டாஸ்மாக் மதுக் கடைகளில் மதுபானங்கள் வாங்கும் மது பிரியர்கள் அதை குடித்துவிட்டு விவசாய நிலங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் உடைத்துவிட்டு செல்வதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. மேலும், வனப்பகுதிகளில் மதுபாட்டில்கள் உடைக்கப்படுவதால் வன விலங்குகளும் பாதிக்கப்பட்டன. எனவே, இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதைத்தொடர்ந்து, காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

Advertisment

முதற்கட்டமாக, மலைப்பகுதியில் உள்ள மதுக்கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இங்கு மது பாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால் ரூ.10 அல்லது வாங்கும் மதுவின் விலையில் ரூ.10 கழிக்கப்பட்டது. முதற்கட்டமாக, ஈரோடு மாவட்டத்தில் 3 கடைகளிலும், கடந்த 3ம் தேதி முதல் அனைத்து கடைகளிலும் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.இதுகுறித்து ஈரோடு மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் 182 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், மலைப்பகுதியில் தாளவாடி பகுதியில் உள்ள 2 கடைகளிலும், கடம்பூர் பகுதியில் உள்ள ஒரு கடையிலும் என 3 கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப வாங்கும் திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. தற்போது இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு மாவட்டத்தில் மீதமுள்ள 179 கடைகளிலும் காலி மதுப்பாட்டில்கள் திரும்ப பெறப்படுகிறது.

Advertisment

இதில் மதுபாட்டிலுக்கு அதிகபட்ச விற்பனை விலையுடன் சேர்த்து ரூ.10 கூடுதலாக பெறப்படும். இதற்காக கடையின் எண் குறிப்பிட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே மது வாங்கிய அதே கடையில் ஸ்டிக்கருடன் காலி மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது ரூ.10 திருப்பி வழங்கப்படும். மாவட்டத்தில் உள்ள 182 டாஸ்மாக் மதுக்கடைகளிலும், தினசரி சுமார் 2.50 லட்சம் காலி மதுப்பாட்டில்கள் திரும்ப பெறப்படுகிறது. அதாவது விற்பனையாகும் மது பாட்டில்களில் 85 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை காலி மதுப்பாட்டில்கள் திரும்ப பெறப்படுகின்றன.ஈரோடு மாநகர் பகுதியில் செயல்படும் கடைகளில் தினசரி கிராமப்புறங்களில் செயல்படும் கடைகளில் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை, ஒப்பந்ததாரர்கள் காலி மதுப்பாட்டில்கள் திரும்ப எடுத்துச் செல்கின்றனர்' என்றார்.