தமிழக சட்டப்பேரவையில் இன்று கிட்னி திருட்டு தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர், ‘’நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது.
ஏழை மக்களின் கிட்னியை திருடிய மருத்துவமனை மீது தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசின் விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் பாதிக்கப்பட்டோரை விசாரித்துள்ளனர். கிட்னி முறைகேடு நடந்துள்ளதை விசாரணை குழு உறுதி செய்துள்ளது. கிட்னிக்கு பதில் கல்லீரலும் திருடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளை அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. சிறப்பு புலனாய்வு குழு உடனடியாக விசாரணையை தொடங்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.
இபிஎஸ் கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘’சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டது. அதிகாரிகள் 7 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிட்னி முறைகேடுகளைத் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும்…’’ என்றார்.
இதையடுத்து இபிஎஸ், ’’2011ல் திமுக ஆட்சி முடியும் சமயத்தில் ஒரு லட்சம் கோடி கடன் வைத்திருந்தது. திமுக ஆட்சியில் வருவாய் செலவு அதிகரித்துக்கொண்டே சென்றால் எப்படி கடனைக் குறைப்பது? மூலதனச் செலவு குறைவாகவும், வருவாய் செலவு அதிகமாகவும் திமுக ஆட்சியில் உள்ளது. கடைனைக் குறைக்க திமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட நிதி மேலாண்மைக் குழு என்ன ஆனது? குழு அமைக்கப்பட்டும் கடன் சுமை குறையவில்லை”என்று கடன் சுமை குறித்த விவாதத்தில் இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘’தமிழ்நாடு கடனில் தத்தளிப்பதாக கூறுவது தவறு.. அ.தி.மு.க. விட்டுச்சென்ற கடனுக்கு 5 ஆண்டாக வட்டி மட்டும் ரூ.1.40 லட்சம் கோடி கட்டியுள்ளோம். அ.தி.மு.க. ஆட்சியில் 128 சதவீத அளவிற்கு கடன் அதிகரித்தது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் கடந்த 4 ஆண்டில் 93 சதவீதம் தான் கடன் அதிகரித்துள்ளது. அ.தி.மு.க, ஒன்றிய அரசிடம் பேசி தமிழக அரசுக்கு நிதி ஒதுக்க, கடன் சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்கலாமே’’ என்று பதில் அளித்தார்.இதற்கிடையே, தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளில் முதல்வர், அமைச்சர்கள் அளிக்கும் பதில்கள் மட்டுமே காட்டப்படுகின்றன, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.