EPS questioned What is the need for the Revenue Secretary to give an interview to the media? at Karur incident;
கரூரில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் கரூரில் நடந்தது என்ன என்பது குறித்து வீடியோ வெளியிட்டு ஆதாரத்துடன் தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலர் செந்தில்குளார் மற்றும் ஊடகத்துறை செயலர் அமுதா ஐ.ஏ.எஸ் மற்றும் டிஜிபி ஆகியோர் விளக்கமளித்தனர்.
இந்த நிலையில், செயலாளர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன என்று அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘கரூர் துயரச்சம்பவத்துக்குப் பிறகு ஸ்டாலின் அரசு முற்றிலும் சீர்குலைந்த நிலையில் உள்ளது. மக்களைப் பாதுகாப்பதில் ஏற்பட்ட தங்களின் தோல்வியை விரைவாக மறைத்து, இந்த விபத்திற்கான காரணத்தை பிறர் மீது சுமத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகத் தெரிகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் போன்றோர் இருக்கும்போது, வருவாய் செயலாளர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன?
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஏற்கனவே ஒரு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு, அது பணியைத் தொடங்கிய நிலையில், அரசின் பேச்சாளர் என்ற வகையிலும் கூட ஒரு செயலாளர் இதுபோன்ற விஷயங்களைப் பேசுவதன் அவசியம் என்ன? இது, அந்தக் குழுவின் கருத்துக்களை பாதிக்கும் வகையிலும், நீதியிலான அவமதிப்பாகவும் கருதப்பட வேண்டியதல்லவா? ஆனால் ஸ்டாலின் அரசுக்கு எந்த விதமான நெறிமுறைகளும், ஒழுக்கமும் இல்லை. அவர்களுக்கு முக்கியமானது இந்த 41 அப்பாவி மக்கள் உயிரிழந்த இந்தக் கொடூரச் சம்பவத்துக்கான பொறுப்பில் இருந்து தப்பித்துக் கொள்வதுதான். மேலும் உண்மை சம்பவத்தை மறைப்பதற்கு இப்படிப்பட்ட நாடகத்தை இந்த அரசு அரங்கேற்றி இருப்பது மக்களிடேயே மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.