அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, தேர்தல் சுற்றுப்பயணத்தில் பல்லாவரம் மற்றும் தாம்பரம் சட்டமன்றத் தொகுதி மக்களை குரோம்பேட்டை, 200 அடி ரேடியல் சாலையில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் சந்தித்து உரையாற்றினார்.
அப்போது அவர், ‘’ஸ்டாலின் போகும் இடமெல்லாம் தமிழ்நாட்டுக்கும் என்.டி.ஏ.வுக்கும் தான் போட்டி என்று பேசுகிறார். இது தமிழ்நாட்டுக்கான சட்டமன்றத் தேர்தல் தானே… ஆனால் முதல்வர் ஸ்டாலினுக்கு அதுகூட ஞாபகம் இல்லை. ஸ்டாலினுக்கு மறதி அதிகமாகிவிட்டது என்று திமுகவினர் அடிக்கடி சொல்கிறார்கள். அதனால் தான் தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்கான தேர்தல் என்பதை மறந்து தமிழ்நாட்டுக்கும் என்.டி.ஏ.வுக்கும் போட்டி என்கிறார்.
பல்லாவரம், தாம்பரம் மக்கள் குழுமியிருக்கும் இந்த இடத்தில் குறிப்பிடுகிறேன் இது சட்டமன்றத் தேர்தல். இது அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்கான தேர்தல். மத்திய அரசுக்கான தேர்தல் 2024க்கே முடிந்துவிட்டது.
நம்மை எதிர்க்க தில்லு இல்லை, பலமுறை பேசிவிட்டேன். அதிமுக அரசு பற்றி பேசுங்க, நான் பதில் சொல்லத் தயார். 2011 முதல் 2021 வரை 10 ஆண்டு ஆட்சி பற்றி நாங்களும், உங்கள் ஆட்சி பற்றி நீங்களும் பேசுங்கள். மக்கள் தீர்ப்பளிக்கட்டும். இந்த சவாலுக்கு பதில் இல்லை. பொய் பிரசாரம் செய்து மாய உலகில் வாழ்கிறீர்கள். தமிழகத்தில் நம்மை எதிர்க்கும் சக்தி திமுகவுக்கு இல்லை என்பது நிரூபணமாகிவிட்டது.
இபிஎஸ் டெல்லிக்கு அடிமை என்கிறார், அதிமுக உழைப்பை நம்பி இருக்கும் கட்சி. மக்கள் நம்பிக்கை பெற்ற இயக்கம். நாங்கள் யாருக்கும் அடிமையில்லை. கூட்டணி என்று அமைத்தால் கூட்டணி வேட்பாளரை, தங்கள் வேட்பாளராகக் கருதி வெற்றிக்குப் பாடுபடும் இயக்கம். முகமலர்ச்சியோடு கூட்டணி வேட்பாளருக்கு முன்னுரிமை கொடுத்து பாடுபடும் ஒரே கட்சி அதிமுக.
ஸ்டாலின் பல அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார், அரசு பணம், அரசு நிகழ்ச்சியில் அரசியல் பேசுகிறார், இது கண்டிக்கத்தக்கது. அரசியல் பேச வேண்டும் என்றால் திமுக பொதுக்கூட்டத்தில் பேசுங்க, இது மரபல்ல, பொதுக்கூட்டம் நடத்த முடியவில்லை. திமுக கூட்டணியில் பல பிரச்னைகள். நாங்கள் 189 தொகுதியில் மக்களை சந்தித்து திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துப் பேசுகிறோம்.
