தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார்.
அதன்படி, கடந்த வாரம் திருச்சி மற்றும் அரியலூரில் மக்கள் மத்தியில் விஜய் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, சனிக்கிழமையான நேற்று (20.09.2025) நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இத்தகைய சூழலில், தாம் தமிழகம் முழுவதும் தனது பிரச்சாரப் பயணத்தை அக்டோபர் 11ஆம் தேதி மதுரையில் இருந்து தொடங்குகிறார் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். இந்தத் தேர்தல் பிரச்சாரப் பயணத்தைத் துவக்கி வைக்க அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியைச் சேலத்தில் சந்தித்து நயினார் நாகேந்திரன் இன்று (21.09.2025) அழைப்பு விடுத்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமியும் சம்மதம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திமுகவுக்கும், த.வெ.க.வுக்கும் இடையேதான் போட்டி என த.வெ.க. தலைவர் விஜய் பேசியிருந்தது குறித்து சேலத்தில் செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அது அவருடைய கருத்து. மக்களுடைய கருத்து வேறு” எனத் தெரிவித்து அங்கிருந்தவர்களுக்கு வணக்கம் வைத்துவிட்டுச் சென்றார்.