பூடான் நாட்டில் இரானுவ அதிகாரிகள் பயன்படுத்திய சொகுசு கார்கள் குறைந்த விலையில் வாங்கி அதிக விலைக்கு இமாச்சல பிரதேசத்தில் விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் கேரளாவில் உள்ள தொழிலதிபர்கள், நடிகர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அரசுக்கு முறையாக வரி செலுத்தாமல் இழப்பு ஏற்படுத்தியதாகவும் புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் ‘ஆபரேஷன் நம்கூர்’ என்ற பெயரில் சோதனை நடத்தி வருகின்றனர். 

Advertisment

அந்த வகையில் கேரளாவில் கடந்த 23ஆம் தேதி சோதனை நடத்தினர். இதில் மலையாள முன்னணி நடிகர்களான துல்கர் சல்மான் மற்றும் பிரித்விராஜ் வீடுகளும் அடங்கும். இந்த சோதனையில் கொச்சியில் துல்கர் சல்மான் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், அவரது லேண்ட் ரோவர் டிபண்டர் காரை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரது தந்தை மம்மூட்டியின் பண்ணை வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு எந்த காரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்யவில்லை. இருப்பினும் ஆவணங்களை சரிபார்த்தனர். அதன்பின்னர் கோழிக்கோடு, மலப்புரம், திரிச்சூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மொத்தம் 10 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட கார்களை சுங்கத்துறை அலுவலகத்துக்கு எடுத்து சென்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது

Advertisment

இந்நிலையில் சென்னை கிரின்வேஸ் சாலை அருகே உள்ள அபிராமபுரத்தில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டிலும்,  திரைப்பட தயாரிப்பு அலுவலகத்திலும் 6 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (08.10.2025) காலை முதல் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சட்ட விரோதமாக பூட்டான் நாட்டில் இருந்து கார்கள் இறக்குமதி செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த செப்டம்பர் மாதம் கேரளாவில் சோதனையில் ஈடுபட்ட நிலையில் தற்போது சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.