அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். கடந்த 2024 அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவதற்கு பெரும் பங்காற்றியவர் எலான் மஸ்க். இவர்கள் இருவருக்கும் இடையில் அப்படி ஒரு நட்பு இருந்து வந்தது. இது குறித்து, அமெரிக்காவின் மிகவும் சக்திவாய்ந்த இரு தலைவர்களுக்கிடையே உள்ள நல்லுறவு எவ்வளவு காலம் நீடிக்கும் என்று பலரும் விமர்சித்து வந்தனர். சிலர் இந்த நட்பு சில மாதங்கள் தான் நீடிக்கும் என்றும் சொல்லி வந்தனர். அவர்கள் சொன்னதற்கு ஏற்றாற்போல் இந்த நட்பு விரைவில் முடிவுக்கு வந்தது.

Advertisment

அதிபர் தேர்தல் வெற்றிக்கு பின் டிரம்ப் அரசாங்கம் கொண்டு வந்த ‘ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்’ என்ற மசோதாவே இந்த பிரிவிற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இந்த மசோதாவில் வரி சீர்திருத்தங்களை நீட்டிப்பது, வரிச்சலுகை அளிப்பது, குடியேற்றம் தொடர்பான நடைமுறைகளை கடுமையாக்குவது, மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கான வரி சலுகைகளையும் ரத்து செய்வது ஆகியவை இடம் பெற்றது. ஆனால் இந்த மசோதா, பட்ஜெட் பற்றாக்குறையை அதிகரிக்கும் என்றும், DOGE குழுவின் பணியை குறைத்து மதிப்பிடும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்தார். அதனால், இந்த மசோதா ஒரு தேவையற்ற மசோதா, இந்த மசோதாவை கொண்டு வந்தது தவறு என்று எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் பதிவிட்டிருந்தார்.

Advertisment

மஸ்க்கின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதமாக, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் பெறும் அரசாங்க ஒப்பந்தங்கள் மற்றும் மானியங்கள் குறித்து ட்ரம்ப் விமர்சித்து பேசியிருந்தார். இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்த வேளையில் எலான் மஸ்க், அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டு துறையில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - எலான் மஸ்க் இடையே வார்த்தை மோதல் அதிகரித்தது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர்.

இந்த சூழ்நிலையில், எலான் மஸ்க் ஒரு புதிய அரசியல் கட்சியை உருவாக்குவதாகத் தெரிவித்து அதற்கு அமெரிக்க பார்டி (America Party) என்று பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார். அதன் பிறகு இருவருக்கும் இடையே எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறாமலேயே இருந்தது. இருப்பினும், 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இரு தரப்பினருக்கும் இடையில் சமரச போக்கு இருந்த வண்ணம் சூழல் நிலவியது.

Advertisment

பல மாதங்களாக நிலவிய மோதலுக்குப் பிறகு, முன்னாள் கூட்டாளிகளான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோருக்கு இடையேயான உறவுகள் மீண்டும் சீரடைந்து வருவதாகத் தெரிகிறது. மேலும், அவர்களின் நட்புறவு மீண்டும் துளிர்விட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக டிரம்ப் மற்றும் மஸ்க் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட எலான் மஸ்க், ‘நேற்று இரவு அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலேனியா டிரம்ப் ஆகியோருடன் அருமையான இரவு விருந்து உண்டேன். 2026 அற்புதமாக இருக்கப் போகிறது’ என்று தெரிவித்தார். ட்ரம்ப் மற்றும் மஸ்க் ஆகிய இருவரும் இணைந்ததையடுத்து, அவர்கள் இருவரும் ஒரு இரவு உணவு விருந்தில் கலந்து கொண்டபோது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.