இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அமைந்துள்ள ஆளுநர் மாளிகைகள்,  ராஜ்பவன் என்று அழைக்கப்பட்டு வந்தது. அதே போன்று யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் மாளிகைகள் ராஜ் நிவாஸ் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  கலந்து கொண்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, ராஜ்பவன் என்பது மக்கள் பவன் என மாற்றப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார். 

Advertisment

இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. அதன்படி  இனி அதிகாரப்பூர்வமாக ராஜ்பவன் என்பதை  மக்கள் பவன் என அனைத்து மாநிலங்களும் மாற்றி அழைக்க உத்தரவிடப்பட்டது. அதே போன்று ராஜ் நிவாஸ் என்பது லோக் நிவாஸ் என அழைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவையும் மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தது. இந்நிலையில் ‘ஆளுநர் மாளிகை, தமிழ்நாடு’ என்பது ‘மக்கள் மாளிகை, தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

Advertisment

இது தொடர்பாக மக்கள் மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “காலனித்துவப் பெயரிடலில் இருந்து விலகிச் சென்று, மக்களை மையப்படுத்தப்பட்ட ஜனநாயகத்தின் விழுமியங்களை வலுப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால், அனைத்து அதிகாரப்பூர்வ தொடர்பு மற்றும் பணிகளுக்காக ஆளுநர் அலுவலகம் "மக்கள் மாளிகை" என மறுபெயரிடப்படும் என்று முறைப்படி அறிவிக்கப்பட்டது. அதன்படி, "ராஜ்பவன், தமிழ்நாடு" என்பது "மக்கள் மாளிகை தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. உடனடியாக அமலுக்கு வரும் இந்த பெயர் மாற்றம், ஆளுநர் மாளிகை "மக்கள் மாளிகை" ஆகப் பரிணாமம் அடைவதைப் பிரதிபலிக்கிறது. மேலும், இது மக்களை மையப்படுத்தப்பட்ட நல்லாட்சி மற்றும் அதன் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளில் பொதுமக்களின் பங்களிப்பு ஆகியவற்றில் நீண்டகாலமாக உள்ள உறுதிப்பாட்டினை முன்னெடுத்துச் செல்கிறது. 

raj-bhavan-tn-chennai

இது, இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிக விழுமியங்கள் மற்றும் அரசியலமைப்பின் உணர்வை நிலைநிறுத்துவதற்கான தற்போதைய பயணத்தில் ஒரு அர்த்தமுள்ள முன்னேற்றத்தைக் குறிக்கிறது. மேலும், இந்த அலுவலகம் தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளின் எண்ணங்களை தொடர்ந்து பிரதிபலிப்பதை உறுதிசெய்கிறது. இந்த பெயர் மாற்றம் உடனடியாக அமலுக்கு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ஆளுநர் மாளிகையில் சமூக வலைத்தளக் கணக்குகளும்“லோக் பவன்” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இணையதளத்திலும் லோக் பவன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisment