வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ள டி.டி. மோட்டூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட சிந்தனக் கணவாய் வனப்பகுதியில் ஒரு யானை கடந்த சில நாட்களாக தனியாக நடமாடி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நவம்பர் 30-ஆம் தேதி அந்த யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.
வேலூர் மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் தலைமையிலான வனத்துறையினரும், மருத்துவக் குழுவினரும் சேர்ந்து வனப்பகுதியில் உயிரிழந்த யானையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனை செய்தனர். தண்ணீர் குடிக்க ஓடைக்கு வந்தபோது, எதிர்பாராத விதமாக கற்கள் நிறைந்த பாறையருகே வழுக்கி விழுந்து யானை உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனால், இது உண்மையல்ல என்றும், யானையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த மாதம் பேரணாம்பட்டு அருகேயுள்ள அரவட்டலா வனப்பகுதியில் ஒரு யானை உயிரிழந்து, எலும்புக்கூடாகக் கண்டெடுக்கப்பட்டது. அது எப்படி இறந்தது என்பது இன்னும் தெரியவில்லை. ஒரே பகுதியில் ஒரு மாத இடைவெளியில் இரண்டு யானைகள் இறந்துள்ளன. இந்த வனப்பகுதியில் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலிருந்து வனக் கொள்ளையர்கள் அடிக்கடி நுழைந்து சுற்றுவதாகத் தகவல்கள் உள்ளன. ஆனால், இதை வனத்துறையினர் கண்டுகொள்வதில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வனக் கொள்ளையர்கள் இந்த யானையைக் கொன்றிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வனத்துறையினர் காட்டுப்பகுதிகளுக்குள் சென்று, வனவிலங்குகளுக்கு ஏற்றவாறு தண்ணீர்த் தொட்டிகள் அமைக்க வேண்டும். தண்ணீர் இல்லாததால்தான் வனவிலங்குகள் வனப்பகுதியைவிட்டு வெளியே வந்து உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட வனத்துறையினர் வனப்பகுதிகளுக்குள் வனவிலங்குகளுக்குத் தேவையான குடிநீர்க் குட்டைகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பேரணாம்பட்டு வனப்பகுதியில் ஒரே மாதத்தில் வெவ்வேறு இடங்களில் இரண்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/media_files/2025/12/02/5-2025-12-02-13-59-35.jpg)