அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அக்கட்சித் தொடண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், “திமுக ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் செய்யும் அட்டூழியங்களையும், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும், நிறுத்தப்பட்ட நலத் திட்டங்கள் குறித்தும் பொதுமக்கள் பெரும் கவலை தெரிவித்தனர். நீங்கள்தான் அவற்றை நிவர்த்தி செய்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
வெற்று விளம்பரங்கள், ஸ்டிக்கர்கள், மறையும் மாயாஜால அறிவிப்புகளை வெளியிடும் ஸ்டாலின் அரசின் மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தமிழ் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லத் தவறிவிட்டது. விடியல் மாடல் என்று பெருமை பேசும் ஸ்டாலினால் இன்று, மக்களின் வாழ்வாதாரம் கண்ணீரும், வலியுமாக மாறிவிட்டது. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை 51 மாதங்களுக்கு மேல் ஏமாற்றிவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின். 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, திமுக தேர்தல் அறிக்கையில் 525க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. பல முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதை, எழுச்சிப் பயணத்தின்போது மக்களே என்னிடம் தெரிவிக்கின்றனர்.
‘கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து’ - என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, குடிமக்களை வருந்தச் செய்யும் செயல்களையே செய்து தீமை ஆட்சி நடத்துபவன். கொலையையே தொழிலாகக் கொண்டவரிலும் கொடியவனாவான்.தமிழ் நாட்டை பீடித்திருக்கும் துயரத்திற்கு 2026ல் முடிவுரை எழுதுவோம். அம்மா மாடல் ஆட்சியை அரியணையில் ஏற்றுவோம். எழுச்சிப் பயணத்திற்கு கிடைக்கும் பேராதரவையும், திரளும் மக்கள் வெள்ளத்தையும் பார்த்து, முதலமைச்சர் ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை. அதனால் நான், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் நினைத்துக்கொண்டு பேசுவதாகக் கூறுகிறார் ஸ்டாலின்.'நான் மக்களில் ஒருவன்; சாதாரண தொண்டன்'. முன்கள வீரனாக எனது எழுச்சிப் பயணம் தொடரும். தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும்வரை அதிமுக தொண்டர்களுக்கும், எனக்கும் தூக்கமில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.