அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கட்சித் தலைமையகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் முந்தைய 10 ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி திட்டம் மூலம் பயனடைந்த இளைஞர்களுடன் கலந்துரையாடினார்.
மாணவர்கள் மத்தியில் இபிஎஸ் பேசியதாவது ;
“அற்புதமான நிகழ்ச்சி, மடிக்கணினி பயன் என்ன, அது கிடைக்காமல் மாணவர்கள் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் உங்களுடன் கலந்துபேசியதன் மூலம் தெரிந்துகொண்டோம். இதையெல்லாம் மாண்புமிகு அம்மா அவர்கள் அறிந்திருந்த காரணத்தினால் தான், அறிவுப்பூர்வமான மாணவர்கள் உருவாக வேண்டும், தரமான கல்வி கிடைக்க வேண்டும், உலகத்தரத்துக்கு ஏற்ற கல்வி கிடைக்க வேண்டும், அதிலும் இன்று விஞ்ஞான உலகம், அதற்கேற்றவாறு மாணவர்களை மாற்றவேண்டிய தேவை இருக்கிறது என்ற் அடிப்படையில் தான் இந்த மடிக்கணினி திட்டத்தையே அம்மா அவர்கள் அறிமுகம் செய்தார்கள்.
இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இத்திட்டம் கொண்டுவரப்படவில்லை. முதன்முதலில் நம்முடைய தமிழகத்தில் தான் மாணவர்களுடைய நலன் கருதி, எதிர்கால நலன் கருதி மடிக்கணினி திட்டம் கொண்டுவந்து வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார்கள். 2011 முதல் 2021வரை மாணவர்களுடைய பொற்கால ஆட்சி என்றே கூறலாம். அவ்வளவு நன்மைகள் இந்தக் காலகட்டத்தில் கிடைத்தது. இதற்கு முன்பாக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இருக்கும்போது, கல்லூரிகள் குறைவு. அதனால் நிறைய கல்லூரிகளைக் கொடுத்தார்கள், அம்மாவும் நிறைய கல்லூரிகளைக் கொடுத்தார்கள்.
அதைப் பின்பற்றி அம்மாவுடைய அரசிலும் தனியார் மற்றும் அரசு கல்லூரிகள் பல திறக்கப்பட்டது. அதன் விளைவாகத்தான் இந்தியாவிலேயே உயர்கல்வி படிப்பதில் முதல் மாநிலம் என்ற பெருமையை தமிழகம் அதிமுக ஆட்சியில் எட்டியது. மத்திய அரசின் தகவலின்படி 2030ல் அடைய வேண்டிய இலக்கை, நாம் அதிமுக ஆட்சியில் 2019-20லேயே அடைந்துவிட்டோம். அப்படிப்பட்டப் பெருமையைத் தேடித்தந்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம்.
2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்போது 100க்கு 32 பேர் தான் உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை இருந்தது. கல்வியில் புரட்சி, மறுமலர்ச்சி ஏற்படுத்தியதன் விளைவு, 2019-20 100க்கு 52 பேர் உயர்கல்வி படிக்கும் வகையில் எண்ணிக்கை உயர்ந்து நாட்டிலேயே முதல் மாநிலம் என்ற பெருமையைப் பெற்றோம்.
இன்று நாட்டில் எத்தையோ துறைகள் இருக்கின்றன. அம்மா அவர்கள் எண்ணிப்பார்த்தார்கள், எந்த ஒரு மாநிலம் கல்வியில் சிறக்கின்றதோ, அம்மாநிலம் அனைத்துத் துறைகளிலும் உயரும். அந்த மாநிலத்தில் வளம், அமைதி கிடைக்கும். கல்வி என்பது அழியாச் செல்வம், யாராலும் பறிக்க முடியாது. அப்படிப்பட்ட அழியாச் செல்வத்தை மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்றுதான் நிறைய திட்டத்தைக் கொடுத்தோம்.
அதிமுக ஆட்சியில் மட்டும் 17 அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவந்தோம், அதில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி என்னுடைய ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இது ஒரு வரலாற்றுச் சாதனை. யார் யாரோ ஏதேதோ சொல்வார்கள், நீங்கள் எல்லாம் சிந்திக்க வேண்டும், எந்த அரசாங்கம் மாணவர்களைப் பற்றி சிந்திக்கிறது, செயலாற்றுகிறது என்பதை எண்ணி அதற்குத் தக்கவாறு நீங்கள் ஆட்சிக்குக் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் அரசும் நன்றாக இருக்கும், உங்களுடைய எதிர்காலமும் நன்றாக இருக்கும்.
