திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில்  திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் அவரது 2 மகன்கள் பணியாற்றி வந்தனர். இத்தகைய சூழலில் தான் இன்று (06.08.2025)) அதிகாலை தோட்டத்தில் 3 பேரும் குடிபோதையில் ரகளை செய்வதாகவும், அவரது மகன்கள் தந்தையைத் தாக்குவதாகவும் குடிமங்கலம் காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த குடிமங்கலம் காவல்நிலைய சிறப்பு எஸ்.ஐ. சண்முகசுந்தரம் மற்றும் அவரது ஓட்டுநர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கு ரகளையில்  ஈடுபட்டுக் கொண்டிருந்த மூவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, “எங்களது குடும்ப பிரச்சனையில் தலையிட நீங்கள் யார்?” என ஒருமையில் கூறி இரு மகன்களும் சிறப்பு எஸ்.ஐ.  சண்முகசுந்தரத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சிறப்பு எஸ்.ஐ .சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்றொரு புறம் கோவை மாவட்டம் பெரிய கடை வீதியில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று (05.08.2025) இரவு இந்த காவல் நிலையத்திற்குள் நுழைந்த நபர் ஒருவர் காவல் நிலைய கட்டத்தில் உள்ள முதல் மாடிக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் அங்கிருந்த கிரைம் பிரிவு உதவி ஆய்வாளர் அறைக்குச் சென்று 11:00 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் புகாரளிக்க வந்த நபர் என்றும், அவர் மனநிலம் பாதிக்கப்பட்டவர் என்றும் என்றும் காவல்துறையின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ‘எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு?’ என கேள்வி எழுப்பி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருப்பூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறை விசாரிக்கச் சென்ற எஸ்.ஐ. சண்முகவேல் படுகொலை செய்யப்பட்டதாகவும், கோவை காவல் நிலையத்தில் எஸ்.ஐ. அறையில் ஒருவர் தூக்கிட்ட நிலையில் உயிரிழப்பு எனவும் செய்திகள் வருகின்றன. காவல் நிலையத்தில் கூட இல்லாத சட்டம் ஒழுங்கிற்கு என்ன பதில் வைத்துள்ளார் முதல்வர்மு.க. ஸ்டாலின்?. 

Advertisment

விசாரிக்க செல்லும் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்பதையும், காவல் நிலையத்திலேயே ஒருவர் தூக்கிட்டுக் கொள்ளும் அளவிற்கு அலட்சியமாக இருந்தது என்பதையும் எப்படி எடுத்துக் கொள்வது?. முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்யும் அத்தனை அரசியலும் இந்த சீர்கெட்ட சட்டம் ஒழுங்கைப் பற்றி யாரும் பேசக் கூடாது என்பதற்கான திசை திருப்பும் தந்திரம் (Diversion Tactic) மட்டுமே. ஆனால், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள், அவர்களுக்கு தேவை பாதுகாப்பான தமிழகம். மக்களைக் காக்க, தமிழகத்தை மீட்க ஒரே வழி, இந்த கையாலாகாத திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதே. மேற்கூறிய வழக்குகளில் முறையான விசாரணை நடத்திடவும், குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும்  திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.