இன்று அவசரமாக பல திட்டங்களை அறிவிக்கிறார், அடிக்கல் நாட்டுகிறார், எங்கே பணம் ஒதுக்குனீங்க, எப்ப நிறைவேற்றுவீங்க? அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவசர கோலத்தில் விடப்பட்ட டெண்டர் அனைத்தும் ஆய்வு செய்யப்படும். மக்களை ஏமாற்றுகிறார்கள். தேர்தல் வந்துவிட்டது, கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன். அதுக்குத்தான் டெண்டர் விடுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. ஜல்லி கிரஷர் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கிறார்கள். அந்த இலாகா அமைச்சர் லட்சக்கணக்கில் பணம் பறிக்கிறார்,. திமுகவுக்கு எச்சரிக்கை விடுகிறோம். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது மோடிக்கு கருப்பு பலூன் விட்டார், ஆட்சிக்கு வந்ததும் ரத்தினக் கம்பளம் விரிக்கிறார், செஸ் ஒலிம்பியாட் திறந்துவைத்தார், கேலோ இந்தியாவுக்கு வரவழைத்தார். கலைவாணர் அரங்கில் மத்திய அரசின் திட்டத்துக்கு அடிகல் நாட்டு விழாவுக்கும் பிரதமரை அழைத்தீர்கள். மோடி சென்னை வந்தபோது வெள்ளைக் குடை பிடிக்கிறார். இதுதான் ஸ்டாலின் இரட்டை வேடம். 39 எம்பிக்கள் திமுக கூட்டணியில் உள்ளனர், தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்தனர், செய்தார்களா..? நாடாளுமன்றத்தில் பெஞ்சை தேய்க்கிறார்கள். ஒருநாளாவது நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்தார்களா? இல்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் தான் வீர வசனம் பேசுவார்கள்.
எம்ஜிஆர் காலத்திலும் அம்மா காலத்திலும், என் காலத்திலும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினோம். அதற்கு தில்லுதிராணி வேண்டும். காவிரி நீர் பிரச்னை வந்தது. பாஜக கூட்டணியில் இருந்தோம் தீர்ப்பை நிறைவேற்ற காலதாமதம் செய்தது பாஜக அரசு. நாடாளுமன்றத்தை 22 நாட்கள் ஒத்திவைத்தது அதிமுக. இன்றைக்கு அப்படியா இருக்கிறது? நீட்டுக்கு விலக்கு பெற முடியவில்லை,
சட்டமன்றத்தில் மாநில சுயாட்சி தேவை என்கிறார், தேவைதான். திமுக மத்தியில் 15 ஆண்டுகள் இருந்தது, அப்போது ஏன் மாநில சுயாட்சி பற்றி பேசவில்லை? வாஜ்பாய் பிரதமராக இருக்கும்போதும், மன்மோகன் சிங் இருக்கும்போதும், ஐகே குஜ்ரால் இருக்கும்போதும், தேவகவுடா இருக்கும்போதும் 4 பிரதமர் காலத்தில் மத்திய அமைச்சரவையில் இருந்தனர், அப்போதெல்லாம் கவலைப்படவில்லை. தேர்தல் வந்தால் மாநில சுயாட்சி என்பார்கள், தேர்தல் முடிந்தால் விட்டுவிடுவார்கள். மாநில சுயாட்சி கிடைக்க வேண்டும் என்று எண்ணியிருந்தால் மத்தியில் அதிகாரத்தில் இருக்கும்போதே பெற்றிருக்கலாம். தேர்தல் பிரசாரம் செய்வதற்கு மாநில சுயாட்சி பற்றி பேசுகிறார், இனி இது எடுபடாது.
525 வாக்குறுதி கொடுத்தீர்கள். நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை, ஆனால் 98% நிறைவேற்றியதாகச் சொல்கிறார். நான் சட்டமன்றத்தில் பேசினேன், வெள்ளை அறிக்கை கேட்டேன், இதுவரை பதிலே இல்லை. திமுக கூட்டணி சண்முகம் கூட வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார். மக்களிடம் பொய் செய்தி வெளியிட்டு ஆட்சியை தக்கவைத்து கொண்டிருக்கிறார். பத்திரிகை, ஊடகம் மட்டும் உண்மை செய்தியை வெளியிட்டால் திமுக என்ற கட்சி தேர்தல் வரை நிலைக்காது.
ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ஊர் ஊராக சென்று புகார் பெட்டி என்று மனுக்களை வாங்கினார். ஆட்சிக்கு வந்ததும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். எத்தனை மனுக்களுக்குத் தீர்வு கண்டார்கள் என்று கேட்டதற்கு பதிலில்லை. மக்களை ஏமாற்றுவதில் ஒன்றாம் நம்பர் முதல்வர் ஸ்டாலின்.
அவர் இபிஎஸ் துரோகி என்கிறார், நான் துரோகி அல்ல. நாட்டு மக்களை ஏமாற்றும் ஸ்டாலின் தான் தமிழின துரோகி. சட்டம் ஒழுங்கு சீர்கேடு. போதை பொருள் எல்லா இடத்திலும் கிடைக்கிறது. போதை ஆசாமிகள் குற்றச்செயலில் ஈடுபடுகின்றனர், கொலை, கொள்ளை பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. இதற்கு காரணமே துரோகி ஸ்டாலின்தான்.
போதையை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தி இருக்கலாம். ஒரே ஆண்டில் போதை பொருள் விற்பனை என்று சொன்னேன். அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. இன்றைய தினம் போதை பொருள் நிறைந்த மாநிலமாகிவிட்டது. டிஜிபி ஒருவர் 2.0, 3.0 போட்டு ரிட்டயர்டு ஆகிவிட்டார். கையாலாக அரசு திமுக அரசு. போதை பொருட்கள் விற்பதே திமுகவினர் தான், அப்புறம் எப்படி தடுக்க முடியும்? சென்னையில் கனிமொழி கூட்டத்தில் பெண் காலவருக்கு பாலியல் சீண்டல் கொடுக்கிறார்கள். காவலருக்கே இந்த நிலைமை. பாதுகாப்பில்லை. இப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா?
விலைவாசி உயர்வு எண்ணிப் பாருங்கள். அதிமுக ஆட்சியை ஒப்பிட்டு பாருங்கள். பச்சரிசி சாப்பாட்டு அரிசி ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 40 ரூபாய், திமுக ஆட்சியில் 75 ரூபாய், பொன்னி புழுங்கல் அரிசி அதிமுக ஆட்சியில் 45 ரூபாய் திமுக ஆட்சியில் 75 ரூபாய், இட்லி புழுங்கல் அரிசி ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 30 ரூபாய், திமுக ஆட்சியில் 48 ரூபாய், கடலெண்ணை ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 130 ரூபாய், திமுக ஆட்சியில் 190 ரூபாய், நல்லெண்ணை ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 250 ரூபாய், திமுக ஆட்சியில் 400 ரூபாய், துவரம் பருப்பு ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 74 ரூபாய், திமுக ஆட்சியில் 130 ரூபாய், உளுத்தம் பருப்பு ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 79 ரூபாய், திமுக ஆட்சியில் 120 ரூபாய். ஆக எல்லா விலையும் உயர்ந்துவிட்டது. விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை. ஏழை நடுத்தர மக்கள் பாதிப்பு பற்றி சிந்திக்க நேரமில்ல.
போட்டோ ஷூட்டில் 5 ஆண்டுகள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின் தான். திட்டத்துக்கு எத்தனை பேர் வச்சிருக்கார், எதாவது ஞாபகம் இருக்கா..? பேருக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். திட்டம் அறிவித்து குழு போடுவார், அதோடு முடங்கிவிட்டது, 52 குழு போட்டார்கள். என்ன அறிக்கை கொடுத்தது..? வெள்ளை அறிக்கை கேட்டால் பதில் இல்லை.
வேலைவாய்ப்பு அதிகம் கிடைத்தது என்று சொல்கிறார். அதில் உண்மையில்லை. அதிமுக ஆட்சியில் அம்மா முதல்வராக இருந்தபோது தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டது, 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது, 4 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 5 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும், என மொத்தம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்பட்டது. அந்த ஒப்பந்தங்கள் எல்லாம் நடைமுறைக்கு வந்து தொழிற்சாலைகள் எல்லாம் இயங்கிவருகிறது.
