பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில்  (Asian Youth Games - 2025) தமிழகத்தைச் சேர்ந்த கபடி வீரர்களாக கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் தங்கம் வென்றனர்.  இதனையடுத்து அவர்கள் இருவரும் சென்னை திரும்பியதும், நேராக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இல்லத்திற்குச் சென்று வாழ்த்துப் பெற்றனர்.

Advertisment

அத்தோடு இருவருக்கும் தலா 25 லட்ச ரூபாயை ஊக்கத்தொகையாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை கபடி வீரங்கனை கார்த்திகா இன்று (28.10.2025) நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

Advertisment

இது தொடர்பாக  எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆசிய இளையோர் போட்டியில் வெற்றி வாகை சூடிய இந்திய வீராங்கனை, சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகாவை வாழ்த்தி மகிழ்ந்தேன். எளிய பின்னணியில் இருந்து தன்னுடைய திறமையாலும், விடாமுயற்சியாலும் கபடி விளையாட்டில் ஜொலித்து வரும் கார்த்திகா, மென்மேலும் பல வெற்றிகளைக் குவித்து, தமிழ்நாட்டிற்கும், இந்தியத் திருநாட்டிற்கும் பெருமைகளை அள்ளிக் குவிக்க வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.