யாரோ எதையோ சொல்வார்கள், அதெல்லாம் கனவுபோல் மறைந்துவிடும். ஆனால், அதிமுக அரசாங்கம் என்பது மக்களுக்காக நன்மை செய்த அரசாங்கம், மக்களுக்காகத் தொடங்கப்பட்டக் கட்சி அதிமுக. அதுமட்டுமல்ல, கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், 7 சட்டக்கல்லூரிகளை கொண்டுவந்தோம். நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் மட்டும், 6 சட்டக்கல்லூரிகளை திறந்தோம். அவைகள் அப்புறதமான சட்டக்கல்லூரிகள். இன்று விழுப்புரம், சேலம், போய் பாருங்கள். Latest ஆன வசதிகளுடன் திறந்துள்ளோம். நூலகங்கள் எல்லாம் பெங்களூருவில் உள்ள சட்டக்கல்லூரியில் உள்ள வசதிகளை போல், உயர் தரத்தில் உருவாக்கி கொடுத்துள்ளோம். விழுப்புரம் சட்டக்கல்லூரியில் பிரமாண்டமான கலை அரங்கம் கட்டிக்கொடுத்துள்ளோம். இப்படி மாணவர்களின் திறமையை வளர்க்க, சட்டம் பயிலும் மாணவர்களுக்குத் தேவையான வசதிகள் அனைத்தையும் நாங்கள் செய்து கொடுத்தோம்.
பாலிடெக்னிக் கல்லூரி 21, பொறியியல் கல்லூரி 4, கால்நடை மருத்துவக் கல்லூரி 5 கொடுத்தோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா நம் சேலம் மாவட்டத்தில் ஆயிரம் கோடியில், 1050 ஏக்கரில் உருவாக்கினோம் இந்த ஆட்சியில் கிடப்பில் போட்டுவிட்டனர். அதேபோல், 10 ஆண்டுகளில் 68 கலை அறிவியல் கல்லூரி கொடுத்தோம். அதில் சுமார் 40 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியாக இருந்தது, அதில் கட்டணம் அதிகம். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அரசு கலை கல்லூரியாக மாற்றினோம், குறைந்த கட்டணத்தில் மாணவர்கள் பயின்றனர்.
ஆரம்பப் பள்ளி நகரம் முதல் கிராமம் வரை அதிகமாகத் திறந்தோம். தொலைதூரத்தில் இருந்தால் பெற்றோர் அனுப்பவதில்லை. அதனால் 248 தொடக்கப் பள்ளிகளைத் துவக்கினோம். 117 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தினோம். 1079 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்திக் கொடுத்தோம். 604 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தினோம்.
ஏழை, நடுத்தர மாணவர் வசதிக்கேற்ப அந்தப் பகுதியிலேயே ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி திறந்து கற்போருடைய எண்ணிக்கை உயர்த்தினோம். அதேபோல் 120 அரசு மேல்நிலைப் பள்ளிகளை மாதிரிப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு, தனிக் கட்டிடம் கட்டிக்கொடுத்தோம். இன்று நவீன காலமாகிவிட்டது. எல்கேஜி, யுகேஜி எல்லாம் வேண்டும் என்ற நிலை வந்துவிட்டதால், 2381 அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்பெல்லாம் தொடங்கினோம்.
வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவிதமும், விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவிகிதமும் இடஒதுக்கீடு கொடுத்தோம். இதெல்லாம் அதிமுக ஆட்சியில் மாணவர்களுக்குக் கிடைக்கப்பெற்ற வாய்ப்புகள். நீங்கள் எல்லாம் பல கருத்துகளைச் சொன்னீர்கள், மடிக்கணினி கிடைக்காததால் ஏற்பட்டப் பாதிப்புகளையும், கிடைத்ததால் அடைந்த நன்மைகளையும் சொன்னீர்கள், இதுதான் அதிமுக ஆட்சி. மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள், நாட்டு மக்கள் எண்ணும் எண்ணங்களைப் பிரதிபலித்தது அதிமுக அரசு.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பலமுறை சட்டமன்றத்தில் மடிக்கணினியின் பயன்களை எடுத்துச்சொன்னோம், அதையெல்லாம் அலட்சியப்படுத்தி விட்டு இப்போது கொடுப்பதாகச் சொல்கிறார்கள். எங்கள் மீதிருக்கும் கோபத்தில் மாணவர்களைப் பழி வாங்காதீர்கள் என்று சொன்னோம். அடுத்தாண்டு தேர்தல் வருகிறது, மாணவர்கள் இளைஞர்களின் வாக்குகள் தேவை, அவர்களது செல்வாக்கை இழந்துவிட்டது, நல்ல பலன்களை திமுக அரசு முடக்கிவிட்டது. அந்தக் கோபத்தைத் தணிக்கும் விதமாக, ஓட்டுப்போடுகின்ற வயது கல்லூரி மாணவர்களுக்குத்தான். அதனால் 10 லட்சம் பேருக்கு மட்டும் கொடுப்பதாக அறிவித்துள்ளனர்.
கொடுப்பது வரவேற்கத்தக்கது, ஆனால் எப்போது கொடுக்க வேண்டும்.? கல்லூரி திறப்பதற்கு முன்பாகக் கொடுத்திருந்தால் கல்லூரி மாணவர்கள் எல்லாம் மடிக்கணினி வாங்கியிருக்க மாட்டார்கள். 5 மாதம் கழித்து கொடுப்பதாக அறிவித்துள்ளனர், இப்போது கொடுப்பதால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை ஏனெனில் அவர்கள் எல்லோரும் ஏற்கனவே லேப்டாப் வாங்கிவிட்டனர். இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் இன்னும் இரண்டு மாதத்தில் முடித்துவிட்டு செல்வார்கள். இப்படித் திட்டமிடாமல் செய்வதால் மாணவர்களுக்குப் பலனில்லை.
காலை உணவுத் திட்டம் தொடங்கப்படும் போது முதல்வர் சொன்னார், ஓட்டுக்காக இந்தத் திட்டத்தைத் தொடங்கவில்லை என்றார், இப்போது எதற்குக் கொடுக்கிறார் லேப்டாப்? அதிமுக ஆட்சியில் 11 மற்றும் 12ம் வகுப்பிலேயே கொடுத்தோம். இந்த ஆட்சியில் கொடுக்கவில்லை, ஓட்டுப்போடும் வயது வந்தவர்களுக்குக் கொடுக்கிறார்கள். பள்ளி மாணவர்களுக்கு வாக்கு இல்லை என்பதால் கண்டுகொள்ளாமல் பழி வாங்குகிறார்கள். மக்களின் செல்வாக்கை இழந்ததால் மாணவர்களின் ஓட்டுக்காகத்தான் இப்போது கொடுக்கிறார்களே தவிர, மாணவர்களின் நலன் கருதி கொடுக்கவில்லை.
பிறருடைய லேப்டாப்பை வைத்து கல்வி பயின்றோம் என்று சொன்னீர்கள். தனக்கு மட்டுமல்ல, தனக்குப் பின்னால் குடும்பத்தில் வருபவர்களுக்கும் இந்த மடிக்கணினி பயனளிக்கிறது. இப்படிப்பட்டத் திட்டத்தை உருவாக்கியவர் அம்மா அவர்கள். வேலைவாய்ப்பு என்பது மிக முக்கியம். அதன் அடிப்படையில் அதிமுக ஆட்சியில் அம்மா முதல்வராக இருந்தபோது தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டது, 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது, அந்த ஒப்பந்தங்கள் எல்லாம் நடைமுறைக்கு வந்து தொழிற்சாலைகள் எல்லாம் இயங்கிவருகிறது. அம்மா வழியில் வந்த அரசு 2019 ஜனவரியில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி சுமார் 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு, 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அதன் மூலம் பல தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு வந்தது, இளைஞர்களுக்கு வேலை கிடைத்தது.
