“ஏங்க... எங்க ஊரைப் பாருங்க, எங்க ஊரு தண்ணியப் பாருங்க... தமிழ்நாட்டிலேயே, ஏன், உலகத்துலயே இந்த மாதிரி ஊர் இல்லைங்க. உங்களுக்கு லவ் ஃபெயிலியரா? லவ் பண்ணி டைவோர்ஸ் ஆகிட்டு கஷ்டப்படுறீங்களா? கவலைப்படாதீங்க... கூமாபட்டிக்கு வாங்க... இந்தத் தண்ணீர்ல குளிச்சுப் பாருங்க... எந்த வியாதியும் வராது. எந்தக் கஷ்டமும் வராது. எங்க ஊரு சொர்க்க பூமிங்க” என்ற ரீல்ஸ் வீடியோ திடீரென இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதிகளவில் அண்மையில் ட்ரெண்டாகியது.

Advertisment

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அமைந்துள்ளது கூமாபட்டி என்கிற சிறிய கிராமம். பிளவக்கல் பெரியார் அணை மற்றும் கோயிலாறு அணையுடன் மலையடிவாரத்தில் இந்தக் கிராமம் அமைந்திருப்பதால், கண்ணுக்கு விருந்தளிக்கும் இயற்கைக் காட்சிகளைக் கொண்டுள்ளது. இதற்கிடையே, அதே ஊரைச் சேர்ந்த தங்கப்பாண்டி என்ற இளைஞர்,  இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் கூமாபட்டியின் அருமை பெருமைகளைத் தொடர்ந்து பதிவிட்டு வண்டார் . இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, நெட்டிசன்கள் பலரும் “கூமாபட்டி எங்கே இருக்கு?” எனத் தேடத் தொடங்கினர். இதனால், இணையத் தேடுதலில் கூமாபட்டி ட்ரெண்டாகத் தொடங்கியது.

கூமாப்பட்டியை ட்ரெண்ட் செய்த தங்கபாண்டி தற்போது தனியார் நகைக்கடை விளம்பரம், தொலைக்காட்சி நிகழ்ச்சி என பிஸியாகிவிட்ட நிலையில் விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாட்டுப் பணிகளையும் மேற்கொள்ள பத்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.