அமலாக்கத்துறை தலைமை இயக்குநர் ராகுல் நவீன் இன்று சென்னை வருகை தர உள்ளார். அவர் அமலாக்கத்துறையின் முக்கிய அதிகாரிகளைச் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில், தமிழகத்தில் நிலுவையில் உள்ள அமலாக்கத்துறை வழக்குகள் பற்றி அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். குறிப்பாக, தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறையில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, இரு தினங்களுக்கு முன்பாக கவுகாத்தியில் அமலாக்கத்துறையின் 34வது காலாண்டு மாநாடு நடைபெற்றது. அதில், அமலாக்கத்துறை வழக்குகள் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், அமலாக்கத் துறை தொடர்பான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தல் உள்ளிட்ட பணிகளை இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, அமலாக்கத்துறையில் ஒரு வழக்கிற்கு நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான காலம் அவகாசம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இருப்பினும், இந்த நிதியாண்டில் 500 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை மற்றும் நீதி விசாரணை முடிக்க இருப்பதாகத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அமலாக்கத்துறையின் மிக முக்கிய வழக்குகளை விசாரணை செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கவுகாத்தி கூட்டத்தில் பேசிய அவர் இது தொடர்பாக இன்று தமிழக அதிகாரிகளுடன் கலந்தாலோசிப்பர் எனவும் கூறப்படுகிறது. சமீபத்தில் உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் கே.என். நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறை தலைமை இயக்குனரின் வருகை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
Follow Us