சென்னை நீலாங்கரையில் உள்ள தொழிலதிபர் மோகன் குப்தா மற்றும் நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை நீலாங்கரையில் உள்ள கபாலீஸ்வரர் நகரப் பகுதியில் வசித்து வருபவர் தொழிலதிபர் மன்மோகன் குப்தா. சொகுசு பங்களா உள்ளிட்டவைகளுக்கு உட்கட்டமைப்பு மற்றும் கலை அலங்காரம் செய்து கொடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். இவருடைய மனைவி அருணா. தெலுங்கு திரை உலகில் நடிகையாக அறியப்படுபவர்.
தமிழில் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான 'கல்லுக்குள் ஈரம்' திரைப்படத்தில் நடித்துப் பிரபலமானவர். இவர்களுடைய வீட்டில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்தது என்ற குற்றச்சாட்டு அடிப்படையில் சோதனை நடப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு மூன்று வாகனங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.