கோவையில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த செம்மொழிப் பூங்காவை, தமிழக முதல்வர் கடந்த 25ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார். இந்த பூங்கா, உலகத்தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208.50 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை, கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவை சென்றிருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Advertisment

இந்த நிலையில், அவசரகதியில் விளம்பத்திற்காக இந்த பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது என திமுக அரசு மீது எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாவது, “கோவையில் அவசர கதியில் வெற்று விளம்பரத்திற்காக திறக்கப்பட்ட செம்மொழிப் பூங்கா திமுகவின் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கண்டனம். கடந்த 25ஆம் தேதியன்று கோவைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஸ்டாலின் காந்திபுரம், சிறைச்சாலை மைதான வளாகத்தில் ரூ.204 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த செம்மொழி பூங்காவை பணிகள் முழுமையாக முடிவடையாமல், அவசர கதியில் விளம்பரத்திற்காக திறந்து வைத்துள்ளார். சுமார் 70 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளதாக கோவை மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்

Advertisment

இந்த திட்டத்திற்கு சுற்றுச்சுழல் SEIA Clearance (State Environmental Impact Assessment Clearance from TNPCB) அனுமதி பெறப்படவில்லை. 30% மரங்கள் நடப்படவில்லை, செயற்கை புல் தரைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது, முன் நுழைவு வாயில் முகப்பு பணிகள் முடிவடையவில்லை, போதுமான கழிப்பிட வசதி போன்றவை ஏற்படுத்தப்படவில்லை. விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படவில்லை, கிரானைட் கற்கள் பதிக்கும் பணிகள் முழுமையடையவில்லை.கோவை மாநகராட்சியில் பல இடங்களில் தெரு விளக்குகள் எரிவதில்லை, ஏற்கெனவே இருக்கும் பூங்காக்கள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை என்று மக்கள் அடுக்கடுக்காக புகார்கள் தெரிவித்தும் ஏற்கெனவே அளித்த நிர்வாக அனுமதியைக் காட்டிலும் 40 கோடி ரூபாய் கூடுதலாக செலவிட்டும், முழுமை பெறாத இந்தப் பூங்காவை அவசர அவசரமாகத் திறந்தது ஏன்? மேலும், பல பணிகள் ஒப்பந்தப் புள்ளி கோரப்படாமல், நாமினேஷன் முறையில் திமுக அரசுக்கு வேண்டிய ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் செய்திகள் தெரிய வருகிறது. 

எனது தலைமையிலான ஜெயலலிதாவின் அரசு, சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் (ஸ்மார்ட் சிட்டி) கோவை மாநகராட்சிப் பகுதியில் உலகத் தரத்தில் அமைக்கப்பட்ட, கோவை மக்களின் பொழுதுபோக்கு இடங்களாகத் திகழ்ந்த பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்த பூங்காக்களான உக்கடம்-பெரியகுளம், குறிச்சி குளம், வாலாங்குளம், முத்தண்ணன் குளம், செல்வசிந்தாமணி குளம், குமாரசாமி குளம், கிருஷ்ணாம்பதி குளம் ஆகியவை தற்போது ஆகாயத் தாமரைகள் படர்ந்து, போதிய பராமரிப்பின்றி கேட்பாரற்று உள்ளது. எங்கள் ஆட்சியில் கட்டப்பட்ட பூங்காக்கள், குளங்கள் என்ற ஒரே காரணத்திற்காக, இவைகளை மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்காமல் உள்ளது.

Advertisment

திமுக அரசு பொறுப்பேற்று 5 ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில், இதுவரை கோவை மாவட்ட மக்களையும், தொழில் துறையினரின் கோரிக்கைகளையும் திமுக அரசு தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது. திமுக அரசு, ஜெயலலிதாவின் அரசு கொண்டு வந்த பல திட்டங்களை கைவிட்டுவிட்டது. இந்நிலையில், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று, அரசு சக்கரத்தை சுழற்றும் குணம் கொண்ட மு.க. ஸ்டாலின், அரைகுறையாக இந்தப் பூங்காவை திறந்து வைத்து கோவை மக்களை ஏமாற்றி வாக்குகளை அறுவடை செய்யலாம் என்று பகல் கனவு காண்கிறார். முதலமைச்சர் ஸ்டாலினின் திமுக அரசிற்கு 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், கோவை மாவட்ட மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி” என்று தெரிவித்துள்ளார்.