சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவின் கீழ் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ராஜாராமன் (வயது 54). இவர் பணி நிமித்தமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனை கைதிகள் வார்டில் பணியாற்றி வந்தார். இத்தகைய சூழலில் தான் இவர் எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனை அருகே உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் விளையாட்டுப் போட்டியில் கடந்த 18ஆம் தேதி (18.07.2025) இரவு கலந்து கொண்டார். அதன்படி ராஜாராமன் நண்பர்களுடன் விளையாடிவிட்டு வெளியே வந்துள்ளார். 

அப்போது இந்த விளையாட்டு இது தொடர்பாக அவருக்கும், அவரது  நண்பர்களுக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் காவல் உதவி ஆய்வாளரை அவரது நண்பர்கள் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை உடனடியாக மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் உதவி ஆய்வாளர் ராஜாராமன் சிகிச்சை பலனின்றி இன்று (26.07.2025) காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தையடுத்து எழும்பூர் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சம்பந்தப்பட்ட இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான எஸ்.ஐ. ராஜாராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை எழும்பூரில் கடந்த ஜூலை 18 அன்று தாக்குதலுக்கு ஆளாகிய ஆயுதப்படை எஸ்.ஐ. ராஜராஜன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சம்பவத்தன்று நள்ளிரவில் மர்ம நபர்களால் எஸ்.ஐ. ராஜராஜன் தாக்கப்பட்டதாக செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், புனைவு முதல் தகவல் அறிக்கைகளுக்கு (FIR) பெயர்போன திமுக அரசு, அஜித்குமார் வழக்கு போலவே இந்த வழக்கிற்கு என்ன கதை எழுதியுள்ளது என தெரியவில்லை. 

Advertisment

ஆனால், ஒரு காவல்துறை உதவி ஆய்வாளர் தாக்குதலுக்கு ஆளாகி, உயிரிழந்துள்ளது என்பது திமுக ஆட்சியின் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதை மீண்டும் மெய்ப்பிக்கிறது. காவல்துறையினர் தாக்கப்படுவது, ராஜினாமா செய்வது, காவல்துறை சீர்கேடுகள் குறித்து போதுவெளியிலேயே தெரிவிப்பது என தொடர்ந்து வரும் செய்திகள் உணர்த்துவது ஒன்றைத் தான் காவல்துறையை நிர்வகிக்க முடியாத முதல்வராக இருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். எஸ்.ஐ. ராஜராஜன் கொலை வழக்கில் நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.