கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் வீணாகும் உணவுக் கழிவுகளை பயன்படுத்தி பயோ கேஸ் உற்பத்தி செய்யும் புதுமையான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், தினசரி சமையலுக்கு பிறகு மீதமான உணவுக் கழிவுகள் பயோகேஸ் கலனில் சேகரிக்கப்பட்டு, அவை உயிரணு சிதைவு செயல்முறை மூலம் பயோ கேஸ் மாற்றப்படுகின்றன. 

Advertisment

இவ்வாறு தயாரிக்கப்படும் பயோ கேஸ், விடுதியில் சமையலுக்கே பயன்படுத்தப்படுவதால், மரபு எரிபொருட்களின் பயன்பாடு குறைக்கப்பட்டு, எரிபொருள் செலவில் கணிசமான சேமிப்பு கிடைக்கிறது. மேலும், உணவுக் கழிவுகள் குப்பைகள் குவிந்து சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தும் நிலையும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப முயற்சி, அண்ணாமலை பல்கலைக்கழக இயந்திரப் பொறியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் சி.ஜி. சரவணன் மற்றும் பி. பிரேம்குமார் ஆகியோரின் தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

Advertisment

இதனை விழுப்புரத்தைச் சேர்ந்த ஜிகே மோட் பைபர் கிளாஸ் தொழிற்சாலை இந்த பயோகேஸ் கலனை வடிவமைத்து, தயாரித்து, சோதனை முயற்சியாக விடுதியில் நிறுவியுள்ளது. இதனை மருத்துவக் கல்லூரி முதல்வர் திருப்பதி பயன்பாடுக்கு துவக்கி வைத்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு ஆகியவற்றில் இந்த திட்டம் ஒரு சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறது.