அதிமுக மூத்த தலைவர்களுடன் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் அவருடன் சென்ற அதிமுக எம்பிக்கள் தம்பிதுரை, இன்பதுரை, தனபால், சி.வி.சண்முகம் மற்றும் முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தனர், இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
டெல்லியில் உள்ள அமித்ஷாவின் இல்லத்தில் சுமார் அரை மணி நேரம் இந்த ஆலோசனையானது நடைபெற்றது. அப்போது அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் இந்த சந்திப்பானது அதிமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் எடப்பாடி பழனிசாமியை அமித்ஷா சுமார் 15 நிமிடங்கள் வரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதனையடுத்து அமித்ஷாவின் இல்லத்திலிருந்து அதிமுக நிர்வாகிகள் சென்றுவிட்டனர்.
அதன் பிறகு எடப்பாடி பழனிசாமியிடம் தனியாக 15 நிமிடங்கள் அமித்ஷா ஆலோசனை நடத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மட்டும் தனி வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு காரில் புறப்பட்டுச் சென்றதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக டெல்லி அமித்ஷாவைச் சந்தித்து தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக அமித்ஷாவிடம் எடுத்துரைத்திருந்தார். இத்தகைய பரபரப்பான சூலில் தான் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.