திமுகவில் உழைத்தவர்கள் எல்லாம் ஓரங்கட்டப்படுகிறார்கள். அதிமுகவில் இருந்து சென்றவர்கள் நல்ல இலாகாக்களை வாங்கி செழிப்பாக இருக்கிறார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சித்துள்ளார். 

Advertisment

மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்று சுற்றுபயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி, திருவண்ணாமலை அண்ணா சாலையில் திரண்டிருந்த திரளான மக்கள் மத்தியில் நேற்று உரையாற்றினார்.

அப்போது, “திருவண்ணாமலையில் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் நமக்கெல்லாம் ஆசி வழங்குகிறார். அந்த இறைவனின் அருளால் அடுத்த ஆண்டு அதிமுக ஆட்சி அமைவது உறுதி. அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலை தொல்லியல் துறை கைப்பற்ற முயன்றபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா உச்சநீதிமன்றம் வரை சென்று அதை மீட்டெடுத்தார்.

திமுகவில் இருக்கும் பல அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து சென்றவர்கள். அதாவது, டெபுடேஷனில் சென்றிருக்கிறார்கள். திமுகவில் ஆட்களே இல்லை; அமைச்சரவையில் 8 பேர் இருக்கிறார்கள். திமுகவில் உழைத்தவர்கள் எல்லாம் ஓரங்கட்டப்படுகிறார்கள். அதிமுகவில் இருந்து சென்றவர்கள் நல்ல இலாகாக்களை வாங்கி செழிப்பாக இருக்கிறார்கள்.

Advertisment

அதிமுக ஜனநாயகப் பூர்வமான கட்சி. கட்சிக்கு விசுவாசமாக இருந்தால், என்னைப் போல பொதுச்செயலாளராக முடியும். திமுகவில் அப்படி வர முடியுமா? இங்கிருந்து இடம்பெயர்ந்து சென்றவர்கள் மேலிடத்துக்கு கப்பம் கட்ட வேண்டும். அந்தக் காலத்தில் குறுநில மன்னர்கள் எல்லாம் பேரரசர்களுக்கு கப்பம் கட்டுவது போல, கப்பம் கட்டினால் மட்டுமே அமைச்சர் பதவி என்று வண்டி ஓடிக்கொண்டிருக்கும். கப்பம் கட்டவில்லை என்றால், கட் பண்ணிவிடுவார்கள்.

உழைத்தால் அதிமுகவில் முதல்வராகலாம். திமுகவில் கலைஞர் குடும்பத்தைத் தவிர வேறு யாரும் பதவிக்கு வர முடியாது. முக்கியமான மூன்று பதவிகளையும் குடும்பமே எடுத்துக்கொண்டது. மற்றவர்கள் எல்லாம் குடும்பத்துக்கு ஊழியம் செய்துகொண்டே இருக்க வேண்டும். அப்படிப்பட்ட கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா? எம்ஜிஆர்  சிலருக்கு பச்சை குத்திவிட்டார்; இப்போதுதான் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. தனக்குப் பின்னாலும் அவர்கள் இந்த இயக்கத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அப்படி அடையாளப்படுத்தினார்.யாரை தீய சக்தி என்று எம்ஜிஆர் சொன்னாரோ, அவரிடம் போய் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் அதிமுகவைத் தொடங்கினார். அப்படி அதிமுகவில் அடையாளம் பெற்று, திமுகவில் போய் வளமாக, செழிப்பாக இருக்கிறார்கள். இருக்கட்டும், வாழ்த்துக்கள்.

எனக்கு யாரையும் பழிவாங்கும் நோக்கமில்லை. அப்படி இருந்திருந்தால், நான் நான்கு ஆண்டுகள் முதல்வராக இருந்தபோது வழக்கு தொடுத்திருந்தால், இன்று பலர் மந்திரியாக இருந்திருக்க மாட்டார்கள். அனைவரும் வேறொரு இடத்தில் இருந்திருப்பார்கள். அதிமுக அப்படியான வேலையை ஒருபோதும் செய்யாது. மக்களுக்கு சேவை செய்வதற்குத்தான் கட்சி தொடங்கப்பட்டது. மக்களுக்குத் தேவையானதைச் செய்ததால் சிறப்பான ஆட்சி கொடுத்தோம்.

Advertisment

2017-ல் வறட்சி, பின்னர் கஜா புயல், அதன்பிறகு கொரோனா என இக்கட்டான நிலை இருந்தபோதும், விலைவாசி உயரவில்லை; திறமையாக நிர்வாகம் செய்து பல உயிர்களைக் காப்பாற்றினோம். இன்று எந்தப் பிரச்சினைகளும் இல்லை. ஆனாலும், விலைவாசி உயர்ந்துவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மின்கட்டணம் 67% உயர்ந்தது; வரிகளும் உயர்ந்துவிட்டன.

