EPS request to Tamil Nadu government Relief should be provided to farmers affected by rain
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மற்றும் கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் ஏனைய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாகக் கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஒரு வார காலமாக, டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் பெருமளவு மழை நீரில் மூழ்கியுள்ளன. மேலும், கரும்பு, வாழை, வெற்றிலை போன்ற இதர பயிர்களும் மழை நீரில் மூழ்கியுள்ளன. கனமழையின் காரணமாக அப்பகுதிகளில் ஓடும் ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் சிற்றாறுகளில் தண்ணீர் அதிக அளவு சென்று கொண்டிருக்கிறது. இதனால் ஒவ்வொரு வயல்வெளியும் ஏரி போலவும், கடல் போலவும் காட்சியளிப்பது வேதனைக்குரியதாக உள்ளது. குறிப்பாக, திமுக ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு, பருவ மழை ஆரம்பிக்கும் முன்பே வாய்க்கால்கள் மற்றும் வரத்துக் கால்வாய்களை தூர் வாராததே தற்போதைய நிலைக்குக் காரணம்.
பருவ மழை ஆரம்பிக்கும் முன்பே வாய்க்கால்களை தூர்வார நான் பலமுறை வலியுறுத்தியும் வாய்க்கால்கள் தூர் வாரப்படவில்லை. ஆகாயத்தாமரை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்நிலைகளை முறையாக தூர் வாருவதற்கான நடவடிக்கைகளை திமுக அரசின் அதிகாரிகள் எடுக்காததால், மழைநீர் செல்ல வழியின்றி வயல்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் ஒருசில நாட்களே பெய்த மழையால், தண்ணீர் வடியாமல் வயல்களில் தேங்கியுள்ளன. பாடுபட்டு விளைவித்த நெற்பயிர்கள் வெள்ளத்தால் சேதமடைந்ததைப் பார்த்து வேளாண் பெருங்குடி மக்கள் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர். இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் முன்கூட்டியே வானிலை நிலவரம் மற்றும் மழை பொழிவு குறித்து அறிவித்த பின்பும், வயல்வெளிகளில் தேங்கும் நீரை மடை மாற்றி வெளியே அனுப்ப எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் திமுக அரசின் வேளாண்மைத் துறை எடுக்காதது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
டெல்டா மாவட்டங்களில் மட்டும் சுமார் 3 லட்சம் ஏக்கருக்கு மேல் மழைநீர் சூழ்ந்து நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. இந்த நெற்பயிர்களுக்கான காப்பீடு முறையாக செய்யப்பட்டதா? என்று தெரியவில்லை. அதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் வெற்றிலைக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. காப்பீடு செய்யப்பட்டிருந்தால் விவசாயிகளுக்குரிய நஷ்ட ஈட்டை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து உடனடியாக பெற்றுத் தர திமுக அரசை வலியுறுத்துகிறேன். தமிழகத்தில் பல மாவட்டங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மழை நீரால் மூழ்கி பாதிப்படைந்துள்ளது. அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று தண்ணீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்களைக் கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணமாகவும், பாதிப்படைந்துள்ள இதர பயிர்களுக்கு உரிய நிவாரணமும் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Follow Us