அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அவருடைய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு 4 நாள் சுற்றுப்பயணமாகத் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்திற்கு நேற்று (18.07.2025) எடப்பாடி பழனிசாமி சென்றார்.
அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி இன்று (19-07-25) அவுரி திடலில் மக்கள் முன்பு அவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “நாகப்பட்டினம் மாவட்டத்தில் 50 மாதத்தில் புதிய திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்ததா?. ஆட்சியில் அமரவைத்த பிறகு மக்களை பற்றி சிந்திக்காம வீட்டு மக்களை பற்றி முதல்வர் சிந்திக்கிறார். உங்களுடைய பூமியை பாதுகாத்தது அதிமுக அரசு தான். இதிலிருந்து எந்த அரசாங்க, மக்களுக்கு நன்மை செய்கிறது, எந்த அரசாங்கம் விவசாய மற்றும் தொழிலாளிகளுக்கு பாதுகாப்பான அரசாங்கம் என்பதை மக்களாகிய நீங்கள் எண்ணிப் பாருங்கள்.
இங்கு இருக்கும் டெல்டா விவசாயிகள் இந்த பூமியை நம்பித்தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகாவிடம் கெஞ்சி கூத்தாடி நீரை பெற வேண்டிய நிலை மாறி நிரந்தமாக நமக்கு கிடைக்க வேண்டிய பங்கு நீர் கர்நாடகா அரசு தந்தே ஆக வேண்டும். அதன் அடிப்படையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில் உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தினார்கள். துர்திஷ்டவசமாக அவர் மறைந்துவிட்டார். அவருடைய மறைவுக்கு பிறகு அவரது வழையிலே செயல்பட்டு உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி விவசாய வயிற்றில் பால் வாக்கின்ற விதமாக ஆண்டுக்கு இவ்வளவு டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற நல்ல தீர்ப்பை அதிமுக அரசு பெற்று தந்தது. இப்படி விவசாயிகளை பாதுகாப்பதற்காக அதிமுக அரசு செயல்பட்டது.
இன்றைக்கு ஒவ்வொரு ஆண்டும் பருவமலை பெய்கின்ற பொழுது விவசாயம் பாதிக்கிறது. விவசாய தொழிலாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். அதனால், நான் முதலமைச்சராக இருந்த பொழுது பிரதமரை சந்தித்து இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண்கின்ற விதமாக கோதாவரி - காவரி இணைப்பு செயல்படுத்துங்கள் என்று சொன்னேன். அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டால் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட பட்டத்தில் நாம் நெற்பயில் நடவு செய்யலாம். அதையும் கொண்டு வந்தேன். ஆனால், இந்த அரசாங்கம் செயல்படுத்தவில்லை. ஏனென்றால், திமுக தேர்தல் அறிக்கையில் அவர்கள் சொல்லவில்லை. அதனால் அவர்கள் அதற்கு முயற்சி எடுக்கவில்லை. ஆனால் திமுக அரசாங்கம் இருக்கின்ற பொழுது அதற்காக கடுமையான முயற்சி எடுத்தோம். இன்றைக்கு அது செயல்பாட்டுக்கு வருகின்ற காலகட்டத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதை கிடப்பில் போட்டுவிட்டார்கள். இப்படிப்பட்ட ஆட்சி தேவையா? விவசாய விரோத ஆட்சி வேண்டுமா?” என்று ஆவேசமாகப் பேசினார்.