EPS criticize CM Mk stalin and he says not enough to just sit in the control room and conduct shooting
டிட்வா புயல் காரணமாக தற்போது பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, “கடந்த 27.11.2025 முதல் இன்று வரை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மற்றும் ‘டிட்வா’ புயல் காரணமாக பெய்து வரும் கனமழையினால், டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி முழுமையாக பாதிப்படைந்துள்ளன. மேலும், பல மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு, வெற்றிலை உள்ளிட்ட இதர பயிர்களும் கனமழையின் காரணமாக பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பயிர் காப்பீட்டின் போது பட்டாவில் நேரடி பெயர் இல்லாதவர்கள், இறந்தவர்களின் பெயரில் உள்ள நிலங்களில் விவசாயம் செய்பவர்கள் என்று பலர் பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலையில் உள்ளதாக, பாதித்துள்ள விவசாயிகள் திமுக அரசின் மீது புகார் தெரிவிக்கின்றனர். ஜெயலலிதா ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டு, தமிழகம் முழுவதும் வந்த குடிமராமத்துப் பணி திட்டத்தினால் தமிழகத்தின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. 2021-ல் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, குடிமராமத்துப் பணியை ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு நிறுத்திவிட்டதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
பருவமழைக்கு முன் டெல்டா மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்களை தூர் வாருங்கள் என்று நான் அடிக்கடி சட்டமன்றம், பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் அறிக்கைகள் வாயிலாக இந்த திமுக அரசை வலியுறுத்தினாலும், இந்த அரசு தூர் வாருவதில் அலட்சியம் காட்டியதால், டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் நெல் பயிரிட்ட வயல்கள் தண்ணீரில் மூழ்கி விவசாயிகளுக்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையில் டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்ல, ராமேஸ்வரம் நகரமே நீரில் மூழ்கி அங்குள்ள மக்கள் தத்தளித்து வருகின்றனர். அவர்களின் துயரைத் துடைக்க சிறு துரும்பையும் கிள்ளிப் போடாத நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் ஸ்டாலின், புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வேன் என்று வாய்ச் சவடால் அடிக்கிறார். ராமேஸ்வரம் நகர மக்கள் 2-3 நாட்களாக அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் சிரமப்படும்போது, மக்களைப் பற்றி கவலையில்லாமல் திமுக-வின் முதலமைச்சர் ஸ்டாலின், வாக்கிங் போகும்போது நடிகையுடன் பேசுவதை, வலைதளத்தில் பதிவிடுகிறார்.
மழைக்காலத்தில் கன்ட்ரோல் ரூமில் உட்கார்ந்து ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது. பாதிக்கப்பட்ட மக்களை திமுக அரசின் முதலமைச்சர் நேரில் சந்திக்கச் சென்றால்தான், கீழே பணியாற்றும் அமைச்சர்களும், அதிகாரிகளும் விரைந்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். டெல்டா மாவட்ட விவசாயிகள் ஏக்கருக்கு சுமார் 35 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிரிட்ட நெற் பயிர், டிட்வா புயல் மழையினால், தண்ணீரில் முழுமையாக மூழ்கியுள்ளன என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். காரணமாக டிட்வா புயல் மற்றும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது பெய்து வரும் கன மழையினால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வெள்ள நீரில் மூழ்கி சேதமடைந்துள்ள விவசாய நிலங்களை வேளாண் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Follow Us