படித்து முடித்த பின்னர் வேலைவாய்ப்பு உருவாக்கிக் கொடுத்தது அதிமுக அரசுதான். இந்த அரசு கூட தொழில் முதலீடுகளை ஈர்த்தோம் என்றனர். எவ்வளவு முதலீடு ஈர்க்கப்பட்டது என்று வெள்ளை அறிக்கை கேட்டேன், வெள்ளைப் பேப்பரைக் காட்டினார் அமைச்சர். இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் உங்களைப் போன்ற மாணவர்களுக்குத் தெரியவேண்டும் என்பதால் சொல்கிறேன்.
ஜெர்மனி செல்லும்போது முதல்வர் பேசும்போது, 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, 10 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும் இதன்மூலம் 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்றும், அதில் 77 சதவிகித ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டன என்றும் சொன்னார். அப்படி என்றால் சுமார் 25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். அப்படிக் கிடைத்ததா இந்த நான்காண்டில்? முதல்வரே பச்சைப் பொய் சொல்கிறார். சொல்வது அத்தனையும் பொய். பொய்யை மூலதனமாக வைத்துதான் திமுக அரசு செயல்படுகிறது. அரசியலுக்காகச் சொல்லவில்லை, மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்கிறேன்.
2021 தேர்தல் அறிக்கையில் அரசு காலிப் பணியிடம் 2 லட்சம், அரசு சார்ந்த காலிப் பணியிடம் மூன்றரை லட்சம் ஆக மொத்தம் ஐந்தரை லட்சம் காலிப் பணியிடம் நிரப்பப்படும் என்று சொன்னார்கள். ஆனால், இந்த ஆட்சியில் 50 ஆயிரம் பேருக்குத்தான் அரசு வேலை கிடைத்திருக்கிறது. 75 ஆயிரம் பேர் பணி ஓய்வு பெற்றுவிட்டனர். அதிலேயே 25 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடம் குறித்துக் கேள்வி கேட்டால் பதிலில்லை.
வருகை புரிந்து சிறப்பான கருத்துக்களை தெரிவித்த அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றி. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஐடி பிரிவு மாநிலச் செயலாளர் ராஜ்சத்யன் உள்ளிட்டவர்களுக்கு நன்றி” என்று பேசினார்.
மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில்
நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாகப் பதிலளித்தார் எடப்பாடியார்.
கேள்வி : லேப்டாப் திட்டம் எப்படி கொண்டுவரப்பட்டது..?
இபிஎஸ் : என்னென்ன திட்டம் கொண்டு வந்தால், மாணவர்கள் வளர்ச்சியடைவார்கள் என்று நினைத்து, அம்மா கொண்டு வந்த திட்டம் தான், லேப்டாப் திட்டம். அதனால் தான் நீங்கள் எல்லாம் வளர்ச்சி பெற்று இருக்கிறீர்கள். அதிமுக ஆட்சியை பெறுத்தவரை மாணவர்களுக்கு பொற்கால ஆட்சி என்று சொல்லலாம். அந்த அளவிற்கு, குறிப்பாக அரசு பள்ளியில் படிக்கிற மாணவர்களுக்கு, ஏழை குடும்பத்தில் வளர்ந்த, நடுத்தர, விவசாய குடும்பத்தில் பிறந்த குழந்தைகள் தான், அதிக அளவில் படிக்கிறார்கள். இதை எல்லாம் அம்மா நினைத்து, அந்த மாணவர்களின் கனவு நினைவாக,தனியார் பள்ளியில் படிக்கிற மாணவர்களுக்கு இணையாக, அரசு பள்ளியில் படிக்கிற மாணவர்களுக்கும் அறிவுத்திறன் கிடைக்க வேண்டும் என்று எண்ணிதான், லேப்டாப்பை கொடுத்தார்கள். தாய் தனது குழந்தைக்கு என்னென்ன செய்வாரோ அதேபோல், அரசு பள்ளியில் படிக்கிற மாணவர்களுக்கு ஏராளமான திட்டங்களை கொண்டுவந்தவர் அம்மா..
கேள்வி: 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற ஐடியா எப்படி உங்களுக்கு வந்தது...?
பதில்: நானும் உங்களைப்போல் என் ஊரில் கிராமத்தில், அரசு பள்ளியில் தான் படித்தேன். தற்போது அரசு பள்ளியில் படித்தவர்கள் சுமார் 41 சதவீதம் பேர் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 3 லட்சத்து 70 ஆயிரம் பேர். கடந்த 2017- 18-ம் ஆண்டில் நான் முதலமைச்சராக இருந்த போது, இந்த நீட் தேர்வில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்று கணக்கெடுத்தோம். அப்போது, வெறும் 9 பேர் தான் அரசு பள்ளியில் படித்தவர்கள். 41 சதவீதம் பேர் படிக்கிற அரசு பள்ளியில் 9 பேர் மட்டும் மருத்துவக்கல்லூரிக்கு சென்றார்கள். அப்போது தான் சிந்தித்தோம். நாமும் அரசு பள்ளியில் படித்து வந்தோம், அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.
இங்கே கூட சிலர், பெற்றோர்கள் இல்லை, தாய் தந்தையர் கூலி வேலை செய்கிறார்கள் என்று மாணவர்கள் சொன்னார்கள். தாய் தந்தையோடு சேர்ந்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் வேலைக்கு செல்வார்கள், வீட்டு வேலை செய்வார்கள், இதற்கிடையில் தான், அவர்கள் கல்வி கற்க முடியும். திறமை இருந்தாலும், அந்த திறமையை வெளிப்படுத்த முடியாத ஒரு சூழ்நிலை. அப்படிப்பட்ட மாணவர்களும் மருத்துவராக வேண்டும் என்ற அடிப்படையில் தான், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை கொண்டு வந்து நிறைவேற்றினோம்.
இதனால் இன்றைய தினம் சுமார் 3000 பேருக்கு மருத்துவக்கல்வி கிடைத்து இருக்கிறது. இப்படி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியவில்லை என்று என் கவனத்திற்கு வந்தது. அப்போது, உடனே, 7.5 ஒதுக்கீட்டில் இடம் கிடைத்த மருத்துவக்கல்லூரி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று உத்தரவிட்டேன். ஒரு ரூபாய் செலவு இல்லாமல், அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு, மருத்துவம் படிக்க வழிவகை செய்த அரசு, அதிமுக அரசு.
கேள்வி: என் வீடு அருகே அம்மா உணவகம் இருந்தது, அதில் பலர் சாப்பிட்டு பயனடைந்தார்கள். ஆனால் இப்போது அந்த அம்மா உணவம் அருகே குப்பை மேடாக மாறி செயல்படாமல் இருக்கிறதே.?
பதில்: அம்மா இருக்கும் போது, ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், வேலைக்கு செல்கின்ற இளைஞர்கள், மாணவர்கள் எல்லாம் குறைந்த விலையில், தரமான உணவு கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான், அம்மா உணவகம் கொண்டுவரப்பட்டது. இந்த ஆட்சியாளர்கள் அதிமுக ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்றால், அதை அப்படியே கைவிட்டு விடுகிறார்கள். அதற்கு சரியான பராமரிப்பு இல்லை. அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை அம்மா உணவகம், மிக சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருந்தது. ஏழை எளியோருக்கு குறைந்த கட்டணத்தில் வயிறார உணவு கொடுத்தோம்.
திமுக ஆட்சிக்கு வந்த பின், அம்மா உணவகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களை குறைத்து விட்டார்கள், தேவையான அளவுக்கு தரமான மளிகைப் பொருள் வாங்கிக் கொடுப்பதில்லை. இதனால் தரம் குறைகிறது. இப்படி செய்தால் யாரும் வரமாட்டார்கள் படிப்படியாக குறைத்து விடலாம் என்று நினைத்து, திமுக அரசு செயல்பட்டு வருகிறது. மீண்டும் அம்மா அரசு ஆட்சிக்கு வந்ததும் அம்மா உணவகம் செயல்பாட்டுக்கு வரும்.
கேள்வி: அரசுக்கல்லூரிகளில் கழிவறை, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியில்லை. முறையான உணவு வழங்குவதில்லை, அதை அதிமுக ஆட்சிக்கு வந்த பின் சரிசெய்ய வேண்டும்…
பதில் : அதிமுக ஆட்சி இருக்கும் வரை அவ்வப்போது அமைச்சர்கள் ஆய்வு செய்வார்கள். உங்களைப்போல் மாணவர்கள் கொடுத்த மனுக்களை ஆராய்ந்து, உடனடியாக பிரச்சனைகள் தீர்த்து வைப்பார்கள். இந்த ஆட்சியில் அவையெல்லாம் கிடையாது. இப்போ கூட பாருங்கள், அதிதிராவிடர் மாணவர் விடுதியில், எவ்வளவு மோசமான நிலை இருக்கிறது.
ஒரு வாரத்திற்கு முன் கூட அறிக்கை வெளியிட்டேன். ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு முறையாக உணவுக்கட்டணம் அனுப்பவில்லை. மாணவர்கள் பாதிக்க கூடாது என்பதற்காக ஹாஸ்டல் வார்டன் தனது சொந்த பணத்தை போட்டு, அவர்களுக்கு உணவு அளித்திருக்கிறார். அரசு பணம் அனுப்பாததால் தான், இது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன என சுட்டிக்காட்டி நான் அறிக்கை கொடுத்தேன். இதை அரசு சரி செய்ய வேண்டும். சில இடங்களில் உணவு தயாரிக்கும் முறை கூட மோசமாக இருக்கிறது. அதிமுக அரசை பொறுத்தவரை மாணவர்கள் என்பவர்கள் நாட்டை ஆளப்போகிறவர்கள். அவர்களின் பிரச்சனைகளை ஆய்வு செய்து தீர்க்கும் அரசு தான் அதிமுக அரசு. மீண்டும் உங்கள் கனவுகள் எல்லாம் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும்.
கேள்வி: கொரோனா காலத்தில் மற்ற மாநிலங்கள் எல்லாம், மாணவர்களுக்கு என்ன செய்யலாம் என்று தத்தளித்து கொண்டிருந்த போது, உங்களுக்கு மட்டும் எப்படி ஆல் பாஸ் போட வேண்டும் என்ற எண்ணம் வந்தது...?
பதில்: காலம் என்பது விலைமதிக்க முடியாதது. காலம் கடந்து விட்டால் மீண்டும் அந்த காலத்தை பெற முடியாது. மாணவர்களின் எதிர்காலம் பாதிக்க கூடாது, அவர்களின் மனம் பாதிக்ககூடாது, வீட்டிலேயே அடைத்து வைத்திருந்ததால், மாணவர்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டார் என்று எனக்கு நன்றாக தெரியும். சுதந்திரமாக சுற்றித்திரிந்த மாணவர்களுக்கு, தொற்று பரவி விடக்கூடாது என்பதால் அடைத்து வைத்திருந்தோம். இதனால் மாணவர்களின் நலன் கருதி அதிமுக அரசு ஆல்பாஸ் போட்டோம். ஒராண்டு காலம் கடந்து விட்டால், உங்களுக்கு பயன் கிடைக்காது என்பதால் தான் கொடுத்தோம்.
அதிமுக ஆட்சியில், ஆன்லைனில் வகுப்பு நடத்தினோம்.. அதோடு ஆன்லைனில் தேர்வும் எழுத அனுமதித்தோம். மோசமான கொரோனா காலகட்டத்தில் அதிமுக அரசு, விலைமதிக்கமுடியாத உயிர்களை காப்பாற்றியது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்து ஆல்பாஸ் போட்டோம்.
கேள்வி: 2020-21-ம் ஆண்டுகளுக்கு பிறகு நிறைய பேருக்கு லேப்டாப் கிடைக்கவில்லை.ஐ.டி துறைக்கு போகிறவர்களுக்கு முதலாம் ஆண்டிலிருந்தே, கண்டிப்பாக லேப்டாப் தேவைப்படும். எனக்கு கிடைக்கவில்லை.எனது அக்காவிடம் இருந்த லேப்டாப்பை பயன்படுத்திக்கொண்டேன். ஆனால், மற்றவர்களுக்கு எனக்கு கிடைத்தது போல் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தால், அவர்கள் கஷ்டப்பட்டார்கள். இனி இதுபோல் நடக்காமல் அனைவருக்கும் லேப்டாப் கிடைக்க வேண்டும்.
பதில்: அதிமுக ஆட்சி காலத்தில், அம்மா மறைந்த பிறகும், அவரது திட்டங்களை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்தி வந்தோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை எல்லாம், திமுக அரசு பறித்து விட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி மலரும், உங்கள் கனவு நினைவாகும்.லேப்டாப் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/18/eps-cm-2025-12-18-11-20-25.jpg)