EPS exposes eight DMK ministers! - Excitement during the tour Photograph: (admk)
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எனும் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக கலசப்பாக்கம் தொகுதி, வில்வராணி நட்சத்திர கோவில் அருகே திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் ஆவேசமாகப் சிறப்புரையாற்றிய எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “திமுக கூட்டணி வலுவானது என்பதால் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். ஸ்டாலின் அவர்களே, கலசப்பாக்கம் வந்து மக்கள் ஆரவாரத்தைப் பாருங்கள். எங்கள் வெற்றிக்கு இந்த மக்கள் வெள்ளமே சாட்சி.
அதிமுக கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வருகின்றன. மக்கள்தான் எஜமானர்கள், தீர்மானிக்கும் அதிகாரம் படைத்தவர்கள். தமிழகத்தில் அதிமுக ஆட்சியையும் திமுக ஆட்சியையும் ஒப்பிட்டு, எது சிறந்தது என்று முடிவு செய்து 2026 தேர்தலில் முடிவை வழங்குங்கள். அதிமுக ஆட்சி மக்களாட்சி, திமுக குடும்ப ஆட்சி. மக்களுக்காக திட்டம் தீட்டினோம், திமுக குடும்பத்துக்காக திட்டம் போட்டு கோடிகோடியாகக் கொள்ளையடிக்கிறது.
525 அறிவிப்புகளில் 10% கூட நிறைவேற்றவில்லை ஆனால் 98% நிறைவேற்றினோம் என்று ஸ்டாலின் பச்சை பொய் சொல்கிறார். முழு பூசணியை சோற்றில் மறைக்கிறார். 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தவில்லை, சம்பள உயர்வும் இல்லை. கேஸ் மானியம் கொடுக்கவில்லை, மாணவர் கல்விக்கடன் ரத்து செய்யவில்லை, ரேஷனில் சர்க்கரை கூடுதலாக கொடுக்கவில்லை, பெட்ரோல், டீசல் விலை குறைக்கவில்லை. நீட் தேர்வு ரத்து செய்யவில்லை, ரகசியமும் சொல்லவில்லை. அப்படி என்றால் பொய் சொல்லித்தானே ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். பொய் சொன்ன கட்சிக்கு 2026 தேர்தலில் தகுந்த பதிலடி கொடுங்கள்.
தமிழகம் முழுவதும் போதைப்பொருள் சகஜமாகிவிட்டது. இளைஞர்கள் சீரழிவதால் குடும்பங்கள் அழிகிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்கு வரக்கூடிய தேர்தலில் அதிமுக கூட்டணி வெல்ல வேண்டும். எல்லா துறையிலும் ஊழல் நடக்கிறது. பணம் கொடுக்காமல் எதுவும் நடக்காது. டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் வருடத்துக்கு 5400 கோடியும், நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் மேலிடம் போகிறது. அப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா..?
இதற்கு மந்திரியாக இருந்தவர் யார்..? 10 ரூபாய் பாலாஜி. யாரெல்லாம் கப்பம் கட்டுகிறார்களோ, அவர்களை எல்லாம் சிறந்த அமைச்சர் என்று பட்டம் சூட்டுகிறார். சிறந்த நிர்வாகம் செய்பவர்களுக்குப் பட்டம் கிடையாது, துட்டு அதிகமாகக் கொடுப்பவர்தான் சிறந்த அமைச்சர். எல்லா அரசாங்கத்திலும் நிர்வாகத் திறமைமிக்க அமைச்சர்களுக்கே மதிப்பு. ஆனால், திமுக ஆட்சியில் கப்பம் கட்டுபவர்களுக்குத்தான் நல்ல இலாகா உண்டு. இன்று அதிமுகவில் இருந்து தான் பல பேர் அமைச்சர்களாக டெபுடேஷனில் திமுகவுக்கு போயிருக்கிறார்கள். 8 அதிமுக காரர்கள் திமுகவின் அமைச்சரவையில் உள்ளனர். பலர் எம்.எல்.ஏ . ஆகியிருக்கிறார்கள். இவர்கள் சரியான முறையில் மாமுல் வாங்கி மேலிடத்துக்குக் கொடுக்கிறார்கள். அதனால் திமுகவுக்கு உழைத்தவர்கள் எல்லாம் ஓரம் கட்டப்பட்டுவிட்டனர்.
