Enforcement Directorate raids 21 places including Chennai on Sabarimala gold theft case
பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையாவால் கடந்த 1998ஆம் ஆண்டு கேரளா தேவஸ்தானம் போர்டுக்கு 30 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த தங்கம், தங்கக் கவசமாக மாற்றப்பட்டது. இதனையடுத்து தங்கக் கவசத்தை செப்பனிட்டுக் கொடுப்பதாகக் கூறி பெங்களூருவைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் போத்தி என்பவரிடம் தேவஸ்தானம் சார்பில் நகைகள் கொடுக்கப்பட்டது. அதன்படி தங்கக் கவசம் செப்பனிடப்பட்டு, அதனைத் தேவஸ்தானம் போர்டு திரும்பப் பெற்றுக் கொண்டது.
இத்தகைய சூழலில், தன்னிடம் எவ்வித அனுமதி பெறாமல் தங்க கவசம் செப்பணியிடம் பணிக்கு கொடுக்கப்பட்டதாகவும், இதில் சந்தேகம் இருப்பதாகவும் கேரளா உயர் நீதிமன்றத்தில் சபரிமலை கோவில் சிறப்பு ஆணையர் உயர் நீதிமன்ற அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் கேரள உயர்நீதிமன்றம் சட்ட ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. வெங்கடேஷ் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் துவார பாலகர் சிலை மட்டுமின்றி மேலும் 7 தகடுகளில் இருந்து தங்கம் திருடப்பட்டுள்ளது என்றும், துவார பாலகர் சிலை மட்டுமின்றி தங்கமுலாம் பூசப்பட்ட கருவறையின் கதவின் மேற்புறத்தில் இருந்தும் தங்கம் திருடப்பட்டுள்ளது என்றும் தங்கமுலாம் பூசப்பட்ட சிவன் சிலை, யாடி ரூபம், ராசி தகடுகள் உள்ளிட்டவற்றிலும் இருந்து தங்கம் திருடப்பட்டுள்ளது என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்பட்டது. மேலும், சென்னை நிறுவனத்தில் வைத்தே ரசாயன கலவை மூலமாகத் துவார பாலகர் சிலை அதன் பீடத்தில் இருந்து தங்கம் எடுக்கப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தாகக் கூறப்பட்டது.
சபரிமலையில் இருந்து திருடப்பட்ட தங்கத்தில் 475 கிராம் கர்நாடக நகைக்கடை அதிபர்களிடம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. சிலை மற்றும் அதன் பீடத்தில் இருந்து எடுத்த தங்கத்தை மறைக்க அது தொடர்பான ஆவணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதும் விசாரணையில் அம்பலமானது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை நிறுவன அதிபர் பங்கஜ பந்தாரி உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் 6 இடங்களில் இன்று (20-01-26) அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதே போல் கேரளா, கர்நாடகா தமிழ்நாடு என மொத்தம் 21 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை அம்பத்தூரில் 2 இடங்களிலும், தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
Follow Us