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 525 அறிவிப்புகள் வெளியிட்டனர். அதில் 98% நிறைவேறியதாகச் சொல்கிறார்கள்; ஆனால், எதுவும் நிறைவேறவில்லை. 100 நாள் வேலைத்திட்டம் குறித்த அறிவிப்பு நிறைவேறவில்லை. திருவண்ணாமலை மாநகராட்சியில் 18 பஞ்சாயத்துகளை இணைத்துவிட்டதால், 100 நாள் வேலைத்திட்டத்தை மூடிவிட்டனர்.

இந்தியாவிலேயே சூப்பர் முதல்வராம் ஸ்டாலின்; எதில் என்றால், கடன் வாங்குவதில் தான். இந்தக் கடன் எல்லாம் நீங்கள்தான் கட்ட வேண்டும். 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் கடன்; ஓட்டுப் போட்ட மக்களுக்கு கடனைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். அரசு காலியிடங்களை ஐந்தரை லட்சம் நிரப்பப்படும் என்றார்; ஆனால், வெறுமனே 50 ஆயிரம் மட்டுமே நிரப்பினார். அத்தனையும் பொய். பழைய ஓய்வூதியத் திட்டம் கொடுப்போம் என்றார்; இப்போது பட்டை நாமம் போட்டுவிட்டார். அவர்களும் போராடிக் களைத்துவிட்டனர். ஆக, படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் பட்டை நாமம் போட்டுவிட்டார் ஸ்டாலின்.

சட்டம் ஒழுங்கு எந்தளவு மோசமாக இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். வணிகர்கள், விவசாயிகள் எல்லாம் போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்தச் சொன்னார்கள். நானும் அதைப் பலமுறை சொன்னேன். நடவடிக்கை இல்லாததால், பலர் போதைக்கு அடிமையாகிவிட்டனர். ‘போதையின் பாதையில் செல்லாதீர்கள்’ என்று இப்போது சொல்கிறார் ஸ்டாலின்.

குற்றவாளிகள் போலீஸைக் கண்டு பயப்படுவதில்லை. ஆறு மாதத்தில் ஆறு காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இனிமேல் ராணுவம்தான் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற சூழல் உருவாகிவிட்டது. திமுகவினர் போலீஸைப் பணி செய்ய விடுவதில்லை. சட்டம் ஒழுங்கில் சிறப்பான ஆட்சி என்று நானே டெல்லிக்குச் சென்று விருது வாங்கினேன்.

இப்போது காவல்துறை முழுக்க முழுக்க திமுக நிர்வாகிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால்தான் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்கிறது. சிறுமி முதல் முதியோர் வரை பாதுகாப்பில்லை. திறமையில்லாத முதல்வர் ஆள்கிறார். சாவி கொடுத்தால் கை தட்டும் பொம்மை போல இருக்கிறார் ஸ்டாலின். அதிகாரிகளுக்கு முழு அதிகாரத்தைக் கொடுக்க வேண்டும்.

நான் முதல்வராக இருந்தபோது இருந்த அதிகாரிகள்தான் இப்போதும் உள்ளனர்; அப்போது சுதந்திரம் கொடுத்தோம், சிறப்பாகச் செயல்பட்டனர். திமுகவினர் என்னென்ன பிரச்சினைகளைக் கொண்டுவருவார்களோ என்ற அச்சத்தில் கண் விழிப்பதாக ஸ்டாலினே சொல்கிறார். முதல்வர் எதுவும் செய்ய மாட்டார் என்று புகுந்து விளையாடுகிறார்கள். நடப்பதை எல்லாம் நாங்கள் கவனிக்கிறோம்; அதிமுக ஆட்சி வந்தவுடன் இதற்கு ஒரு முடிவு கட்டப்படும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ என்று ஒரு திட்டத்தைப் புதிதாகத் தொடங்கியிருக்கிறார். பெயர் வைப்பதில் ஸ்டாலினுக்கு இணை யாருமில்லை. 46 பிரச்சினைகள் மக்களுக்கு இருப்பதாக நான்கு ஆண்டுகள் கழித்துச் சொல்கிறார். அதை எல்லாம் 45 நாளில் தீர்த்துவைப்பாராம். இதைச் செய்ய முடியுமா? நான்கு ஆண்டுகளாக நிறைவேற்ற முடியாதவற்றை ஏழு மாதத்தில் நிறைவேற்ற முடியுமா?

இப்படித்தான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ‘புகார் பெட்டி’ திட்டம் கொண்டுவந்து மனுக்கள் வாங்கினார். அந்த மனுக்கள் எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை. மக்கள் அப்போதே மனுக்களைக் கொடுத்துவிட்டனர். அதே பிரச்சினைகளைத்தான் இப்போதும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இப்படி மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள் திமுகவினர். ஆசையைத் தூண்டி ஓட்டுகளைப் பெற இந்தத் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

அப்புறம், ‘நலன் காக்கும் ஸ்டாலின்’; முதலில் உங்கள் உடம்பை நல்லாப் பார்த்துக்கொள்ளுங்கள். மக்கள் தங்கள் உடம்பை நல்லாத் தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவருக்கு உடம்பு சரியில்லாதபோதுதான் இதுபற்றி ஞாபகம் வந்திருக்கிறது.

