Advertisment

“பாஜக-திமுக கூட்டணியின் போது சி.பி.ராதாகிருஷ்ணன் ஆர்.எஸ்.எஸ்.காரர்னு  தெரியாதா..?’’ - இ.பி.எஸ்

2

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சோளிங்கர் பகுதியில் திரண்டிருந்த மக்களிடம் 40 நிமிடங்கள் பேசினார்.

Advertisment

அப்போது அவர், “சோளிங்கர் தொகுதி கிராமங்கள் நிறைந்த பகுதி. விவசாயம், கைத்தறி, விசைத்தறி ஆகியவை பிரதான தொழில்கள். எல்லோருக்கும் தொழில் சிறக்கவும், வாழ்க்கைத் தரம் உயரவும், அதிமுக ஆட்சியில் திட்டங்கள் வழங்கினோம். திமுகவின் 51 மாத ஆட்சியில் விவசாயிகளுக்கோ, கைத்தறி நெசவாளர்களுக்கோ எந்த நன்மையும் கிடைக்கவில்லை. விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. அதிமுக ஆட்சியில் விலைவாசி உயராமல் பார்த்துக்கொண்டோம். விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை. அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது, விலைக் கட்டுப்பாட்டு நிதியாக ரூ.100 கோடி ஒதுக்கி, அண்டை மாநிலங்களில் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும் இடங்களிலிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக மக்களுக்கு வழங்கினோம்.

ஏழைகள் எப்படி வேண்டுமானாலும் கெட்டுப்போனாலும், தங்கள் குடும்பம் வாழ வேண்டும் என்று மட்டுமே திமுகவினர் பார்க்கின்றனர். அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலை அனைத்தும் உயர்ந்துவிட்டன. கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. இனி ஏழை மக்கள் வீடு கட்டவே முடியாத அளவுக்கு விலை உயர்ந்துவிட்டது. கனவில் மட்டுமே வீடு கட்ட முடியும். ஆனால், இதைப் பற்றி திமுகவுக்கு கவலையில்லை.

கைத்தறி நெசவாளர்களுக்கு, அதிமுக ஆட்சியில் 200 யூனிட் மின்சாரத்திற்கு 750 யூனிட் மானியம், பசுமை வீடுகள், கைத்தறி ஆதரவுத் திட்டம் ஆகியவற்றை வழங்கினோம். கைத்தறி துணிகள் தேக்கமடைந்தபோது, ரூ.350 கோடி மானியம் வழங்கினோம். ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கையை 2019ல் அறிவித்தோம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி நடத்தினோம். நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் நெய்யப்பட்ட துணிகளுக்கு அவ்வப்போது பணம் பட்டுவாடா செய்தோம். ஆனால், திமுக ஆட்சியில் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே பணம் கிடைக்கிறது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால், முன்பிருந்த நிலை தொடரும்.

Advertisment

கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவர்களாக வேண்டும் என்ற கனவை நனவாக்க, 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கினோம். அதன்மூலம் 2,818 பேர் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் இலவசமாக மருத்துவம் பயின்று, இப்போது மருத்துவர்களாக உள்ளனர்.

ஏழைப் பெண்களின் பொருளாதார நிலை காரணமாக திருமணம் தடைபடக் கூடாது என்பதற்காக, திருமண உதவித் திட்டத்தில் ரூ.25,000 மற்றும் ரூ.50,000 வழங்கினோம். தாலிக்குத் தங்கம் திட்டம் மூலம் ஒரு பவுன் தங்கம் வழங்கினோம். இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.75,000-ஐ தாண்டிவிட்டது. இந்தத் திட்டம் இன்று நடைமுறையில் இருந்திருந்தால், ஏழைப் பெண்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருந்திருக்கும். 6 லட்சம் பெண்களுக்கு இத்திட்டம் மூலம் உதவி செய்தோம்.

இந்தத் திட்டத்தை திமுக அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால், இத்திட்டம் தொடரும். மணப்பெண்ணுக்கு பட்டுச் சேலை, மணமகனுக்கு பட்டு வேட்டி வழங்கப்படும். ஏழை வீட்டுத் திருமணமும் பணக்கார வீட்டுத் திருமணம் போல நடைபெறும்.

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை, அதிமுக ஆட்சியில் இரண்டு முறை தள்ளுபடி செய்தோம். மொத்தம் ரூ.12,100 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. வறட்சி உள்ளிட்ட பேரிடர்களின்போது, பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளை இணைத்து, இழப்பீடு பெற்றுக் கொடுத்தோம். இந்தியாவிலேயே அதிகப்படியான இழப்பீடு பெற்றுக் கொடுத்தது அதிமுக அரசு தான். விவசாயிகள் எந்நேரமும் மோட்டாரைப் பயன்படுத்த ஏதுவாக, 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கினோம். ஆனால், இப்போது ஷிப்ட் முறையில் மின்சாரம் வழங்கப்படுவதால், இரவு நேரங்களில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால், பழைய நடைமுறை தொடரும்.

