகு முன்னாடியே நான்தான் சிஎம் என சொல்லி விடாதீர்கள் நிறைய பேர் கையெழுத்து போட மாட்டார்கள். கையெழுத்து வாங்கிக்கொண்டு பின்னர் அறிவியுங்கள் என்று சொன்னது இதே எடப்பாடி பழனிசாமி. சசிகலா சிறைக்கு சென்றதற்குப் பிறகு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடந்த பொழுது பழனிசாமி முதலமைச்சர் என்றால் நாங்கள் இருக்க மாட்டோம் என்று செம்மலை எல்லாம் தாண்டி பிடித்து ஓடினார். இருப்பினும் எல்லோரும் எடப்பாடிக்கு வாக்களிக்க யார் காரணம் என்றும் உங்களுக்கு தெரியும். நன்றிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு சம்பந்தம் இல்லை'' என்றார்.