நண்பர்களாக இருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓவான எலான் மஸ்க்க்கும் இடையில் வார்த்தைப் போர் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த சூழ்நிலையில், பல்வேறு பொருளாதார செலவினங்களை மாற்றியமைக்கும் ‘பிக் பியூடிஃபுல்’ (Big Beautiful) சட்ட மசோதாவை டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்தார். இந்த மசோதாவில், வரி சீர்திருத்தங்களை நீட்டிப்பது, வரிச்சலுகை அளிப்பது, குடியேற்றம் தொடர்பான நடைமுறைகளை கடுமையாக்குவது, மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கான வரி சலுகைகளையும் ரத்து செய்வது ஆகியவை இடம் பெற்றுள்ளது. இந்த மசோதாவுக்கு எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்தது.
இதனிடையே, மின்சார வாகனங்களுக்கான நுகர்வோர் வரிச் சலுகையை ரத்து செய்யும் மசோதாவை டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்தார். இந்த மசோதாவிற்கு எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதில் கோபமடைந்த டிரம்ப், தன்னுடைய கடைகளை மூடிவிட்டு தனது சொந்த நாடான தென்னாப்பிரிக்காவுக்கு எலான் மஸ்க் செல்ல வேண்டியிருக்கும் என்று கடுமையாக சாடினார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் ஷோ ரூம் முதல் முறையாக இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் மின்சார உற்பத்தி நிறுவனமான டெஸ்லா நிறுவனத்தின் முதல் ஷோ ரூம், மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள மேக்கர் மேக்சிட்டி மாலில் அமைக்கப்பட்டுள்ளது. டெஸ்லா தனது மாடல் ஒய் எஸ்யூவி ( Y SUV) மாடலை முதல் முதலாக இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த காரின் விலை அதிகபட்சமாக ரூ.60 லட்சத்தில் இருந்து ரூ.68 லட்சம் வரையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வணிக தலைநகராக திகழும் மும்பையில் முதல் முறையாக தொடங்கப்பட்ட டெஸ்லா ஷோ ரூமை, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பேசிய அவர், ‘டெஸ்லாவை இந்தியாவிற்கு வரவேற்க விரும்புகிறேன். டெஸ்லா சரியான நகரத்திற்கும் சரியான மாநிலத்திற்கும், அதாவது மகாராஷ்டிரா மாநிலத்திற்கும் மும்பை நகரத்திற்கும் வந்தடைந்துள்ளது. மும்பை, இந்தியாவின் நிதி மற்றும் பொழுதுபோக்கு மையம் மட்டுமல்ல, தொழில்முனைவோர் மையமாகவும் உள்ளது. டெஸ்லா வெறும் கார் அல்லது கார் நிறுவனம் அல்ல என்று நான் நினைக்கிறேன். இது வடிவமைப்பு, புதுமை மற்றும் நிலைத்தன்மை பற்றியது. அதற்காக டெஸ்லா நிற்கிறது. இதனால் தான், இது உலகளவில் விரும்பப்படுவதற்கான ஒரே காரணம் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.