விவசாயிகளுக்காக, அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு, நீர் தேக்கப்பட்டது. இதனால் கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்கு பயன்பட்டது. ஒருபுறம் ஏரிகள் ஆழமாகின, மறுபுறம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது. எஞ்சிய 8,000 ஏரிகள் தூர்வாரப்படாமல் உள்ளன. அதிமுக ஆட்சி அமைந்தால், எந்தெந்த ஏரிகள் தூர்வாரப்பட வேண்டும் என்பதைக் கண்டறிந்து, குடிமராமத்து திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். வறட்சி உள்ளிட்ட பேரிடர்களின்போது, பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளை இணைத்து, இழப்பீடு பெற்றுக் கொடுத்தோம். விவசாயிகளுக்கு நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்குவதாக திமுக அறிவித்தது, ஆனால் கொடுக்கவில்லை.

விவசாயத் தொழிலாளர்களுக்கு, பசுமை வீடுகள், ஆடுகள், கறவை மாடுகள், கோழிகள் வழங்கினோம். உழவர் பாதுகாப்புத் திட்டம், முதியோர் உதவித் திட்டம் மூலம் லட்சக்கணக்கான முதியோருக்கு மாத உதவித்தொகை வழங்கினோம். கொரோனா காலத்தில் வருமானம் இல்லையென்றாலும், விலைவாசி உயரவில்லை. ரேஷன் கடைகளில் விலையில்லா பொருட்களை ஒரு ஆண்டு முழுவதும் வழங்கினோம்.

அதேபோல், பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கினோம். கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ‘ஆல் பாஸ்’ வழங்கினோம். கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தினோம். 2,000 அம்மா மினி கிளினிக்குகள் தமிழ்நாடு முழுவதும் தொடங்கினோம். ஆனால், திமுக அரசு இதை ரத்து செய்துவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால், 4,000 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்படும். ஏழை, பட்டியலின, மலைவாழ் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.

ஏழை, எளிய, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் விஞ்ஞானக் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அம்மாவின் எண்ணத்தில் உதித்த அற்புதமான திட்டமான லேப்டாப் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில், ரூ.7,300 கோடி நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.12,000 மதிப்புள்ள லேப்டாப்கள் வழங்கப்பட்டன. இந்தத் திட்டத்தையும் திமுக அரசு நிறுத்திவிட்டது. இப்போது மீண்டும் லேப்டாப் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

ஆட்சி முடிய இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், இதைச் செயல்படுத்துவார்களா என்பது சந்தேகமே. திமுக அரசால் நிறுத்தப்பட்ட இந்தத் திட்டமும், மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் அமல்படுத்தப்படும். தீபாவளிதோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும்.

'உங்களுடன் ஸ்டாலின்’ என்று நான்கு ஆண்டுகள் கழித்து முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் வந்திருக்கிறார். வீடு வீடாக அதிகாரிகள் சென்று, 46 பிரச்சினைகள் குறித்து மனு கொடுத்தால், அவற்றை நிறைவேற்றுவார்களாம். இது நடக்குமா? 46 பிரச்சினைகள் மக்களுக்கு இருப்பது தெரியாத ஒரு முதல்வர் ஆள்கிறார். இன்னும் 8 மாதங்களில் ஆட்சி முடியப்போகிறது. மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று மீண்டும் ஆட்சிக்கு வர, இப்படி விளம்பரம் செய்கிறார். ஏற்கனவே ஒருமுறை ஏமாந்து துன்பத்தை அனுபவிக்கிறீர்கள், மீண்டும் ஏமாந்துவிடாதீர்கள்.

திமுக எம்.பி. கனிமொழி ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு ஆதரவு தரமாட்டோம் என்று கூறியுள்ளார்.

திமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தபோது, அந்தக் கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். அப்போது அவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லையா? திமுகவுக்கு தேவை என்றால், எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள். திமுக, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரச்சாரம் செய்து, அவர் வெற்றி பெற்றார் என்பதை மறந்துவிடாதீர்கள். ஆட்சி மற்றும் அதிகாரம் வேண்டுமென்றால், திமுக எதையும் விட்டுக்கொடுப்பார்கள், அடிமை சாசனம் எழுதிக் கொடுப்பார்கள். சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிக்காவிட்டாலும், அவர் குறித்து தவறாகப் பேச வேண்டாம். தமிழருக்கு உயர்ந்த பதவி கிடைப்பது நமக்கு பெருமைதானே!” என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

admk c.b. rathakrishnan edappadi k palaniswami kanimozhi ranipet
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe