EPS Alleged The Chief Minister has cunningly deceived government employees
சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொகுதி மக்களிடம் உரையாற்றினார். அப்போது, “சேலம் மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க ஸ்டீல் பிளான்ட் இடத்தில் 1500 ஏக்கர் கையகப்படுத்த மத்திய அரசுக்கு திட்டம் கொடுத்தோம். மத்திய அரசும் இசைவு கொடுத்தது. ஆனால் திமுக அரசு எடுக்கவில்லை. அப்போது ஒரு கோரிக்கை வைத்தோம், பிரதமர் அதை ஏற்றுக்கொண்டார். அதன்படி ஸ்டீல் பிளான்டில் கையகப்படுத்தும் இடத்தில் ராணுவத் தளவாட உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்றார்.
39 எம்பிக்கள் வென்றும் நாடாளுமன்றத்தில் போராடி அந்த திட்டத்தைக் கொண்டுவரவில்லை. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும், வீரபாண்டி தொகுதிக்குட்பட்ட பகுதியில் தான் ஸ்டீல் பிளான்ட் இருக்கின்றது. இதில் தொழிற்சாலை அமையும்போது சேலம் மாவட்டத்தில் பல்வேறு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும். இதே அதிமுகவில் 39 எம்பிக்கள் இருந்திருந்தால் இந்நேரம் ராணுவத் தளவாட தொழிற்சாலை இயங்கிக்கொண்டிருக்கும். மக்கள் செல்வாக்கு இழந்து பயத்தில் அஞ்சி புதிய திட்டம் அறிவிக்கிறார். தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துவோம் என்றார். ஆனால், இப்போது ஒரு புதிய திட்டம் கொண்டுவந்திருக்கிறார். அரசு ஊழியர் கேட்பது பழைய ஓய்வூதிய திட்டம். ஆனால் ஸ்டாலின் குறிப்பிடுவது உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம். பெயரை மாற்றி இன்று அவர்களை ஏமாற்றுகிறார். வேலை நிறுத்தத்தை நிறுத்த தந்திரமாக உத்தரவு வெளியிட்டுள்ளனர். ஸ்டாலின் அவர்களே, நீங்கள் அரசாணை வெளியிடுகிறபோது தான், அரசு ஊழியர்கள் இந்த அரசைப் பற்றி தெரிந்துகொள்வார்கள்.
திமுக கூட்டணி தடுமாறுகிறது. காங்கிரஸ் இருக்குமா என்றே தெரியவில்லை. தேர்தல் வருகின்ற வரை உங்கள் கூட்டணி நிலைக்குமா என்ற சந்தேகம் மக்களிடம் வந்துவிட்டது. திமுக ஆட்சியில் மின்கட்டணம் 67%, வரிகள் 100% முதல் 150% உயர்வு. பீக் ஹவர் கட்டணம், குப்பைக்கும் வரி. வரி மேல் வரி போட்டு மக்களுக்கு சுமை கொடுத்திருக்கிறது அரசு. சேலம் மாவட்டத்தில் பர்மிட் கொடுக்க வேண்டும் என்றால் பணத்தை கொடுத்தால் தான் கொடுப்போம் என்கிறார். மாவட்ட ஆட்சியருக்கு எச்சரிக்கை விடுக்கிறேன், ஏற்கனவே கட்டுமான தொழில் சரிந்துவிட்டது, இந்த சூழலில் லஞ்சம் கேட்டால் ஜல்லி, எம்சாண்ட் விலையை உயர்த்துவார்கள் அதனால் மக்கள் பாதிப்படைவார்கள். அதனால் மாவட்ட ஆட்சியர்கள் முறையாக நடந்துகொள்ள வேண்டும். பர்மிட் கேட்பவர்களுக்கு கொடுங்கள். திமுக அரசுக்கும் எச்சரிக்கை விடுக்கிறேன், அடுத்து அதிமுக ஆட்சி அமைவது 100% உறுதி. அப்போது சம்பந்தபட்ட அதிகாரிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.
நாடு சிறப்பாக இருக்கவேண்டும் என்றால் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு அப்படியல்ல, சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. மக்கள் ஒவ்வொரு நாளும் அஞ்சி வாழும் நிலை உருவாகியிருக்கிறது. இதைப்பற்றியெல்லாம் ஸ்டாலினுக்குக் கவலையில்லை. நான்கு நாட்கள் முன்பு வடமாநிலத் தொழிலாளர் ஒருவரை நான்கு சிறுவர்கள் போதையில் தாக்குகிறார்கள். கஞ்சா போதை தாண்டவம் ஆடுகிறது. சட்டமன்றத்தில் முதல்வர் கவனத்துக்கு கொண்டுசென்றும் முதல்வர் கவனம் எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி சீரழிகிறார்கள். நமக்கு செல்வம் நம் குழந்தைகள் தான். அந்த குழந்தைகள் நம் கண் எதிரே போதைக்கு சீரழிகிறார்கள். சட்டம் ஒழுங்கு காக்கும் டிஜிபி இதுவரை நியமிக்கப்படவில்லை. நாட்டு மக்களைப் பற்றி கவலைப்பட்டிருந்தால், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட எண்ணியிருந்தால் நிரந்தர டிஜிபி நியமித்திருக்கலாம்.
திமுகவில் உதயநிதியை விட்டால் ஆளே இல்லையா? கலைஞர் குடும்பத்தில் பிறந்த ஒரே காரணம் தான். எத்தனை முறை ஜெயிலுக்குப் போனார்? திமுகவில் அதிக நாட்கள் எம்.எல்.ஏவாக இருந்தவர் அண்ணன் துரைமுருகன், கலைஞர் குடும்பத்தில் பிறக்காததால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. மிசா சட்டத்தில் துரைமுருகனும் பாதிக்கப்பட்டார், ஆனாலும், அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் கிளைச் செயலாளராக பணியைத் துவக்கி படிப்படியாக பொதுச்செயலாளராகி இருக்கிறேன், சட்டமன்ற உறுப்பினர், எம்.பி அப்புறம் முதல்வர். திமுகவில் இப்படி வரமுடியுமா? ஸ்டாலின் தலைவர், உதயநிதி இளைஞரணி தலைவர், கனிமொழி மகளிரணி தலைவர். டெல்லியில் கூட அந்த குடும்பம் தான் பொறுப்புக்கு வரும். இந்த நிலையை வரும் தேர்தலில் மாற்ற வேண்டும்” என்றார்.
Follow Us