டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தியிருந்தனர். இதில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆகாஷ் பாஸ்கரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களைத் திரும்ப ஒப்படைக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது. 

Advertisment

அதோடு இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கக் கூடாது என அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் தடை விதித்தும் உத்தரவிட்டது. இத்தகைய சூழலில் தான் இந்த தடையை மீறி ஆகாஷ் பாஸ்கரிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை எதிர்த்தும், இதனை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி ஆகாஷ் பாஸ்கர் வழக்கு தாக்கல் செய்தார். இதனையடுத்து இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ் தலைமையிலான அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாகப் பதிலளிக்கும்படி அமலாக்கத்துறை உதவி இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது. 

Advertisment

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (18.10.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் வாதிடுகையில், “நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆகாஷ் பாஸ்கரர் தரப்பில் வாதிடுகையில், “உயர் நீதிமன்ற தடை உத்தரவு உள்ள நிலையில் செப்டம்பர் 20ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பி அக்டோபர் 8ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணைய தலைவர் பிரதீப் குமார் உபாத்தியாயா மற்றும் நிர்வாக பதிவாளர் நஸ்ரின் சித்திக் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.