2026 ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு 10 மாதங்களே உள்ள நிலையில் தற்போதே கூட்டணி குறித்த விவாதங்கள் தமிழக அரசியலில் சூடுபிடித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதற்கான அறிவிப்பை அதிமுக தலைமை கடந்த 28.06.2025 அன்று வெளியிட்டிருந்தது.

Advertisment

அந்த அறிவிப்பில், 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்துடனான எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணம்' முதல் கட்டமாக 7.7.2025 முதல் 21.7.2025 வரை சட்டமன்றத் தொகுதி வாரியாக நடைபெறும்' என அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

அதன்படி இன்று  (07.07.2025) மேட்டுப்பாளையத்தில் உள்ள வன பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு சாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து தன்னுடைய பிரச்சார பயணத்தைத் தொடங்கியுள்ளார். அங்கு வந்திருந்த அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள்  எடப்பாடி பழனிசாமிக்கு பரிசுகள் மற்றும் பூங்கொத்துகள் கொடுத்து அவரை வரவேற்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு உள்துறை அமைச்சகம் இசட் பிளஸ் பாதுகாப்பு அறிவித்துள்ள நிலையில் கூடுதல் பாதுகாப்பு வீரர்களுடன் எடப்பாடி வந்திருந்தார்.

இன்று மாலை 3 மணி அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெறும் ரோட் ஷோ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிலும் பழனிசாமி கலந்து கொள்ள இருக்கிறார். நிகழ்ச்சியில் பாஜகவின் மாநில தலைவர் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் முன்னாள் தமிழக பாஜக தலைவர் எடப்பாடி பழனிசாமியின் இந்த பிரச்சார தொடக்க நிகழ்வைப் புறக்கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment