உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் இன்று (15-01-26) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையையொட்டி, அதிகாலையில் எழுந்த மக்கள் புத்தாடை அணிந்து, ஒவ்வொரு இல்லங்களிலும் வண்ணக்கோலமிட்டு பொங்கலிட்டு சூர்ய பகவானை வழிபாடு செய்து வருகின்றனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை களைகட்டியுள்ளது. இந்த தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இந்த ஆட்சி கொடுத்த வாக்குறுதியை நிறைவேண்டுமென ஆசிரியர்கள் போராட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள். கூட்டணியில் சில கட்சிகள் வரும். அதை பகிரங்கமாக சொல்ல முடியாது. அதிமுக தலைமையில் அமைக்கப்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தலை சந்திக்க இருக்கிறோம். திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ் அந்த கூட்டணியில் இருக்குமா? இருக்காதா? என்பது சந்தேசக நிலைக்கு வந்துவிட்டது.  

Advertisment

அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டம் என்பது ஒரு நாடகம். ஏற்கெனவே மத்திய அரசு அறிவித்த திட்டத்தை அப்படியே பூசி நன்மை கிடைக்கிற மாதிரி ஒரு நாடகத்தை முதல்வர் அரங்கேற்றி இருக்கிறார். மத்திய அரசு அறிவித்த ஓய்வூதிய திட்டத்தை தான் இந்த அரசும் அறிவித்திருக்கிறது. இதில் எந்த மாற்றமும் செய்யவில்லை. எனக்கு தெரிந்த அளவுக்கு எதுவுமே புதிதாக இல்லை. அவர்கள் கேட்ட கோரிக்கையை இந்த அரசு நிறைவேற்றவில்லை. சில சங்கங்கள் ஆதரவு கொடுத்திருப்பதாக தெரிகிறது. ஆனால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் இதை ஏற்கவில்லை” என்று கூறினார்.

அதனை தொடர்ந்து அதிமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் வர வாய்ப்புள்ளதா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “அதெல்லாம் கால சூழலுக்கு தகுந்த மாதிரி நடக்கும். எங்களை பொறுத்தவரைக்கும் எது நடக்குமோ அதை தான் சொல்வோம். கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது. ஆனால் திமுக ஓட்டுக்காக ஆட்சி செய்கிறார்கள். ஓட்டு வர வேண்டும், மக்களை ஏமாற்ற வேண்டும். அதற்காக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை எல்லாம் கொடுத்து மக்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வருகிறார்கள். அதன் பிறகு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டிக்கிறார்கள். கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள நிறைவேற்ற வேண்டுமென்று தான் களத்தில் போராடிட்டி இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார். 

Advertisment