அம்மா வழியில் வந்த அரசு 2019 ஜனவரியில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி சுமார் 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு, 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அதன் மூலம் பல தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு வந்தது, 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைத்தது. அதெல்லாம் இப்போது நடைமுறைக்கு வந்துகொண்டிருக்கிறது. உங்கள் ஆட்சியில் என்ன கிடைத்தது?
திமுக ஆட்சியில் தொழில் முதலீடு 1179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 12 லட்சத்து 32 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது, என்று தொழில்துறை அமைச்சர் பச்சை பொய் சொல்கிறார், இதனால் 36 லட்சம் பேருக்கு வேலை கிடைத்ததாம், 77% ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டதாகச் சொல்கிறார். அத்தனையும் ஏட்டளவில் உள்ளது, நடைமுறைக்கு வரவில்லை.
ஜெர்மனி செல்லும்போது முதல்வர், 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, 10 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும் இதன்மூலம் 32 லட்சத்து 81 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், அதில் 77 சதவிகித ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டன என்றும் சொன்னார். அப்படி என்றால் சுமார் 25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். அப்படி இந்த நான்காண்டில் வேலைவாய்ப்பு கிடைத்ததா? மத்திய அரசு ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடிதான் முதலீடு வந்திருக்கிறது என்று அறிவித்துள்ளது. மாநிலத்தில் இருந்து 26 ஆயிரம் கோடிதான் வந்திருக்கிறது. உங்கள் ஆட்சியில் அத்தனையும் வெற்று அறிவிப்புதான்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிலை என்ன முதலீடு என்ன தொழிற்சாலை நிலை என்ன என்று வெள்ளை அறிக்கை கேட்டால், வெள்ளை பேப்பரை காட்டுகிறார், எதுவுமே நடக்கலை. அதிமுக ஆட்சியில் தரமான கல்வி கிடைக்க பல திட்டம் கொடுத்தோம். ஏழை, எளிய, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களது எண்ணத்தில் உதித்த அற்புதமான திட்டம் தான் லேப்டாப் வழங்கும் திட்டம். அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் 7300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, தலா 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது. நான்காண்டுகள் நிறுத்திவிட்டார்கள். தொடர்ந்து நான் பேசினேன், தேர்தல் வருவதால் அவசரமாக 10 லட்சம் பேருக்கு மட்டும் கொடுக்கிறார்கள்.
இதற்கு என்ன அவசியம்..? கல்லூரி ஆரம்பிக்கும் முன்பு கொடுத்திருக்க வேண்டும். படித்து வெளியில் செல்லும்போது கொடுப்பதால் என்ன பயன்? எல்லாம் தேர்தல் தோல்வி அச்சத்தில் கொடுக்கிறார். நாம் ஓட்டுக்காக கொடுக்கவில்லை. மாணவர் திறமையை வளர்க்க +1, +2 மாணவர்களுக்குக் கொடுத்தோம். அதிமுக திட்டத்தை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி, இருந்தாலும் உரிய நேரத்தில் கொடுக்காததால் பயன் தரவில்லை.
கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. கட்டுமானப் பொருட்கள் விலை உயரும்போது அது அத்தியாவசியப் பட்டியலில் சேர்க்கப்பட்டு கட்டுப்படுத்தப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நானும் சட்டமன்றத்தில் இதுபற்றி கேட்டேன், எந்த நடவடிக்கையும் இல்லை. ஒரு யூனிட் எம்.சாண்ட் அதிமுக ஆட்சியில் 3000 ரூபாய்க்கு விற்றது, திமுக ஆட்சியில் 6000 ரூபாய்க்கு விற்கிறது, ஒரு யூனிட் ஜல்லி அதிமுக ஆட்சியில் 2000 ரூபாய்க்கு விற்றது, திமுக ஆட்சியில் 5500 ரூபாய்க்கு விற்கிறது, ஒரு டன் கம்பி அதிமுக ஆட்சியில் 40 ஆயிரம் ரூபாய், திமுக ஆட்சியில் 65 ஆயிரம் ரூபாய், ஒரு செங்கல் அதிமுக ஆட்சியில் 8 ரூபாய்க்கு விற்றது, திமுக ஆட்சியில் 13 ரூபாய்க்கு விற்கிறது, சிமெண்ட் அதிமுக ஆட்சியில் வெளிமார்க்கெட்டில் 240 ரூபாய், திமுக ஆட்சியில் வெளி மார்க்கெட்டில் ஒரு மூட்டை 340 ரூபாய், மரம் 200% உயர்ந்துவிட்டது. இனி ஏழை மக்கள் வீடு கட்டவே முடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டது. இரவில் கனவில் வேண்டுமானால் வீடு கட்டலாம். சிமெண்ட் பேக்ட்ரி, கம்பி எல்லாவற்றிலும் கமிஷன் இதனால் மக்களுக்குத்தான் பாதிப்பு.
மின்கட்டணம் அதிமுக ஆட்சியில் எவ்வளவு திமுக ஆட்சியில் எவ்வளவு, 57% உயர்வு, வீட்டு வரி 100%, கடை வரி 150% உயர்வு, ஆண்டுக்கு 6% உயரும். வரி மேல் வரி போடும் அரசு தொடர வேண்டுமா? மதுரை மாநகராட்சியில் வரி வசூலில் 200 கோடி ஊழல், மேயர் கணவர் கைது செய்யப்பட்டார். பலர் ராஜினாமா செய்தார்கள். ஆட்டுக்கும் பன்றிக்கும் போட்ட வரியில் ஊழல் செய்த ஒரே கட்சி திமுக.
திண்டுக்கல்லில் நான்கரை கோடி ஊழல், காஞ்சிபுரம், கோவை, நெல்லை என எல்லா இடங்களிலும் பங்கு பிரிப்பதில் சண்டை. தாம்பரம் மாநகராட்சி பல போராடம் நடத்தினோம். அடிப்படை தேவைகள் நிறைவேற்றவில்லை, சுகாதாரச் சீர்கேடு சரிசெய்ய வேண்டும் என்று 8 போராட்டம் நடத்தினோம். மக்களுக்கு பிரச்னை என்றால் அதை தீர்ப்பதில் முதல் கட்சி அதிமுக. இன்றைக்கும் பிரச்னை தீரவில்லை. குப்பை அள்ளுவது கிடயாது, இதனால் வியாதிகள் வருகிறது. இப்படி மக்களுக்காக போராட்டம் நடத்திய வரலாறே திமுகவில் கிடையாது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்துக்கு 63 ஆயிரம் கோடி அனுமதி பெற்றோம். அமித்ஷாவை வரவழைத்து அடிக்கல் நாட்ட வைத்தோம். இப்படி ஒரு பெரிய திட்டமாவது கொண்டுவந்தீர்களா? ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி கொண்டுவந்தோம், உங்களால் ஒன்று கொண்டுவர முடிந்ததா? அதற்கு திறமையில்லாத பொம்மை முதல்வர். அதுமட்டுமில்லாமல், 68 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 21 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 7 அரசு சட்டக்கல்லூரிகள், 4 அரசு வேளாண்மைக் கல்லூரிகள், 5 அரசு கால்நடை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிலையங்கள் என பல கல்லூரிகளைத் திறந்து, இந்தியாவிலே உயர்கல்வியில் முதன்மை மாநிலம் என்று 2030ம் ஆண்டில் அடைய வேண்டிய இலக்கை 2019ம் ஆண்டிலேயே அடைந்துவிட்டது தமிழ்நாடு.
2011ல் ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றபோது, 100க்கு 34 பேர்தான் உயர்கல்வி படித்தனர், கல்வியில் புரட்சி மறுமலர்ச்சி ஏற்படுத்தியதன் விளைவாக, 2019-20ம் ஆண்டில் 100க்கு 54 பேர் உயர்கல்வி படிக்கும் நிலையை அதிமுக அரசு உருவாக்கியது. திமுக ஆட்சியில் இது குறைந்து 47 ஆகிவிட்டது.
அதிமுக ஆட்சியில் எல்லா துறைகளுமே சிறப்பாக செயல்பட்டது, நூற்றுக்கணக்கான தேசிய விருதுகள் பெறப்பட்டது. உள்ளாட்சித்துறையில் மட்டும் 140 தேசிய விருதுகளும், போக்குவரத்து துறை, மின்சாரத்துறை, சமூகநலத்துறை, உயர்கல்வித்துறை என பல துறைகளிலும் விருதுகளை அள்ளியிருக்கிறது அதிமுக அரசு. அதுமட்டுமல்ல, இந்தியாவிலேயே தொடர்ந்து 5 முறை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய விருது பெற்றது அதிமுக ஆட்சியின்போதுதான். மேலும், தமிழகத்தில் அதிக உணவு தானிய உற்பத்தியைப் பெருக்கி, தேசிய அளவில் ஐந்தாண்டுகள் கிருஷ்கர்மா என்ற உயர்ந்த விருதினைப் பெற்றது அதிமுக அரசு.
திமுக என்றால் ஊழல், ஊழல் என்றல் திமுக, ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக. சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் விஞ்ஞான முறையில் ஊழல் செய்யும் அரசு திமுக என்று சொன்னது. சர்க்கரை பேர ஊழலில் சர்க்கரையெல்லாம் எறும்பு தின்றுவிட்டதாம், சாக்குப் பைகளை கரையான் அரித்துவிட்டதாம். இப்படி ஊழல் செய்கின்ற கட்சி திமுகவுக்கு அதிமுக பற்றி பேச எந்த அருகதையும் இல்லை, அதனால் தான் மத்திய அரசு பற்றி பேசுகிறார். அதிமுக ஆட்சிதான் வளர்ச்சிக்கு அடித்தளம். வளர்ச்சி மிகுந்த மாநிலம் என்ற பெயர் வாங்க அடித்தளமிட்டது அதிமுக அரசு.
திமுக ஆட்சியில் வருவாயை பெருக்குவதற்கு குழு அமைத்து நிபுணர் குழு அமைக்கப்படும் என்றனர், நிபுணர் குழு அமைத்து 5 லட்சம் கோடி கடன் வாங்கினார்கள். 73 ஆண்டு கால தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தனையோ அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. 2021ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் 4 லட்சத்து 85 ஆயிரம் கோடி மட்டுமே, ஆனால் அதைவிட திமுகவின் இந்த ஐந்தாண்டுகளில் 5 லட்சம் கோடி கடன். நம் எல்லோரையும் கடனாளியாக்கிவிட்டார். வரி போட்டுத்தான் இந்த கடனை அடைப்பார்கள். ஒருபக்கம் வருவாய் உயர்வு, ஒருபக்கம் கடன். ஆனால், திட்டம் எதுவும் வரவில்லை. அவ்வளவு பணத்தையும் ஆட்டை போட்டுவிட்டனர். இதெல்லாம் விசாரிக்கப்பட்டு சட்டரீதியாக அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இபிஎஸ் அவதூறு செய்கிறாராம், நாங்கள் எதுவும் செய்ய வேண்டிய அவசியமே இல்லை, மக்கள் எந்த ஆட்சி சிறந்தது என்று பார்க்கிறார்கள். அதிமுக ஆட்சி சிறந்த ஆட்சி என்று மக்கள் மனதில் இடம் பெற்றுவிட்டோம். நடைபெறும் தேர்தலில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வென்று, அதிமுக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும்.
அரசு காலிப்பணியிடங்கள் ஐந்தரை லட்சம் நிரப்புவோம் என்றார்கள், நிரப்பவில்லை, ஓய்வு பெற்றவர்கள் ஒரு லட்சம் பேர், ஆனால் பணியாணை வழங்கியது 94 ஆயிரம் பேருக்குத்தான். இதையெல்லாம் மாற்ற அதிமுக ஆட்சி மலரவேண்டும்.
இஸ்லாமிய பெருமக்கள் சிந்தியுங்கள், அதிமுக ஆட்சியில் மத, சாதி சண்டை இல்லை, சகோதர ஆட்சி கொடுத்தோம். இன்று சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது. அதிமுக ஆட்சியில் நிறைய திட்டம் கொடுத்தோம். இஸ்லாமியப் பெருமக்களுக்கு ஏராளமான திட்டங்களைக் கொடுத்திருக்கிறோம். ரமலானுக்கு நோன்புக் கஞ்சி தயாரிக்க 5400 மெட்ரிக் டன் அரிசி கொடுத்தோம், நாகூர் தர்காவுக்கு சந்தன கட்டைகள் விலையில்லாமல் கொடுத்தோம், ஹஜ் புனித யாத்திரைக்கு மத்திய அரசு மானியத்தை 2018ல் நிறுத்திவிட்டாலும், மாநில அரசு சார்பில் முதலில் 6 கோடி ரூபாய் மானியம் கொடுக்கப்பட்டது. பின்னர் 2021ல் இஸ்லாமியர்களின் கோரிக்கையை ஏற்று, மானியத் தொகை 12 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது; சென்னையில் ஹஜ் இல்லம் கட்ட 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது; ஹாஜிகளுக்கு மதிப்பூதியம், உலமாக்கள், மோதினார்களுக்கு ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டது; உலமாக்களுக்கு இருசக்கர வாகன மானியம் 25 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது; வக்ஃப் வாரியத்துக்கு ஆண்டு மானியம், பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் புனரமைப்பு நிதி வழங்கப்பட்டது; இஸ்லாமியர்களுக்கு நேரடி நியமன முறையில் நிரப்பப்படாத பணியிடங்களுக்கு முன்கொணர்வு முறையை நீடிக்க அரசாணை வெளியிடப்பட்டது; டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையில் நாகூர் தர்கா குளக்கரை சேதமடைந்துவிட்டதால், அதனை சரிசெய்ய நானே நேரில் பார்வையிட்டு 4 கோடியே 25 லட்சம் ரூபாய் ஒதுக்கி சீரமைத்துக் கொடுத்தேன்.
சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அமைக்கப்பட்டது; மறைந்த அப்துல் கலாம் நினைவாக கலை அறிவியல் கல்லூரி ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்டது; திண்டுக்கல்லில் திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலி வாழ்க்கை வரலாறு குறித்த மணிமண்டபம் அமைக்கப்பட்டது; கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுக்கு சென்னையில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. அப்துல் கலாமுக்கு 2002ல் அதிமுகதான் வாக்களித்தது, திமுக வாக்களிக்கவில்லை. எதிராகப் போட்டியிட்டவருக்கு வாக்களித்தது.
