கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தாண்டு ஜனவரியில் பதவியேற்றுக் கொண்டார். இந்த அதிபர் தேர்தலில், உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓவான எலான் மஸ்க், டொனால்ட் டிரம்புக்கு ஆதராவாக பிரச்சாரம் செய்தார். மேலும், இந்த தேர்தலை எதிர்கொள்ள டொனால்ட் டிரம்புக்கு ஆயிரக்கணக்கான கோடியை எலான் மஸ்க் செலவிட்டதாகக் கூறப்பட்டது. இதன் காரணமாகவே, டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார் என்று தகவல் வெளியாகியிருந்தது.
அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, தனது அரசாங்க செயல்திறன் துறையின் தலைவராக (DOGE) எலான் மஸ்க்கை டிரம்ப் நியமித்தார். இது, அந்நாட்டில் பெரும் விவாதப் பொருளாக மாறியது. அமெரிக்க அரசின் செயல்திறன் துறை (DODGE) தலைவராகப் பொறுப்பேற்றப் பிறகு, அரசின் தேவையற்ற செலவை கண்டுபிடித்து அதனை கட்டுப்படுத்தும் வேலையை செய்து வந்தார். அதில், அரசுத் துறையை ஒட்டுமொத்தமாக கலைத்துவிட்டு புதிதாக உருவாக்க வேண்டும் என்று கூறினார். ஏற்கெனவே அமெரிக்க அரசுத் துறை ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுத்து அவர்களை எலான் மஸ்க் வெளியேற்றி வந்த நிலையில், எலான் மஸ்கின் இந்த கருத்து அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. எலான் மஸ்க் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும், அமெரிக்க மக்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. எலான் மஸ்கிற்கு எதிராகவும், டெஸ்லா நிறுவனத்திற்கும் எதிராகவும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தது.
இந்த சூழ்நிலையில், பல்வேறு பொருளாதார செலவினங்களை மாற்றியமைக்கும் ‘பிக் பியூடிஃபுல்’ (Big Beautiful) சட்ட மசோதாவை டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்தார். இந்த மசோதாவில், வரி சீர்திருத்தங்களை நீட்டிப்பது, வரிச்சலுகை அளிப்பது, குடியேற்றம் தொடர்பான நடைமுறைகளை கடுமையாக்குவது, மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கான வரி சலுகைகளையும் ரத்து செய்வது ஆகியவை இடம் பெற்றுள்ளது. இந்த மசோதா கூடிய விரைவில் நிறைவேற இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த மசோதா, பட்ஜெட் பற்றாக்குறையை அதிகரிக்கும் என்றும், DOGE குழுவின் பணியை குறைத்து மதிப்பிடும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்தார். முதல் முறையாக டொனால்ட் டிரம்பின் முடிவுக்கு மாற்று கருத்து சொன்ன எலான் மஸ்க், ‘DOGE’ அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - எலான் மஸ்க் இடையே வார்த்தை மோதல் அதிகரித்தது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர்.
அதன்பிறகு, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகிய நிறுவனங்கள் தனது அரசின் ஆதரவை இழக்கலாம் என்று டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, டொனால்ட் டிரம்ப் பொய் கூறி வருவதாகவும், அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு இருப்பதாகவும் எலான் மஸ்க் கடுமையாக அவரை விமர்சித்தார். இதனால், இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் அதிகரித்து வந்த நிலையில், மின்சார வாகனங்களுக்கான நுகர்வோர் வரிச் சலுகையை ரத்து செய்யும் மசோதாவை டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்தார். இந்த மசோதாவிற்கு எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, கோபமடைந்த டிரம்ப், தன்னுடைய கடைகளை மூடிவிட்டு தனது சொந்த நாடான தென்னாப்பிரிக்காவுக்கு எலான் மஸ்க் செல்ல வேண்டியிருக்கும் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.
இந்த நிலையில், எலான் மஸ்க் ‘அமெரிக்கன் பார்ட்டி’ என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “வாக்காளப் பெருமக்களே, நமது நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் வீண் செலவுகளை எதிர்த்து, உங்களுக்கு சுதந்திரத்தைத் திரும்ப வழங்குவதற்காக ‘தி அமெரிக்கன் பார்ட்டி’ உருவாக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, அமெரிக்காவிற்கு புதிய கட்சி தேவையா என்பது குறித்து எக்ஸ் தளப் பக்கத்தில் கருத்துக் கணிப்பு நடத்தியிருந்தார். அதில் 65 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையிலேயே தற்போது புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.பல ஆண்டுகளாக அமெரிக்காவில் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிகளே ஆட்சி செய்து வந்த நிலையில், தற்போது மூன்றாவதாக ஒரு கட்சி நுழைந்திருப்பது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.