அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் போது செங்கோட்டையன் வீட்டிற்கு ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வருகை தந்து ஆதரவு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப்  பேசினார். 

Advertisment

அப்போது அவர், “செங்கோட்டையன் அதிமுக  இணைப்பு பற்றிப் பேச சொல்கிறார். அவர் குறிப்பிடப்படுபவர்கள் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்கள். அவர்கள் பிரிந்து சென்றவர்கள் அல்ல. இதனை நன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் பிரிந்து சென்றவர்கள் அல்ல. அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர்கள். இதற்குச் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தில் சில வரிகளை மட்டும் குறிப்பிடுகிறேன். அதில், “கழக பொருளாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் கட்சி விரோத செயலுக்கு இந்த பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. 

Advertisment

கழகத்தின் நன்மையைக் கருதி கழக சட்டதிட்ட விதி 35இன் படி  ஓ. பன்னிர்செல்வத்தை உடனடியாக கழக பொருளாளர் பொறுப்பு, கழக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைப்பதோடு இன்று முதல் கழக உடன் பிறப்புக்கள் யாரும் ஓ. பன்னீர்செல்வத்துடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று இந்த பொதுக்குழுவில் தீர்மானிக்கப்படுகிறது. அதற்குப் பிறகு கடைசியாக இன்னும் 3, 4 பேர் இருக்கிறார்கள். அந்த தீர்மானத்தின் கடைசியாக உள்ள பத்தியில், “கழக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைப்பதோடு இன்று முதல் கழக உடன்பிறப்புக்கள் யாரும் மேற்கண்டவர்களுடன் எவ்வித தொடரும் வைத்துக் கொள்ளக் கூடாது“ என்றும் இந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

ops-ttv-kas

இதனை நான் சொல்லவில்லை. அதிமுகவின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கிட்டத்தட்ட 2500க்கு மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஏகமானதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம். அதற்கு எதிராகச் செயல்பட்டால் தலைமை என்ன முடிவு எடுக்கும் என்பது பற்றி அவருக்குத் தெரியாதா?. அதனைத் தெரியாதவரா அவர்?. 53 ஆண்டுக் காலம் கட்சியில் இருப்பதாகப் பேட்டி கொடுக்கிறார் பல முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.  அமைச்சராக இருந்துள்ளார். கட்சியின் தலைமையில் பொறுப்பு வகித்திருக்கிறார்.  

Advertisment

அப்படிப்பட்ட அவருக்கு எதுவும் தெரியாதது கிடையாது. ஒரு பொதுக்குழு எடுக்கின்ற முடிவு இறுதியான முடிவு. அந்த பொதுக்குழு எடுக்கின்ற முடிவுக்குக் கட்டுப்பட்டுத்தான் அனைவரும் செயல்படுகின்றோம். அந்த அடிப்படையில்தான் இன்றைய தினம் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டரோடு இணைந்து செயல்படுவோம் என்று அறிவித்தால் தலைமை மூலம் நடவடிக்க எடுக்கப்படும். இது ஏதோ நான் எடுத்த நடவடிக்கை மாதிரி எழுதக்கூடாது. இது மூத்த தலைவர்களோடு கலந்து பேசி, சட்டதிட்ட விதியின்படி தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்”எனத் தெரிவித்தார்.