Advertisment

“39 எம்.பிக்களை வைத்துக்கொண்டு ஏன் பிரதமரைச் சந்திக்கவில்லை?” - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி

epsnew

EPS question to CM Why didn't you meet the PM and discuss the issue of paddy moisture?

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம், திமுக அரசு விவசாயிகளை வஞ்சித்து வருவதாக அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisment

இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள். விவசாயம் பற்றி ஒன்றும் தெரியாத, துணை முதலமைச்சராக இருந்தபோது மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளித்து டெல்டா விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த முதலமைச்சர் ஸ்டாலின், துரோகத்தைப் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இருந்துகொண்டு, கொள்ளையடிக்க காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, அந்தக் கட்சி ஆட்சி செய்யும் கர்நாடகாவில் தமிழக விவசாயிகளின் எதிர்காலத்தைப் பாழாக்கும் மேகதாது அணையை கட்டுவதற்கு கூட்டு சதி செய்துகொண்டு நாடகமாடும் ஸ்டாலின், டெல்டா விவசாயிகளின் துரோகி இல்லையா ? சுய மரியாதையையும், உரிமையையும் காங்கிரசிடம் அடகு வைத்தது  ஸ்டாலின்தானே.

Advertisment

விவசாயிகள் வியர்வை சிந்தி, உழைத்து விளைவித்த நெல்லை முறையாக கொள்முதல் செய்யாமல் மழையில் நனையவிட்டு விவசாயிகள் வயிற்றில் அடித்த விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், விவசாயிகளின் துரோகி இல்லையா? நெல் ஈரப் பதத்திற்கான வரம்பை உரிய நேரத்தில் மத்திய அரசின் ஆணையைப் பெற்று உயர்த்தத் தவறிய கையாலாகாத முதலமைச்சர் ஸ்டாலின், விவசாயிகளின் துரோகி இல்லையா? டெல்டா பகுதியில் தனியார் நெல் கொள்முதல் செய்வதில்லை. விளையும் நெல் முழுவதையும் அரசுதான் கொள்முதல் செய்யும். இதுதான் பல ஆண்டுகளாக உள்ள நடைமுறை. ஒவ்வொரு ஆண்டும் நெல் பயிரிடப்படும் பரப்பு, விளைச்சல் இவற்றிற்கேற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, தேவையான நிதி, சாக்கு மற்றும் சுமை தூக்கும் பணியாளர்கள், லாரி போக்குவரத்து, சேமிப்புக் கிடங்குகள் போன்றவற்றை அமைத்து, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்புக் கிடங்குகளுக்கு செல்லத் தேவையான லாரி போக்குவரத்து போன்றவை உரிய நேரத்தில் திட்டமிட்டு நகர்வு செய்ய வேண்டியது அரசின் கடமை. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் திமுக அரசு இவற்றை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்தத் தவறிவிட்டதுதானே உண்மை.

இந்த ஆண்டு குறுவை சாகுபடியில் கொள்முதல் செய்த நெல்லை உடனடியாக சேமிப்புக் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லாததாலும், தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காததாலும், சாக்கு மற்றும் சுமை தூக்கும் பணியாளர்கள் இல்லாததாலும், லாரிக்கான வாடகை முடிவு செய்யப்படாததால், இந்த ஆண்டு டெல்டா விவசாயிகள் வியர்வை சிந்தி விளைவித்த நெல்லை, இந்த அரசு கொள்முதல் செய்ய பல நாட்களுக்குமேல் ஆனதுதானே உண்மை. இந்நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்த நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்யாததால், விவசாயிகள் தங்கள் நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே சாலையில் கொட்டி வைத்து காத்திருக்கும் அவலத்திற்கு தள்ளப்பட்டனர். அப்போது பெய்த மழையில் நெல் மூட்டைகள் நனைந்து, முளைவிட்டு, விவசாயிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்தி துரோகம் செய்தவர் முதலமைச்சர் ஸ்டாலின்தானே? இந்தக் குறைபாடுகளை சட்டசபையில் சுட்டிக்காட்டி பேசினேன். ஆனால் இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து நான் டெல்டா மாவட்டங்களுக்கு நேரில் சென்று பாதிப்புகளை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினேன். இதை அனைத்து ஊடகங்களும், பத்திரிகைகளும் விவசாயிகளின் உண்மை நிலையை எடுத்துரைத்தன. குறைகளை நிவர்த்தி செய்யத் தவறி விவசாயிகளுக்கு துரோகம் செய்தவர் முதலமைச்சர் ஸ்டாலின்தானே.

குறுவை சாகுபடி காலத்தில் மழை பெய்யும் என்பதால் ஈரப் பதம் 22% வரை இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே, எங்கள் ஆட்சியில் நாங்கள் உரியவாறு மத்திய அரசின் தளர்வுக்கு முயற்சிகள் மேற்கொண்டு விலக்கு பெற்றுவிடுவோம். ஆனால், ஸ்டாலின் இதை உரிய நேரத்தில் செய்யத் தவறியது மட்டுமல்ல, மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டதாக திசை திருப்புவது ஏன்? ‘ரெட் ஜெயண்ட்; மீது ரெய்டு வந்தவுடன் டெல்லி சென்று விமான நிலையத்தில் மத்திய நிதி அமைச்சரை சந்தித்து சமரசம் செய்த ஸ்டாலின், 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு ஏன் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து ஈரப் பதம் தளர்வு குறித்துப் பேசவில்லை. டெல்டா பகுதியில் போராடுவது போல் வேடிக்கை காட்டி, டெல்டா மக்களை ஏமாற்ற அரசியல் செய்யும் திமுக அரசு, டெல்லி சென்று சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும், அலுவலர்களையும் சந்தித்து அனுமதியை ஏன் பெறவில்லை? மத்திய அரசின் கடிதத்தில் ஈரப் பதம் பற்றி குறிப்பிடப்படவில்லை என்றால், ஏன் மத்திய அரசிடம் மறுபரீசலனை செய்யக் கோரவில்லை?

ஆட்சி அதிகாரத்தில் இருந்துகொண்டு லஞ்ச லாவண்யத்தில் ஊறித் திளைத்துவரும் திமுக அரசு தானே இதற்கெல்லாம் பொறுப்பு. தன் சொந்த பிரச்சினைகளுக்கு, டெல்லிக்கு ஒடோடிச் செல்லும் ஸ்டாலின், பொதுமக்கள் பிரச்சனையில், குறிப்பாக விவசாயப் பெருங்குடி மக்களின் பிரச்சனையில் பாராமுகம் காட்டுவது ஏன்? போராட்டம் என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி அரசியல் செய்வது ஏன் ? பொறுப்பற்ற திமுக அரசு, மக்கள் விரோத அரசு என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். திமுகவின் நோக்கம், மக்களை ஏமாற்றி தேர்தலில் வெற்றி பெற்று கொள்ளையடிப்பதுதான் என்பதை டெல்டா மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளனர். தமிழக முதலமைச்சராக உள்ள ஸ்டாலின், 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு, மத்திய அரசை வலியுறுத்தி தளர்வை பெறத் தவறியது. விவசாயிகளுக்கு செய்த துரோகமாகும். விவசாயிகளை வஞ்சிக்கும் ஸ்டாலின் மாடல் திமுக அரசிற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

edappadi palanisami eps paddy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe