தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று முன்தினம் (27.09.2025) கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்த துயரச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. 

Advertisment

அதன்படி அருணா ஜெகதீசன் நேற்று (28.09.2025) மாலை 5 மணியளவில் தனது முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியிருந்தார். இதனையடுத்து ஏ.டி.எஸ்.பி. தலைமையிலான 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோவே சாட்சி. நேற்று (29.09.2025) நான் கரூர் சென்று உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி, சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல் தெரிவித்து செய்தியாளர்களை சந்தித்த போது, எந்த வித அரசியலுக்கும் இடமின்றி, மக்களின் உணர்வாக எனது கருத்துகளைத் தெரிவித்து, அதே சமயம், மக்களின் சந்தேகங்களையும் பதிவு செய்தேன். 

Advertisment

அதற்கெல்லாம் உரிய பதில் அளிக்க திராணி இல்லாமல், சமூக வலைதளங்களில் அவதூறு பரவுகிறது என்று கூறுகிறீர்களே. என்ன அவதூறு பரவியது?. உங்கள் கட்சிக் காரர்கள், "தமிழ்நாடு மாணவர் சங்கம்" என்ற பெயரில் போஸ்டர் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்களே- அந்த அவதூறா?. உங்கள் அரசின் காவல்துறை பிரச்சாரம் செய்ய ஒதுக்கிய இடத்தில் உள்ள குளறுபடிகள், திமுக-வின் வழக்கமான ஆம்புலன்ஸ் அரசியல், தடியடி நடந்த காட்சிகள் வெளிவந்து, அதைப் பற்றி பொதுமக்கள் பேசுவது- இவை எல்லாம் வதந்தியா?. பொறுப்போடு நடந்து கொள்வது என்றால் என்ன?. உங்கள் அமைச்சர் ஒருவர் அழுவது போல் நடிக்கத் தெரியாமல் மாட்டிக் கொண்டாரே- அதுவா?. அல்லது, உங்கள் மகனும், துணை முதல்வருமானவர், கரூர் வந்து சம்பிரதாயத்திற்கு போட்டோஷூட் எடுத்த கையோடு, விடுமுறையாக (Vacation) துபாய்க்கு பறந்து சென்றுவிட்டாரே - அதுவா?

கள்ளக்குறிச்சியில் உங்கள் ஆட்சியின் அலட்சியத்தால் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்களுக்கு கனக்காத இதயம், கலங்காத கண்கள், இப்போது மட்டும் கலங்குகிறதா?. சென்னை ஏர் ஷோ-வை நீங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து கண்டு களித்த போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தார்களே- அப்போது மட்டும் வீட்டிலேயே இருக்க முடிந்ததா? யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே?. எதிர்க்கட்சிகள் யாரும் இதுவரை எந்த அரசியலும் செய்யவில்லை. ஆனால், உங்களின் இந்த வீடியோ தான், பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. 

Advertisment

இதில் இன்னும் கொடுமையாக, நீங்கள் அமைத்த ஒரு நபர் விசாரணை ஆணையம், விசாரிக்கும் காட்சிகள் ஊடகங்களில் தொடர்ந்து வருகின்றன. அதைப் பார்க்கும் மக்களுக்கே, இது ஒருதலைபட்சமான, அரசின் தவறுகளை மூடி மறைக்கும் கண் துடைப்பு (Eyewash) ஆணையம் என்பதைக் காட்டுகிறது.மக்களுக்கு அரசின் விசாரணை மீது நம்பிக்கை இல்லை. கரூர் துயரத்திற்கான உரிய நீதி கிடைக்க, நடந்தது என்னவென்று மக்களுக்கு  உண்மை நிலை தெரிய, சி.பி.ஐ. (CBI) விசாரணைக்கு  உத்தரவிட வேண்டும். முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே - மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள். இந்த நேரத்திலும் உங்கள் போட்டோஷூட்டால் மக்களை மேலும் துன்புறுத்தாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.