அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பயணத்தை இன்று கடலூர் சட்டமன்றத் தொகுதியில் தொடங்கினார். ரெட்டிசாவடி, மஞ்சகுப்பம், டவுன்ஹால் பகுதியில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஹோட்டல் உட்லண்டஸ் அருகில் ரோடு ஷோ நடத்தியவர்,மக்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, ‘’தானே புயல் கடலூர் மாவட்டத்தைப் புரட்டிப்போட்டதால் கடுமையான சேதம் ஏற்பட்டது. அதை சீர்செய்தோம். வேளாண் மக்களுக்கு நஷ்டம், கஷ்டம் ஏற்பட்ட நேரமெல்லாம் நிவாரணம் கொடுத்த ஒரே அரசு அதிமுக.விவசாயிகள் மீண்டும் பயிர் செய்ய முந்திரி நாத்துகள் கொடுத்தோம். மரம் வளர்ப்பதற்கு4000 ரூபாய் அதிமுக கொடுத்தது.

விலையில்லா மாடு, ஆடு, கோழி எல்லா திட்டத்தையும் இப்பநிறுத்திட்டாங்க. மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு ஏழைகளுக்கு விலையில்லா கறவை மாடுகள் திட்டம் கொண்டுவரப்படும். ஏழை பெண்கள் திருமணம் செய்ய தாலிக்குத் தங்கம் கொடுத்தோம். ஏழைகள் என்ன பாவம் செய்தனர்..? அந்த திட்டத்தை மீண்டும் ஜெயலலிதா அரசு மலர்ந்தவுடன் தொடர்வோம்.

கடலூர் வேளாண் பெருமக்கள் நிறைந்த மாவட்டம். விவசாயிகளுக்கு திமுக ஒன்றும்செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் பயிர்க்கடன் இரண்டுமுறை தள்ளுபடி செய்தோம், பசுமை வீடுகள் கொடுத்தோம்.தானே புயலால் குடிசைகள் அழிந்து போனது. இந்த கடலூர் மாவட்டத்தைகுடிசைகள் இல்லாத மாவட்டமாக மாற்றியவர் ஜெயலலிதா. 90 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுத்தோம்.

Advertisment

ஸ்டாலின் 1000 ரூபாய் கொடுத்தேன் என்கிறார். அவர் எங்கே கொடுத்தார். நாங்கள் 28 மாதம் கேட்டுக்கொண்டே இருந்தோம், அதனால்தான் கொடுத்தார். அவருக்கு பெண்களிடம் எதிர்ப்பு வந்துவிடுமோ என்று அஞ்சியே கொடுத்தார், பெண்களுக்கு இரக்கப்பட்டு கொடுக்கவில்லை. தேர்தலுக்கு 8 மாதமே இருக்கும் நிலையில், விடுபட்ட 30 லட்சம் பேருக்குக் கொடுப்போம் என்கிறார். ஸ்டாலினுக்கு மக்கள் செல்வாக்கு போய்விட்டது. அதனாலே இந்த அறிவிப்பு செய்திருக்கிறார்.

இந்தியாவிலேயே சூப்பர் முதல்வர் என்று முதல்வர் பேசுகிறார். எதில் சூப்பர் முதல்வர்…? கடன் வாங்குவதில் தான் சூப்பர் முதல்வர். கடன் வாங்கித்தான் 1000 ரூபாய் கொடுக்கிறார். உங்கள் மீது தான் அந்த சுமையை சுமத்துகிறார். வரி போட்டு அந்த வரியை வைத்துதான் கடனை செலுத்துவார்.

73 ஆண்டுகளில் அதாவது 2021 வரை 5 லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன். இந்த நான்கு ஆண்டுகளில் 4 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் வாங்கியிருக்கிறார். இந்த ஆண்டு 1 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம் போட்டிருக்கிறார். மொத்தம் 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன். குழந்தை பிறக்கும்போதே கடனாளி. மக்கள் மீதுதான் சுமை. தமிழகத்தை 10 லட்சத்து 46 ஆயிரம் கோடி கடனில் தத்தளிக்க விட்டது திமுக. அரசின் சாதனை’’ என்றார்

Advertisment

மேலும், கடலூரில் பேசும்போது,‘’திமுக ஆட்சிக்கு வந்தால் கிராமப்புறங்களில் உள்ள 100 நாள் வேலைதிட்டம் 150 நாளாக உயர்த்தப்படும், சம்பளம் கூடும் என்றார். இப்போது 50 நாள் தான் வேலை கிடைக்கிறது. சொன்னதை செய்யவே மாட்டார்கள். மக்களை ஏமாற்றுவதில் விஞ்ஞான புத்தி படைத்த கட்சி திமுக.

கோட்ஷூட் போட்டு போட்டோ எடுப்பார், 52 திட்டம் அறிவிச்சு 52 குழு போட்டார். அதோடு திட்டம் முடிந்துபோனது. அதிமுக ஆட்சியில் குடிமராமத்து பணிகள் ஏரி, குளம், தூர்வாரல். வண்டல் மண் இயற்கை உரமாக கொடுக்கப்பட்டது. இந்த திட்டத்தையும் கைவிட்டனர்.

மகன் உதயநிதி ரெட் ஜெயிண்ட் மூவிஸ் படங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி விநியோகிக்கிறார். என்னுடைய கம்பெனிக்குதான் படம் கொடுக்கனும் என்று மிரட்டி வாங்குறார். சினிமாவையும் விட்டுவைக்கல. 120 படம் வெளியாகலை அதை அடிமாட்டு விலைக்கு கேட்கிறார்.

டாஸ்மாக் ஒருநாள் ஒன்றரைக் கோடி பாட்டில் மாதம் 450 கோடி, வருடம் 5,400 கோடி ஊழல்.மேலிடத்துக்குச் செல்கிறது. எந்த மேலிடம் என்று தெரியவில்லை. அமலாக்கத்துறை 1000 கோடி கண்டுபிடித்திருக்கிறது. மேலும் 49000 கோடிக்கு கணக்கெடுத்து வருகிறார்கள். பெரிய தலைகள் சிக்குவாங்க. தேர்தல் நேரத்தில் தலைகள் எல்லாம் பத்திரமா இருக்க வேண்டிய இடத்துல இருப்பாங்க. 8 மாதம் தான் உங்கள் ஆட்டம்..’’ என்றார்.