கேரளா மாநிலம் வாளையார் சோதனை சாவடி எல்லையில் கடந்த 7ஆம் தேதி தமிழகத்தில் இருந்து சென்ற 30 ஆம்னி பேருந்துகளை, கேரள மாநில போக்குவரத்து துறையினர் குறி வைத்து சிறைப்பிடித்தனர். அதோடு சிறைபிடிக்கப்பட்ட பேருந்துகளுக்கு ரூ. 70 லட்சம் வரை அபராதம் விதித்த விவகாரம் தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் கர்நாடக மாநிலத்தில் தமிழகத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்து 1 கோடியே 15 லட்சம் அபராதம் விதித்துள்ள சம்பவம் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் மத்தியில் மேலும் கலகத்தை ஏற்படுத்தியது.
இத்தகைய சூழலில் தான் கடந்த 10ஆம் தேதி மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று ஆம்னி பேருந்துகளின் நல சங்கங்கள் அறிவித்தது. இந்நிலையில் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக ஆம்னி பேருந்துகள் மீது அண்டை மாநில அரசுகள் அபராதம் விதிப்பதால் அவர்களது தொழில் நலிவடையும் நிலையில் உள்ளதாகக் கூறி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் 09.11.2025 இரவு முதல் பேருந்துகளை இயக்காமல் போராடி வருகின்றனர்.
கடந்த ஒரு வார காலமாக ஆம்னி பேருந்துகள் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படாததால் தமிழக பயணிகள் பிற மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள இயலாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே, திமுக அரசின் போக்குவரத்துத்துறை இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி சுமூக தீர்வு ஏற்படுத்தி தமிழக மக்கள் தங்களது பயணத்தை மேற்கொள்ள வழிவகை காண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/13/eps-chennai-speech-2025-11-13-12-01-05.jpg)