அதிமுகவில் அப்படியில்லை, யார் சிறந்த நிர்வாகம் செய்கிறார்களோ அவர்களுக்கு நல்ல இலாகா கிடைக்கும். அதிமுக காலத்தில் திட்டங்களை சரியாகக் கண்காணித்து நேரடியாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தார்கள். அதனால்தான் தேசிய அளவில் திறமைமிக்க அரசு என்று நூற்றுக்கணக்கான விருதுகளைப் பெற்றிருக்கிறோம்.
தமிழகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை. அதிமுக ஆட்சியில் ஏழை மக்களுக்கு 15 லட்சம் மருத்துவ முகாம்கள் நடத்தினோம். கிராமம் முதல் நகரம் வரை நடமாடும் மருத்துவக் குழு அமைத்தோம். ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், அம்மா மினி கிளினிக் என மக்களுக்காக நிறைய கொடுத்திருக்கிறோம். இந்த அரசு இதையெல்லாம் ரத்து செய்துவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி மலரும்போது இத்திட்டங்கள் தொடரும். ஏழை விவசாயிகள் நிறைந்த பகுதி இது. பயிர்க்கடன் இரண்டுமுறை தள்ளுபடி, மும்முனை மின்சாரம் 24மணிநேரம் கொடுத்தோம், குடிமராமத்துத் திட்டம் கொடுத்தோம், பேரிடரின்போது பயிர் காப்பீட்டின் மூலம் அதிகமான இழப்பீடு கொடுத்தோம். விவசாயத் தொழிலாளிகளுக்கு பசுமை வீடுகள், ஆடு,மாடு, கோழிகள், உழவர் பாதுகாப்பு திட்டம், முதியோர் உதவித் திட்டம் கொடுத்தோம். கிராமம் முதல் நகரம் வரை மக்களுக்காக உழைத்தது அதிமுக அரசு.
ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவர்கள் ஆக 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கி, அதன் மூலம் 2818 பேர் இலவசமாக படித்து மருத்துவர் ஆகியிருக்கிறார்கள். சனிக்கிழமை கூட இந்த தொகுதியைச் சேர்ந்த 9 பேர் என்னை சந்தித்து வாழ்த்து பெற்றனர். எம்ஜிஆரும், அம்மாவும் ஏழைகளுக்காக உழைத்தவர்கள், அவர்கள் வழியில் வந்த இயக்கம் எப்போதும் மக்களுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்குப் பிரச்னை என்றால் முதல் குரல் கொடுப்பது அதிமுகதான். ஏழை பெண்களுக்கும் திருமணம் ஆக வேண்டும் என்பதற்காக திருமண உதவித் திட்டம், தாலிக்குத் தங்கம் திட்டம் கொடுத்தோம். இதையும் நிறுத்திவிட்டனர், அம்மா இருசக்கர வாகனம் மானியம் 2 லட்சத்து 85 ஆயிரம் பேருக்குக் கொடுத்தோம். மின்கட்டணம் 67% உயர்த்திவிட்டனர். ஸ்டாலின் எங்கு போனாலும், அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்கிறார்.
இந்த கலசப்பாக்கம் தொகுதியில் செய்த திட்டங்களை மட்டும் சொல்கிறேன். கலசப்பாக்கத்தில் தாலுகா அலுவலகம், ஒரே தொகுதியில் இரண்டு இடத்தில் தாலுகா அலுவலகம், நட்சத்திர கோவில் உள்ளடக்கிய கிராம மக்கள் பயன்பெறும் வகையில் தானியங்கி கிடங்கு, நெல் கொள்முதல் நிலையம், துணை மின் நிலையம்,ஆரம்ப சுகாதார நிலையம், இருவழிச்சாலை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நீதிமன்றம், சாலை மேம்பாடு, ஒழுங்குமுறை விற்பனை நிலையம், அரசு மருத்துவமனை தரம் உயர்த்தல், தடுப்பணை, மேம்படுத்தப்பட்ட வட்டார மருத்துவமனை, ஆற்றின் குறுக்கே மேம்பாலம், இன்னும் பல்வேறு திட்டங்கள் சொல்லாம். ஏழை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அற்புதமான கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கப்படும். ஒவ்வொரு தீபாவளிக்கும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும். கொரோனா காலத்தில் ரேஷனில் விலையில்லா பொருட்கள் கொடுத்தோம், விலைவாசி உயராமல் பார்த்துக் கொண்டோம், பொங்கலன்று 2500 ரூபாய் கொடுத்தோம், மாணவர் நலன் கருதி ஆல்பாஸ் போட்டோம். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்றார்.