சிறுபான்மை மக்கள் எண்ணிப்பாருங்கள், திமுக கூட்டணி திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள். அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்காது என்று பரப்புகிறார்கள். அதையெல்லாம் நீங்கள் நம்ப வேண்டாம், தேர்தல் என்றால் எல்லா கட்சிகளும் கூட்டணி வைக்கிறது. அதுபோலதான் அதிமுகவும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. கொள்கை என்பது நிலையானது, கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் எதிரிகளை வீழ்த்தவும், வாக்குகள் சிதறாமல் இருக்கவும் அமைக்கப்படுவது. அதிமுகவுக்கு எம்மதமும் சம்மதம். நாங்க வாக்குக்காக கேட்கவில்லை. எந்தளவுக்கு தமிழகம் அமைதிப்பூங்காவாக இருந்தது என்பதை எண்ணிபாருங்கள். கிறிஸ்தவ மக்களுக்கும் நிறைய திட்டம் கொடுத்தோம்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு கூட முறையாக நடத்தவில்லை, குளறுபடி, இப்படி தள்ளிவைத்த வரலாறே இல்லை, இப்படி திறமையற்ற அரசு. காவல்துறை உதவி ஆய்வாளர் தேர்வு முடிவை மதுரை உயர்நீதிமன்றம் நிறுத்திவிட்டது, தென்காசியைச் சேர்ந்த இருவர் வழக்கு தொடர்ந்தார்கள், அந்த வழக்கில் டிசம்பர் 21ம் தேதி தேர்வு நடந்தது, அதில் ஏ பிரிவில் தமிழ் வினாக்கள் இடம் பெற்றிருந்தது, ஆனால் பி பிரிவில் தமிழ் வினாக்கள் இல்லை. அதை சுட்டிக்காட்டி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒழுங்காக தேர்வுகூட நடத்த முடியாத நிலை இந்த ஆட்சியில் இருக்கிறது.
வருகின்ற தேர்தலில் நம் வேட்பாளர் நின்றால் இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணிக் கட்சிக்கு அவர்கள் சின்னத்திலும் வாக்களியுங்கள். அதிமுக 3 கட்ட தேர்தல் வாக்குறுதிகள் வெளியிட்டோம். குடும்பத் தலைவிக்கு மாதம் 2 ஆயிரம் கொடுப்போம். ஆண்களுக்கும் கட்டணமில்லா நகரப் பேருந்து பயணம். ஏழைகள் அனைவருக்கும் வீடு, பட்டியலின மக்களுக்கு நிலம் வாங்கி வீடு கட்டித்தரும். 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும். பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க 5 லட்சம் பேருக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழஙக்ப்படும். மாணவர் கல்விக் கடன் அரசே செலுத்தும்.
ஆண்டுக்கு குடும்பத்துக்கு 3 கேஸ் சிலிண்டர் வழங்கப்படும். ஜல்லிக்கட்டு வீரர்கள் மரணம் அடைந்தால் 10 லட்சம் ரூபாய், காயம் அடைந்தால் 2 லட்சம் இன்சூரன்ஸ், காளைகளுக்கு இன்சூரன்ஸ். சிறுபான்மை பெண்கள் சுயதொழில் தொடங்க வட்டியில்லா கடன், மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும். நடைபாதை வியாபாரிகள் கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி செய்யப்படும். ஆட்டோ ஓட்டுநர்கள் புதிய ஆட்டோ வாங்க 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். தீபாவளி தோறும் பெண்களுக்கு பட்டுச் சேலை வழங்கப்படும். தரமான பொங்கல் பரிசு வழங்கப்படும்.
திமுக ஆட்சியில் விலைவாசி, வரி உயர்வால் அவதிப்படும் மக்களுக்கு உதவி செய்ய 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய், +2 வரை படித்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மீன்பிடித் தடைக்காலம் நிவாரண நிதி அதிமுக ஆட்சியில் தான் 3 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக உயர்த்தினோம், இப்போது 8 ஆயிரத்தில் இருந்து 12 ஆயிரமாக உயர்த்தப்படும். பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய். கைத்தறி நெசவாளர்களுக்கு 450 யூனிட், விசைத்தறி நெசவாளர்களுக்கு 1400 யூனிட் மின்சாரம் இலவசம். இன்னும் பல அறிவிப்புகள் வழங்கப்படும்.மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். ஸ்டாலின் மாடல் அரசு ஃபெயிலியர் மாடல் அரசு, பைபை ஸ்டாலின்…’’ என்று முடித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/27/eps-cm-2026-02-27-10-29-46.jpg)