மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற சுற்றுப்பயணத்தில் இன்று நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வலம் வந்தார் எடப்பாடி பழனிச்சாமி. எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள், எஸ்.பி.வேலுமணி, செ.ம. வேலுசாமி. கே.சி. கருப்பணன் மற்றும் கே.ஆர். அர்ஜூன், கப்பூச்சி வினோத் உள்ளிட்டவர்களும், ஏராளமான தேயிலை தோட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய இபிஎஸ், “எழுச்சியான இந்த பயணத்தில் 3 சட்டமன்ற தொகுதி மக்களை சந்தித்துவிட்டு, இப்போது கோத்தகிரி மக்களை சந்திக்க வந்திருக்கிறேன். கோத்தகிரியில்ஜெயலிதா திறந்து வைத்த எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் என தொண்டர்கள் விரும்பினார்கள். அதன் பேரில் இங்கு வந்துள்ளேன். ஆனால் இவ்வளவு கூட்டம் இருப்பார்கள் என நான் நினைக்கவில்லை. எழுச்சி பயணத்தில் கூடிய அதே மக்கள் கூட்டம் இங்கும் கூடியுள்ளது. ஜெயலலிதா நீலகிரி மாவட்டத்தை மிகவும் நேசித்தவர். இங்குள்ள மக்கள் ஜெயலலிதா மனதில் குடி கொண்டவர்கள். இந்த வழியே ஜெயலலிதா கொடநாடு செல்வார். அப்போது வழியில் மக்களை சந்திப்பார். உயிருடன் இருந்தவரை உங்களுடன் வாழ்ந்து மறைந்த அவரது கரங்களால் திறந்து வைக்கப்பட்ட சிலைக்கு மாலை அணிவிக்க தான் வந்திருக்கிறேன்.
ஜெயலலிதா மறைந்தும் உங்கள் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். இன்னும் சில மாதங்களில் 2026 தேர்தல் வருகிறது. இதில் அதிமுக வெற்றி பெறச்செய்ய வேண்டும். எம்ஜிஆர் தோற்றுவித்த இயக்கத்தை, ஜெயலலிதா கண்ணை இமை காப்பது போல் கட்டிக்காத்தார். மக்களுக்கு தேவையான பல நல்ல திட்டங்களை செயல்படுத்தினார். மருத்துவக்கல்லூரி வேண்டும் என கோரிக்கை விடுத்தீர்கள். அதை நிறைவேற்றியது அதிமுக அரசு. அடிப்படை வசிதிகள் சாலை, குடிநீர் வசதி, கூட்டுக்குடிநீர் திட்டம் என அனைத்தையும் நிறைவேற்றி தந்தது அதிமுக அரசு. ஆனால், திமுகவின் 52 மாத ஆட்சியில் எந்த நன்மையும் மக்களுக்கு கிடைக்கவில்லை. விண்ணை முட்டுகின்ற வகையில் விலை வாசி உயர்வு, கட்டுமான பொருள்களில் விலை உயர்வு. எங்கே பார்த்தாலும் போதைபொருள் புழக்கம். இப்படி பலதரப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, வரும் தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்கு அளிக்க வேண்டும்'' என கேட்டுக்கொண்டார் எடப்பாடி.