அதிமுக ஆட்சியில் 15 லட்சம் மருத்துவ முகாம்கள் நடத்தினோம், 416 நடமாடும் மருத்துவக் குழுக்கள், 17 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் கொண்டுவந்தோம். கலைக்கல்லூரிகள், பாலிடெக்னிக் எனப் பல கல்லூரிகளைத் திறந்து உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்தினோம். அதிமுக அரசு சிறந்த நிர்வாகம் என்பதற்குப் பல விருதுகளைப் பெற்றோம். இரண்டு கைகளும் இல்லாதவருக்கு புதிய கைகள் கொடுத்தோம். திமுக ஆட்சியில் கையோடு போனால் கை இல்லாமலும், உயிரோடு போனால் உயிர் இல்லாமலும் தான் வருகிறார்கள்.

திமுக எம்எல்ஏ நடத்தும் மருத்துவமனையில் கிட்னியைத் திருடி விற்கிறார்கள். குறைந்த பணம் கொடுத்து கிட்னியை எடுக்கிறார்கள். இதெல்லாம் வெளியில் கசிந்ததும், திமுக அரசே திமுக எம்எல்ஏ மருத்துவமனையில் சோதனை செய்து, உறுப்பு மாற்று சிகிச்சையை மட்டும் ரத்து செய்திருக்கிறது. ஆனால், இன்று வரை அவர்களைக் கைது செய்யவில்லை. யாராவது தவறி திமுகவினர் மருத்துவமனைக்குப் போய்விடாதீர்கள்; உள்ளே இருக்கும் உறுப்புகளைக் கழட்டிவிடுவார்கள்.

அப்படியே யாராவது போயிருந்தால், ஸ்கேன் செய்து உடலில் உறுப்புகள் எல்லாம் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். அந்த எம்எல்ஏ பேட்டி கொடுத்திருக்கிறார். ‘250-க்கும் மேலாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்திருக்கிறேன்; அப்படிச் செய்யவில்லை என்றால், நான் எப்படி உயர்ரக கார் வாங்கியிருக்க முடியும்?’ என்று திமிராகப் பேசுகிறார். இது எவ்வளவு பெரிய குற்றம்? அந்தக் குற்றச் செயலை நியாயப்படுத்திப் பேசுகிறார். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இது முழுமையாக விசாரிக்கப்படும்.

மருத்துவம், குடிநீர், வீடு, கல்வி, தடையில்லா மின்சாரம், நல்ல சாலை, உள்கட்டமைப்பு வசதி, பாலங்கள், தொழிற்சாலை, வேலைவாய்ப்பு என எல்லாவற்றையும் அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டது அதிமுக அரசு. திமுக அரசோ எல்லாவற்றையும் சீரழித்திருக்கிறது.

திமுக ஆட்சியில், அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தைச் சுற்றி கான்கிரீட் சாலை அமைப்பதாகச் சொல்லி, தேரடி வீதி, மாட வீதி ஆகியவற்றைச் சிமென்ட் சாலையாக மாற்றுவதற்காகத் தோண்டிப்போட்டு, இரண்டு ஆண்டுகளாகக் கிடப்பில் வைத்திருக்கிறார்கள். இதனால் வியாபாரிகளுக்கும், பக்தர்களுக்கும் பாதிப்பு. வாகனங்கள் செல்ல முடியவில்லை. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விரைவாகச் சிமென்ட் சாலை அமைக்கப்படும்.

அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில், அதிமுக ஆட்சியில் திருக்குடமுழுக்கு சிறப்பாக நடந்தது. கிரிவலப் பாதையை சுமார் 64 கோடியில் மேம்படுத்தினோம். யாத்ரி நிவாஸ், அறிவியல் பூங்கா, மகப்பேறு சிகிச்சைப் பிரிவு, ஆயுஷ் மருத்துவமனை, வராக நதி, கீழ் செய்யாறு நதிகளில் பணிகள், புறவழிச் சாலை, தடுப்பணைகள், மூன்று அம்மா மினி கிளினிக்குகள், 2100 பேருக்கு தாலிக்குத் தங்கம் கொடுத்தோம். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை ஸ்டிக்கர் ஒட்டி திறந்திருக்கிறார்கள்.

திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனையை நவீனப்படுத்துவோம் என்று சொன்னார்கள்; செய்யவில்லை. உணவுப் பொருள் பாதுகாப்பு கிடங்கு அமைக்கப்படும் என்று சொன்னார்கள்; அமைக்கவில்லை. தொழிற்பேட்டை அமைப்போம் என்று சொன்னதைச் செய்யவில்லை. நெல் ஆராய்ச்சி மையம் அமைக்கவில்லை; கால்நடை மருத்துவமனை அமைக்கவில்லை. இப்படி, கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றாத அரசு திமுக அரசு…” என்று காரசாரமாகப் பேசி முடித்தார்.