ஈரோடு மூலப்பாளையம் ஸ்டாலின் வீதியைச் சேர்ந்தவர் அருள்குமார் (45). முன்னாள் ராணுவ வீரரான இவர், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஹேமா. இதனிடையே, ஹேமா கடந்த 2ஆம் தேதி வீட்டை பூட்டி பக்கத்து வீட்டாரிடம் சாவியை கொடுத்துவிட்டு சேலம் மேட்டூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் மின்சாரம் கணக்கீடு செய்வதற்காக மின்வாரிய அலுவலர் வந்தபோது அந்த பக்கத்து வீட்டுக்காரர் ஹேமாவின் வீட்டை திறந்து விட வந்தார். அப்போது கதவு பூட்டப்படாமல் சாத்தப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

Advertisment

அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து ஹேமாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 11.5 பவுன் நகை திருட்டுப் போனது தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் அவர் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், ஈரோடு தாலுகா போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

Advertisment

இதில் கோபி அடுத்த அக்கறை கொடிவேரியை சேர்ந்த நவீன் (32) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அருள்குமார் வீட்டு அருகே ஒரு வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு நவீன் குமார் வந்துள்ளார். அப்போது இரண்டு நாட்களாக வீடு பூட்டப்பட்டு இருப்பதை நோட்டமிட்டு திருடியதை ஒப்புக்கொண்டார். இதை அடுத்து நவீனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 11.5 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். இதனிடையே, நவீன் மீது ஈரோடு தாலுகா போலீசில் 4 வழக்குகளும், வீரப்பன் சத்திரம் போலீசில் 5 வழக்குகளும், சூரம்பட்டியில் 2, மொடக்குறிச்சி சித்தோடு போலீசில் தலா 1 வழக்குகள் என 15-க்கும் மேற்பட்ட திருட்டு வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்துள்ளது. மேலும் திருடிய நகையை நவீன் மூலப்பாளையத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களிடம் வைத்து மறைக்க சொல்லி உள்ளார் என்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர்களையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்