தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகள் 800 கி.மீக்கும் அதிகமான நிலப்பரப்பு கொண்ட எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. 1863ஆம் ஆண்டு முதல் 1953 வரை கம்போடியாவை ஆக்கிரமித்த பிரஞ்சு காலனித்துவத்தால் இந்த எல்லை பகிரப்பட்டது. அதில், 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தா முயென் தாம் என்ற இந்து கோவில் கம்போடிய எல்லைக்குள் வர அனுமதிக்கப்பட்டது. இந்த கோயில் தங்களுக்கு சொந்தம் என உரிமை கூறி தாய்லாந்து அந்த எல்லை பகிர்வை எதிர்த்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் அவ்வப்போது எல்லை தொடர்பான பிரச்சனை நிலவி வருகிறது.

கடந்த 2008ஆம் ஆண்டில் இந்த கோயிலை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக கம்போடியா பதிவு செய்ய முயன்ற போது இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. கடைசியாக கடந்த 2011ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை பிரச்சனையில் பெரிய மோதல் வெடித்தது. கிட்டத்தட்ட ஒரு வாரம் நடந்த மோதலில் 15 கொல்லப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில், கடந்த ஜூன் மாதம் இந்த எல்லை பிரச்சனை தொடர்பாக இரு நாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இதில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் கம்போடிய வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் மோசமடைந்தது. இதனையடுத்து இரு நாடுகளும் தங்களது எல்லைகளை மூடுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து, தனது நாட்டில் உள்ள கம்போடிய தூதரை தாய்லாந்து அதிரடியாக வெளியேற்றியது. மேலும், ஏற்றுமதிகளைத் தடை செய்தல், கம்போடியாவிற்கான மின்சாரத்தை துண்டிக்கப் போவதாகவும் தாய்லாந்து அச்சுறுத்தியது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு, தாய்லாந்து ராணுவ வீரர்கள் கண்ணிவெடி வெடிப்பில் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு கம்போடியா மீது குற்றம் சாட்டியதை அடுத்து தற்போது இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

இந்த நிலையில், இரு நாட்டு ராணுவ வீரர்களும் நேற்று முன் தினம் (24-07-25) துப்பாக்கிச் சூடு, பீரங்கி தாக்குதல், ராக்கெட் தாக்குதல் போன்ற தாக்குதலை நடத்தி வருகின்றனர். தாய்லாந்து, கம்போடியாவில் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில், 15க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர், பல ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்து வருகிறது.

Advertisment

தாய்லாந்து-கம்போடியா எல்லையில் வன்முறை அதிகரித்து வருவதால், இரு நாடுகளுக்கும் இந்தியர்கள் பயணம் செய்வதை தவிர்க்குமாறு இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது, ‘தாய்லாந்து-கம்போடியா எல்லைக்கு அருகிலுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தாய்லாந்திற்குச் செல்லும் அனைத்து இந்திய பயணிகளும் தாய்லாந்து அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து புதுப்பிப்புகளைப் பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், தாய்லாந்து நாட்டில் உபோன் ரட்சதானி, சுரின், சிசாகெட், புரிராம், சா கேயோ, சாந்தபுரி மற்றும் டிராட் உள்ளிட்ட பல மாகாணங்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்’ என்று இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.