தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஐ. பெரியசாமிக்குத் தொடர்புடைய இடங்கள், அவரது வீடுகளில் அமலாக்கத்துறையினர் இன்று (16.08.2025) காலை முதல் சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி திண்டுக்கல் மற்றும் சென்னையில் உள்ள அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

Advertisment

கடந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு நிலம் ஒதுக்கியது தொடர்பான புகாரில் ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. அந்த புகாரின் பேரில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகக் கூறி அமலாக்கத்துறையினர் ஏற்கனவே அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் விசாரணை நடத்தியிருந்தனர். எனவே இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் சோதனை நடத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

அமைச்சர் ஐ. பெரியசாமிக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையில் சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே போன்று ஐ.பெரியசாமியின் மகனும், சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமாருக்குத் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.