இந்திய குடியரசின் துணைத் தலைவர் தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (தே.ஜ.கூ.) வேட்பாளராக நிறுத்தியுள்ளது. தே.ஜ.கூ.வின் பலத்தை வைத்து சி.பி.ராதாகிருஷ்ணன் எளிதாக வெற்றி பெற வாய்ப்புள்ளது. இருப்பினும், பாஜக வேட்பாளரை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து அக்கூட்டணியின் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், தமிழர் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதால் அவரை ஆதரிக்க வேண்டும் என்று 'இந்தியா' கூட்டணியில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக, ராஜ்நாத் சிங் ஸ்டாலினுடன் 20 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடியுள்ளார். மேலும், தமிழர் ஒருவர் துணை ஜனாதிபதியாகும் வாய்ப்பு அமைந்துள்ளதால், அரசியல் மற்றும் கட்சி பேதமின்றி சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். திமுக கூட்டணிக் கட்சிகளையும் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்குமாறு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

பாஜக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவின் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க ஸ்டாலினை வலியுறுத்துவதால், திமுகவுக்கு புதிய அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.