தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தல் களம் தற்போது முதலே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கணக்குகள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன.

அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஒரு நாளைக்கு மூன்று தொகுதிகளில் பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி, மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார்.

இந்தப் பயணத்தின் போது, மக்களிடையே உரையாற்றும் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசுக்கு எதிரான விவகாரங்களை எடுத்துரைத்து, அரசின் ஊழல் குற்றச்சாட்டுகளை விமர்சித்து வருகிறார்.  அப்போது பேச்சின் இறுதியில், "பை... பை... ஸ்டாலின்" (bye bye Stalin) என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஆனால், நேற்று முதல் அந்த வார்த்தையை எடப்பாடி பழனிசாமி தவிர்த்து வருகிறார். இந்த மாற்றத்தை உளவுத்துறை முதல் பிற அரசியல் கட்சிகள் வரை உற்று நோக்கி வருகின்றன. இதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது, சிறிய உடல்நலப் பரிசோதனைக்காக முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்தச் சூழலில், அந்த வார்த்தையைப் பயன்படுத்துவது அரசியல் நாகரீகமாக இருக்காது என்று கருதி, அதனை எடப்பாடி பழனிசாமி தவிர்த்து வருவதாக அதிமுக வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.