அதிமுக மூத்த தலைவர்களுடன் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷணனை நேரில் சந்தித்து வாழ்த்தினார். அவருடன் அதிமுக எம்பிக்கள் தம்பிதுரை, இன்பதுரை, தனபால், சி.வி.சண்முகம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, ஆகியோரும் சென்று, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இன்று மாலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்கவிருக்கிறார்.அதிமுகவைச் சுற்றி நடக்கும் பல்வேறு அரசியல் பிரச்சனைகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்படவிருக்கிறது. இது குறித்து அதிமுக தரப்பில் விசாரித்தபோது, "அமித்ஷாவுடனான எடப்பாடியின் சந்திப்பில், துரோகிகள் எதிர்பார்க்கும் எதுவும் நடக்கப் போவதில்லை. யாரையெல்லாம் அதிமுகவில் மீண்டும் இணைக்க வேண்டும் என செங்கோட்டையன் போர்க்கொடி உயர்த்தினாரோ அது சக்சஸ் ஆகாது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/09/16/a5251-2025-09-16-15-09-31.jpg)
சசிகலா, ஓபிஎஸ், தினகரன் ஆகியோரை இணைக்க இயலாது என்பதை அமித்ஷாவிடம் திட்டவட்டமாக எடப்பாடி தெரிவிக்கவிருக்கிறார். இந்த திட்டமிடலுடன் தான் அமித்ஷாவை சந்திக்கிறார் எடப்பாடி. இதனைத் தாண்டி, அமித்ஷா என்ன விவாதிக்கிறார் என்பதைப் பொறுத்து முடிவு செய்யப்படும். மேலும், பசும்பொன் தேவர் திருமகனாருக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தவிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி" என்கிறார்கள் சீனியர்கள். இதற்கிடையே, வன்னியர் சமூகத்தின் ஆகப்பெரிய தலைவரான ராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு மலர்த்தூவி எடப்பாடி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் மரியாதை செய்தனர்.