மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்த 20க்கும் மேற்பட்ட் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் எதிரொலியாகத் தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு மத்தியப் பிரதேச சுகாதாரத்துறை தகவல் அனுப்பி இருந்தது. இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சம்பந்தப்பட்ட மருந்து உற்பத்தி நிறுவனத்தில் இது தொடர்பாக மருந்தாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சோதனையில் விதிகளை மீறி எத்திலீன் கிளைக்கால் என்ற நச்சுப் பொருள் இருமல் மருந்தில் கலப்படம் செய்யப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Advertisment

இதனைத் தொடர்ந்து மருந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அதே சமயம் இந்த இருமல் மருந்தைப் பொதுமக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் சம்பந்தப்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் சீசன் கம்பெனி மருந்து உரிமையாளர் ரங்கநாதன் என்பவரை மத்தியப் பிரதேச போலீசார் கைது செய்தனர். சென்னை போலீசார் உதவியுடன் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. மேலும், இந்த விவகாரத்தில்  2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இதனிடையே, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த இருமல் மருந்து விற்பனைக்கு அம்மாநில அரசுகள் தடை விதித்திருந்தது.

Advertisment

இந்த நிலையில், இன்று (13-10-25) காலை 6 மணி முதல் ரங்கநாதன் சீசன் கம்பெனி மருந்து உரிமையாளர் ரங்கநாதனுடைய கோடம்பாக்கம் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மத்திய பாதுகாப்பு காவல்படை வீரர்களுடன் இரண்டு வாகனத்தில் வந்த 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். அதே போல், திருவான்மியூரில் உள்ள மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் தீபா ஜோசப், அண்ணா நகரில் உள்ள மருந்து கட்டுப்பாட்டுத்துறை துணை இயக்குநர் கார்த்திகேயன் உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோல்ட்ரீப் மருந்து காரணமாக பல்வேறு உயிர்கள் பலியான நிலையில், அந்த கோல்ட்ரிப் மருந்து தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஏற்றுமதியில் சட்டவிரோத பணபரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.